நடிகை சமந்தா, நாக சைதன்யா விவாகரத்தை முன்வைத்து எழுந்திருக்கும் விமர்சனங்கள், பெண்கள் வளர்வதை ஆண்கள் விரும்பவில்லையா எனும் கேள்வியை எழுப்புவதாக கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. இதுகுறித்து உளவியல் ரீதியிலான விளக்கங்களை இங்கு விரிவாக பார்க்கலாம்.

34 வயதுக்குள் உச்சம் தொட்ட சமந்தா

கல்லூரி காலங்களில் படிப்பில் டாப்பர். 15 வயதிலிருந்தே மாடலிங் துறையில் சேர்ந்து உழைப்பு. தெலுங்கு, தமிழ் திரையுலகில் புகழ்பெற்ற கதாநாயகிகளில் ஒருவர். 4 ஃபிலிம்ஃபேர் விருதுகள், 2 நந்தி விருதுகள் 6 சர்வதேச திரைப்பட விருதுகள். ஓடிடி தளத்திலும் ஜொலிப்பு. பிரபல இணையவழி ஆடை பிராண்டின் நிறுவனர், பல தனியார் தொண்டு நிறுவனங்களோடு இணைந்து பெண்கள் குழந்தைகளுக்கான கல்வி மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு மற்றும் சேவை. இப்படி பன்முகப் பிரபலமாக திகழ்பவர் நடிகை சமந்தா. 34 வயதுக்குள்ளாக இவை அனைத்தையும் அடைந்தவர் அவர்.

தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகரான நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை கடந்த 2017ஆம் ஆண்டு காதல் மணம் செய்து கொண்டார் சமந்தா. பல்வேறு கனவுகளோடு மணவாழ்க்கையை தொடங்கிய இருவரும் சில நாட்களுக்கு முன்பு தங்கள் விவாகரத்தை அதிகாரப்பூர்வமாக சமூக வலைதளங்களில் அறிவித்தனர். பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அதிகமாக ஆராய்வதும் பேசுவதும் நம் சமூகத்திற்கு புதிதல்ல என்றாலும் சமந்தா விஷயத்தில் அவர் எதிர்கொண்டு வரும் உளவியல்ரீதியான தாக்குதல்கள் ஏராளம்.

’துவண்டுவிட மாட்டேன்’ – சமந்தா

“விவாகரத்து என்பதே தன்னளவிலேயே ஒரு வலிமிக்க நிகழ்வு. அதற்குமேல் ‘நான் கருக்கலைப்பு செய்துகொண்டேன், வேறு தொடர்புகளில் இருந்தேன், குழந்தையே வேண்டாம் என்றேன், சந்தர்ப்பவாதியாக இருந்தேன்’ என்றெல்லாம் வதந்திகளைப் பரப்புவது இரக்கமற்றது என வேதனையுடன் கூறியிருக்கிறார் சமந்தா. இந்த வார்த்தைகளெல்லாம் என்னை துவண்டுவிடச்செய்ய நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்!” என்று இன்ஸ்டாகிராமில் சமந்தா பதிவிட்டிருக்கும் வார்த்தைகளுக்கு பின்னால் அவர் எதிர்கொண்ட வசைச் சொற்கள் வரிசைகட்டி நிற்கின்றன.

image

சமந்தாவை தொடர்ந்து வசைபாடும் நெட்டிசன்கள் யாரும், இதுவரை நாக சைதன்யாவையோ, அவரது தனிப்பட்ட விவகாரங்கள் குறித்தோ எந்த கேள்வியும் எழுப்பவில்லை. விவாகரத்து என்பது ஒரு தம்பதிக்குள்ளான தனிப்பட்ட விஷயம் என்றாலும் வார்த்தை தாக்குதல்களுக்கும் விமர்சனங்களுக்கும் ஆளாவது என்னவோ பெண்கள் மட்டும்தான் என்பது சமந்தாவின் விஷயத்திலும் நிதர்சனமாகியுள்ளது. புகழ்பெற்ற பெரும் குடும்பத்தில் மருமகள் ஆகிவிட்ட காரணத்தினால் தனது திறமையையோ, கனவுகளையோ, தனித்துவத்தையோ, லட்சியங்களையோ, துறக்கவேண்டிய அவசியம் ஒரு பெண்ணுக்கு உள்ளதா? அப்படி தனது சொந்த விவகாரங்களில் தானே முடிவெடுக்கும் பெண்கள் சமூகத்தினால் தொடர்ந்து வசை பாடப்படுவது ஏன்? இது பெண்களின் வளர்ச்சியை ஜீரணித்துக் கொள்ள முடியாததன் பிரதிபலிப்பா? இப்படி நெடுங்காலமாக கேட்கப்படும் கேள்விகளுக்கு இந்த சமூகம் இனியாவது விடைகாண முயற்சிக்க வேண்டும்.

