அ.தி.மு.க தலைவர்களுக்கு தொடர்புடைய இடங்களிலெல்லாம் வரிசைக்கட்டி ரெய்டு நடத்தி வருகிறது லஞ்ச ஒழிப்புத்துறை. முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர், வீரமணி, சி.விஜயபாஸ்கரைத் தொடர்ந்து, சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவரும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் வலது கரமுமான இளங்கோவனுக்கு தொடர்புடைய இடங்களில் அதிரடி ரெய்டு நடத்தியிருக்கிறது லஞ்ச ஒழிப்புத்துறை. இந்த திடீர் ரெய்டுக்கு அறிக்கை மூலமாக கண்டனம் தெரிவித்திருக்கும் எடப்பாடி பழனிசாமி, “கழகப் பணிகளையும் தேர்தல் பணிகளையும் சுறுசுறுப்புடன் ஆற்றிவரும் செயல்வீரர் இளங்கோவன் மீது இந்த சோதனை நடத்தப்பட்டது கண்டிக்கத்தக்கது. முதல்வர் ஸ்டாலினின் இந்த பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கு விரைவில் மக்கள் முற்றுப்புள்ளி வைப்பார்கள்” என்று கூறியிருக்கிறார். எடப்பாடி பழனிசாமி பெயரில் மட்டுமே வெளியாகியிருக்கும் இந்த அறிக்கையில்தான் பஞ்சாயத்து நடந்ததாகச் சொல்கிறது அ.தி.மு.க வட்டாரம்.

நம்மிடம் பேசிய அ.தி.மு.க மூத்த நிர்வாகி ஒருவர், “ஆயுர்வேத சிகிச்சைக்காக கோவையில் பன்னீர்செல்வம் முகாமிட்டிருக்கிறார். இந்தச் சூழலில், தனி ஆவர்த்தனமாக கே.பி.முனுசாமி, சி.வி.சண்முகம், வைத்திலிங்கம், தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார் ஆகியரோடு ஆளுநர் ஆர்.என்.ரவியை எடப்பாடி பழனிசாமி சந்தித்ததை பன்னீர் ரசிக்கவில்லை. இந்தச் சந்திப்பு நிகழப் போவதும் அவருக்கு முறைப்படி தெரிவிக்கப்படவில்லை. இதனால் பன்னீர் அப்செட்டில்தான் இருந்தார். இந்த நிலையில்தான், அக்டோபர் 22-ம் தேதி சேலம் இளங்கோவனுக்குத் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியது. இந்த சோதனையைக் கண்டித்து உடனடியாக கட்சியின் சார்பில் அறிக்கை வெளியிட வேண்டுமென்றார் எடப்பாடி. பரபரவென அறிக்கை தயாரிக்கப்பட்டு, கட்சியின் ஒருங்கிணைப்பாளரான பன்னீருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Also Read: எடப்பாடி பழனிசாமி – ஆளுநர் சந்திப்பு: பன்னீர் ஆப்சென்ட்?! திமுக மீதான புகார்கள் ரெடி! பின்னணி என்ன?

அதைப் படித்துப் பார்த்த பன்னீர், ‘என்கிட்ட கேட்டுட்டா கவர்னரைப் பார்க்கப் போனாங்க. இப்ப மட்டும் எதுக்கு என் கையெழுத்து கேட்கறாங்க? எடப்பாடி ஆளுதானே இளங்கோவன். வேணும்னா அவரே கண்டிச்சுக்கட்டும். நான் கையெழுத்துப் போட மாட்டேன்’ என்றுவிட்டார். இந்தத் தகவல் எடப்பாடியின் காதுக்கு எட்டியவுடன், அவர் தன் பங்குக்கு டென்ஷன் ஆகிவிட்டார். ‘அதென்ன என் ஆளு? இளங்கோவன் கட்சிக்காக உழைச்சவர். அவர் மேல ரெய்டு நடத்தப்படும்போது, நாம வாய மூடிட்டு இருக்குறதா? அவர் கையெழுத்தெல்லாம் வேண்டாம். என் பெயர்லயே அறிக்கைப் போகட்டும். கட்சி லெட்டர்பேடிலேயே அதை வெளியிடுங்க’ என்றுவிட்டார்.

