மும்பை மாநகரத்தின் போலீஸ் கமிஷனராக பதவி வகித்த பரம்பீர் சிங் எப்படி மாயமானார் எங்கே இருக்கிறார். என்பது நாட்டின் ஒட்டுமொத்த போலீஸ்துறை மட்டுமல்லாது மகாராஷ்டிரா மற்றும் டெல்லி அரசியல் வட்டாரங்களிலும் தற்போது பரபரப்பாக பேசப்படும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

காணாமல் போனவர்களை போலீசார் தேடுவது சகஜம்; ஆனால் ஒரு போலீஸ் அதிகாரி காணவில்லை என தேடப்படுவது சாதாரண விஷயமல்ல. அதிலும் தேடப்படுபவர் ஒரு மாநகரத்தின் போலீஸ் கமிஷனராக இருந்தவர் என்பது பெரிய அதிர்ச்சி. மும்பை மாநகரத்தின் போலீஸ் கமிஷனராக பதவி வகித்த பரம்பீர் சிங் எப்படி மாயமானார் மற்றும் எங்கே இருக்கிறார் என்பது நாட்டின் ஒட்டுமொத்த போலீஸ்துறை மட்டுமல்லாது மகாராஷ்டிரா மற்றும் டெல்லி அரசியல் வட்டாரங்களிலும் தற்போது பரபரப்பாக பேசப்படும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

image

பரம்பீர் வெளிநாட்டுக்கு தப்பி விட்டார் என்றும் சண்டிகர் நகரில் தலைமறைவாகி விட்டார் என்றும் பல்வேறுவிதமான வதந்திகள் தினசரி மத்திய உள்துறை அமைச்சகத்தில் இருந்து மகாராஷ்டிரா தலைமைச் செயலகம் வரை பல்வேறு வட்டாரங்களில் பரவி வருகின்றன. பலமுறை அவருக்கு சம்மன் அனுப்பப்படும், பரம்பீர் ஆஜராகவில்லை. அவகாசம் கோரி அவர் தரப்பில் மனு எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர், அதுவும் மிகப் பிரபலமானவர், எப்படி மாயமானார்? எங்கேதான் போனார்? இந்தக் கேள்விக்கு பதில் தெரியாமல் உளவுத்துறை உட்பட அனைவரும் திணறி வருகிறார்கள்.

பரம்பீர் சிங் தலைமறைவாக அதற்கு முன்பு நடந்த விஷயங்கள் பரப்பரப்பானவை. இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபரான முகேஷ் அம்பானியின் இல்லத்தருகே பிப்ரவரி 22ஆம் தேதி வெடி பொருளுடன் வாகனம் ஒன்று பிடிக்கப்பட்டது. அது தொடர்பான விசாரணை தொடங்கிய பிறகுதான் பல பரபரப்பு தகவல்கள் ஒன்றன்பின் ஒன்றாக சரவெடி போல் வெடித்து மகாராஷ்டிரா அரசியலையே கலக்கின. சச்சின் வாஸ் என்கிற சர்ச்சைக்குரிய போலீஸ் அதிகாரி வெடி மருந்துடன் கூடிய வாகனத்தை அங்கே நிறுத்தினார் என்பதும் சமீபத்தில் அந்த வாகனத்தின் உரிமையாளர் கொலை செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்தது.

image

சச்சின் வாஸ் சிறையில் அடைக்கப்பட்டபின், அப்போது போலீஸ் கமிஷனர் பதவியில் இருந்து பின்னர் “ஹோம் கார்டு” தலைமை பதவிக்கு மாற்றப்பட்ட பரம்பீர் சிங மிகப்பெரிய குட்டு ஒன்றை அணுகுண்டு போல் போட்டுடைத்தார். அப்போது மகாராஷ்டிர மாநிலத்தின் உள்துறை அமைச்சராக இருந்த அணில் தேஷ்முக் ஒவ்வொரு மாதமும் 100 கோடி ரூபாய் “வசூல் வேட்டை” நடத்த உத்தரவிட்டு சச்சின் வாஸ் அதை செய்து முடிக்க நேரடியாக தொடர்பில் இருந்தார் என்பதுதான் அந்தக் குற்றச்சாட்டு.