பெண் என்பதால் சமந்தா மீது விமர்சனங்களா? 

புதிய தலைமுறையின் 360 டிகிரி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண்ணிய செயற்பாட்டாளர் ஓவியா அன்புமணி இதை உளவியல் ரீதியாக விளக்குகிறார் ‘’விவாகரத்து என்பது நாம் பரவலாக பார்த்துக்கொண்டிருக்கக்கூடிய விஷயம்தான். ஆனால் சமந்தா நடிகை என்பதால் அதிகமாகப் பேசப்படுகிறது. திருமணமானாலும், காதலானாலும், அதிலிருந்து விடுதலை பெற நினைக்கும்பட்சத்தில் அந்த முடிவை பெண் எடுக்கவே கூடாது; அந்த முடிவை ஆண்தான் எடுக்கவேண்டும் என்றேநமது சமூக கட்டமைப்பு கூறுகிறது. அதாவது ஓர் ஆணாதிக்க சமூகத்தில்தான் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். தனது திருமண வாழ்க்கையில் விருப்பமில்லாதபோது ஒரு பெண் தனிப்பட்ட முறையில் விவாகரத்து குறித்து பேசி, தனிப்பட்ட விருப்பமாக முடிவெடுக்கின்றனர்.

image

முதலாவது அவர்களுடைய தனிப்பட்ட விருப்பத்தில் தலையிடுவதே தேவையில்லாத விஷயம்தான். தலையிடுவதையும் தாண்டி, இந்த பெண் எதற்காக விவாகரத்து செய்கிறாள்? நடிப்பதற்கு தடையாக இருக்கிறதா? அல்லது கவர்ச்சியாக நடிப்பதற்கு தடையாக இருக்கிறதா? அல்லது வேறு உறவா? அல்லது வேறு காரணங்களா? என பல தாக்குதல்களை பெண்மீது வீசுகிறார்களே தவிர, அந்த ஆணை விவாகரத்துக்கான காரணம் குறித்து கேள்வி கேட்பது இல்லை. இங்கு எதிர்பார்ப்பு என்னவென்றால், என்ன காரணங்களாக இருந்தாலும் ஒரு பெண் அந்த குடும்பத்தில்தான் இருந்தாகவேண்டும் என்றே இந்த சமூகம் எதிர்பார்க்கிறது.

இதுவே ஒரு பெண் தனது வேலை அல்லது நடிப்பில் அடுத்தகட்டத்திற்கு நகரவேண்டும் என்று தனது தனிப்பட்ட விருப்பம் குறித்த முடிவுகளை எடுக்கவேகூடாது; அப்படி முடிவெடுத்துவிட்டால் உடனடியாக அவரது நடத்தைசார்ந்த விமர்சனங்களை முன்வைக்க தொடங்கிவிடுகிறது சமூகம். அதுவே ஒரு ஆண் இந்த முடிவை எடுத்தாலும்கூட 90% கேள்விகள் அந்த பெண்ணை நோக்கித்தான் வீசப்படுகிறது. சமந்தா விஷயத்தில் சைதன்யாவே விவாகரத்து குறித்து அறிவித்திருந்தாலும், ’காதலித்து திருமணம் செய்திருக்கிறார். அவர் எப்படி இந்த முடிவை எடுப்பார். அந்த பெண்தான் இதற்கு காரணமாக இருந்திருப்பார்’ என்று பேசியிருப்பார்கள். ஒரு ஆண் எப்போதும் அனுசரித்துத்தான் போவான், எவ்வளவு கஷ்டத்தை அனுபவித்து இருந்தால் கடைசியாக இந்த முடிவை எடுத்திருப்பான் என்று ஆணுக்கே சாதகமாக பேசியிருப்பார்கள். ஏனென்றால் சமூகத்தில் பெரும்பாலானோரின் எண்ணமே விவாகரத்துதான் வாழ்க்கையின் கடைசி முடிவு என்பதுதான். திருமணம் என்பது ஒருவரின் தனிப்பட்ட விருப்பம்தான். அதேபோலத்தான் விவாகரத்து என்பதும் ஒருவரின் தனிப்பட்ட விருப்பமே. ஒருவருக்கு மன உளைச்சலை கொடுக்கும் அளவிற்கு விமர்சனங்களை முன்வைக்க வேண்டிய அவசியமே கிடையாது.