எடப்பாடி பழனிசாமி

உடனடியாக, ‘கட்சிக்காகவும், தேர்தலுக்காகவும் பணியாற்றிய செயல்வீரர் இளங்கோவன்’ என்கிற வாசகம் அறிக்கையில் புகுத்தப்பட்டு, எடப்பாடி மட்டும் கையெழுத்திட்டார். வழக்கமாக, எடப்பாடியின் அறிக்கைகள் எல்லாம் ‘எதிர்கட்சித் தலைவர்’ என்கிற அடையாளத்துடன் வெளியாகும். இளங்கோவன் ரெய்டை கண்டித்த அறிக்கை மட்டும், கட்சியின் பெயர் பொறித்த லெட்டர் பேடில் வெளியானது. ‘பன்னீர் தன் வழிக்கு வராவிட்டாலும், கட்சிக்கு நான் தான் தலைவர்’ என்று பஞ்சாயத்தை ஆரம்பித்திருக்கிறார் எடப்பாடி” என்றார் அந்த இரண்டாம்கட்ட தலைவர்.

இளங்கோவன் மீது நடத்தப்பட்ட ரெய்டை எடப்பாடி ஒருபக்கம் கண்டித்துக் கொண்டிருந்த நிலையில், ‘சென்னை உயர்கல்வி மன்ற வளாகத்திலுள்ள ஜெயலலிதாவின் சிலை நல்ல முறையில் பராமரிக்கப்படும்’ என்று முதல்வர் உத்தரவாதம் அளித்ததற்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டார் பன்னீர். இதுவே அ.தி.மு.க-வுக்குள் பல்வேறு முரண்பாடுகள் இருப்பதை பட்டவர்த்தனமாக்கியது. இந்தச் சம்பவங்களால் நொந்து கொண்ட கட்சியின் சீனியர்கள் சிலர், பன்னீரிடமும் எடப்பாடியிடமும் பேசியிருக்கிறார்கள். ‘சசிகலா நம்மிடம் ஒற்றுமை இல்லைனு சொல்ற நேரத்துல, நீங்க இப்படி சண்டை போடுறது நல்லா இருக்குதா?’ என்று கேட்டிருக்கிறார்கள். தலைவர்களுக்குள்ளான சச்சரவை மீடியாக்கள் கையில் எடுப்பதற்கு முன்னதாக இரண்டு பேரின் பெயரிலும் ஒரு அறிக்கை விடும்படி சீனியர்கள் ஆலோசனை வழங்கியிருக்கிறார்கள். அதன்பிறகுதான், கரூரில் நடைபெறவிருந்த மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவர் மறைமுகத் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது தொடர்பாக பன்னீரும், எடப்பாடியும் சேர்ந்தே கையெழுத்திட்டு ஒரு அறிக்கை வெளிவந்திருக்கிறது.

பன்னீர்செல்வம் – எடப்பாடி பழனிசாமி

மழைவிட்டும் தூவானம் விடாத கதையாக, கட்சிக்குள் தான் ஒதுக்கப்படுவது குறித்து ஏக வருத்தத்தில் இருக்கிறார் பன்னீர். ‘அவர் கையெழுத்து போடலனா கட்சி நடக்காதா?’ என்கிற ரேஞ்சுக்கு எடப்பாடி தரப்பும் முறுக்கிக் கொள்ள ஆரம்பித்திருக்கிறது. இது புதிய யுத்தத்திற்கான தொடக்கமா? அல்லது, வழக்கம்போல புஸ்வானம் ஆகிவிடுமா… என்பதெல்லாம் விரைவில் தெரிந்துவிடும்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.