வானளாவிய அதிகாரம் அளிக்கப்பட்டு, சச்சின் வாஸ் முதல்வர் வரை அனைவரையும் நேரில் தொடர்பு கொள்ளக் கூடிய சக்தியாக விளங்கினார் என்ற அதிர்ச்சி தகவல் மகாராஷ்டிர அரசியலில் சூறாவளியை உண்டாக்கியது. சிவசேனா கட்சியுடன் நெருங்கிய தொடர்புடையவர் சச்சின் வாஸ் என்பதும் மகா விகாஸ் அகாடி அரசு ஆட்சிக்கு வரும் முன் அவர் இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தார் என்பதும் பரபரப்பாக பேசப்பட்டது.

அணில் தேஷ்முக் வேறுவழியின்றி பதவி விலக, திலீப் பாட்டில் உள்துறை அமைச்சராக பதவியேற்றார். இதற்கிடையே பரம்பீர் சிங் முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுக்கு விரிவான கடிதம் எழுதி தனது குற்றச்சாட்டுகளை விளக்கியிருந்தார். இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றம் வரை செல்ல, மகாராஷ்டிரா அரசு விசாரணைக்கு உத்தரவிட்டது. நீதிபதி சந்திவாஸ் விசாரணை கமிஷன் பரம்பீர் சிங் ஆஜராகி தனது வாக்குமூலத்தை பதிவுசெய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்த போதுதான், மீண்டும் ஒரு புதிய திருப்பம் நேரிட்டது.

பரம்பீர் சிங் மாயமாகிவிட்டார் என்பதுதான் அந்த புதிய அதிர்ச்சி. பலமுறை சம்மன் அனுப்பப்படும் இதுவரை முன்னாள் மும்பை போலீஸ் கமிஷனர் ஆஜராகாமல் இருப்பது வழக்கை மிகப் பெரிய மர்மம் என்ற பட்டத்துடன் மேலும் பரபரப்பாகி வட்டது. தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் முன்பு ஏப்ரல் 7 ஆம் தேதி பரம்பீர் ஆஜரானார். “ஹோம் கார்டு” தலைமை அதிகாரியாக பதவியேற்ற பிறகு, அவர் மே 5-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 29-ஆம் தேதி வரை விடுப்பு கூறியிருந்தார். அந்த விடுப்பு முடிந்த பின்னரும் அவர் இதுவரை பணிக்கு திரும்பவில்லை.

image

மகாராஷ்டிர அரசு மற்றும் அணில் தேஷ்முக்கின் தேசியவாத காங்கிரஸ் கட்சி தன்னை பழிவாங்கும் என அஞ்சி பரம்பீர் தலைமறைவாகி விட்டதாக ஒரு சாரார் கருதுகிறார்கள். அவருக்கு எதிராக 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். பண வசூல் செய்ததாக இரண்டு வழக்குகள் மற்றும் விசாரணையில் தலையீடு செய்ததாக மகாராஷ்டிரா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் தாக்கல் செய்த வழக்குகள் இதில் அடக்கம். உளவுத்துறை பரம்பீர் எங்கே இருக்கிறார் என்பதை கண்டறிய, மகாராஷ்டிரா தொடங்கி பஞ்சாப் மற்றும் ஹரியானா உள்ளிட்ட பல இடங்களில் அவரை தேடி வருகிறது.

ஒருவேளை அவர் வெளிநாடு சென்றிருந்தால் அது விதிகளுக்குப் புறம்பானது என்பது குறிப்பிடத்தக்கது. ஐபிஎஸ் அதிகாரிகள் அரசின் அனுமதியின்றி வெளிநாடு செல்ல முடியாது என வல்லுனர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். மேலும் முன்னாள் மும்பை போலீஸ் கமிஷனர் போலி பாஸ்போர்ட் பயன்படுத்தி வெளிநாட்டுக்கு தப்பி விட்டார் என்பது மிகவும் அதிர்ச்சிக்குரிய விஷயமாக கருதப்படுகிறது. பரம்பீர் அல்லது அவரது தரப்பில் வேறு யாரேனும் உண்மைகளை வெளிக்கொண்டுவரும் வரை மர்மம் தொடரும் என்பதில் சந்தேகமில்லை.

— கணபதி சுப்ரமணியம்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.