ஒரு பெண்ணும் விவாகரத்து என்ற முடிவை உடனடியாக எடுத்திருக்க மாட்டார். அதற்குமுன்பு அவரும் உளவியல்ரீதியாக எவ்வளவு பாதிக்கப்பட்டிருப்பார், என்னென்ன மாதிரியான பிரச்னைகள் இருக்கலாம் என்பதை யோசிக்கவேண்டும். ஆனால் சமூகத்தில் பெரும்பாலானோர் இதுபற்றி சற்றும் யோசிக்காமல், ஒரு பெண் எப்படி இந்த முடிவை எடுக்கலாம் என்பதே ஒட்டுமொத்த சமூகத்தின் வெளிப்பாடாக இருக்கிறதை நம்மால் பார்க்கமுடிகிறது.

image

விவாகரத்தைப் பொருத்தவரை ஆணிடம்தான் குறை இருக்கிறது அல்லது பெண்ணிடம்தான் குறை இருக்கிறது என ஒருவரையே குற்றப்படுத்தமுடியாது. விவாரத்துக்கான காரணங்கள் இருவரில் ஒருவரிடம் மட்டும் இருக்கலாம் அல்லது இருவரும் நம் வாழ்க்கையை வேறுவிதத்தில் அமைத்துக்கொள்ளலாம் என அவர்களுக்குள் பேசி முடிவெடுத்து இருக்கலாம். அதற்கான அனைத்து காரணங்களும் வெளிப்படையாக தெரியப்போவது இல்லை.

இதுவே குழந்தை இருக்கும் பட்சத்தில், வேலை இல்லாமல் வருமானத்திற்கு ஆணை சார்ந்திருக்கும் பட்சத்தில், மறுதிருமணம் செய்ய முடிவெடுக்கும் பட்சத்தில் அந்த பெண்தான் அதிக பாதிப்புக்குள்ளாகிறார். வெளியே பேசப்படுகிற விவாகரத்துகளைவிட வெளியே வராத மணமுறிவுகள் இங்கு நிறையவே இருக்கிறது. குடும்ப சூழல் காரணமாக நிறையப்பேர் வெளியே சொல்லாமலேயே இருக்கின்றனர். இந்த சிக்கல் ஆண்களைவிட பெண்களுக்குத்தான் அதிகமாக இருக்கிறது. ஒரு ஆண் மறுமணம் செய்யும்போது வேறுவிதமாக பார்க்கும் சமூகம் ஒரு பெண் மறுமணம் செய்யும்போது வேறுவிதமாகத்தான் அணுகுகிறது. இதனாலேயே நிறையப்பெண்கள் சகிப்புத்தன்மையுடன் வாழ்ந்துவருகின்றனர்.

“அரங்கம் முழுக்க தெறிக்க தெறிக்க..” – அக்.14இல் ’அண்ணாத்த’ டீசர் வெளியீடு 

ஒருகட்டத்தில் சட்டரீதியாக அணுகினாலும், ஜீவனாம்சம் பெற என்னசெய்யவேண்டும் என்பது பலரின் கேள்வியாகவே இருக்கிறது. சமந்தா விஷயத்தில் அவருக்கு பொருளாதாரீதியான தேவை இல்லை என்றாலும், சமூகத்தில் பல பெண்களுக்கு வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளுக்கே ஜீவனாம்சம் என்பது தேவையான ஒன்றாக இருக்கிறது. ஆனால் இது பலருக்கும் சாத்தியமாவதில்லை’’ என்கிறார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.