லக்கிம்பூர் கெரியில் விவசாயிகள் போராடிய போது அவர்கள் மீது கார்கள் வரிசையாக ஏறிச்செல்லும் அதிர்ச்சி வீடியோவை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.
 
மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் குமார் மிஸ்ராவின் சொந்த ஊர், உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்கிம்பூர் கேரிக்கு அருகே உள்ள திக்குனியா ஆகும். அங்கு நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சி ஒன்றுக்கு மாநில துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா சிறப்பு விருந்தினராக பங்கேற்க இருந்தார். இதனையறிந்த விவசாயிகள் சங்கத்தினர், புதிய வேளாண் சட்டங்களை ரத்துச் செய்யக்கோரி அவருக்கு கருப்புக் கொடி காட்ட திரண்டனர். அப்போது மத்திய அமைச்சரின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா துணை முதல்வரை வரவேற்க தனது காரில் சென்றுள்ளார். அவரது காரையும் மறித்து காரின் முன் திரண்டு விவசாயிகள் கோஷங்கள் எழுப்பியதாக கூறப்படுகிறது.
 
image
அப்போது அவர்களை இடித்து தள்ளியபடி அங்கிருந்து காரை ஆஷிஷ் மிஸ்ரா எடுத்துச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இதில் விவசாயிகள் 4 பேர் உயிரிழந்ததாக சம்யுக்தா கிசான் மோர்ச்சா என்கிற விவசாய அமைப்பு தெரிவித்தது. இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் ஆஷிஷ் மிஸ்ராவின் காரை அடித்து நொறுக்கியதோடு தீயிட்டு கொளுத்தினர். இச்சம்பவத்தால் லக்கிம்பூரில் கடும் பதற்றம் நிலவியது. இதையடுத்து அங்கு காவல் துறையினர் குவிக்கப்பட்டு போராட்டக்காரர்களை கலைத்தபோது வன்முறை வெடித்தது. இந்த சம்பவத்தில் லக்கிம்பூரில் கார் மோதி 4 விவசாயிகளும், தொடர்ந்து நடைபெற்ற வன்முறை மோதலில் 4 பேரும் என மொத்தம் 8 பேர் உயிரிழந்ததாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
 
இந்நிலையில் இந்தச் சம்பவம் தொடர்பாக மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா உள்பட 14 பேர் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அஜய் மிஸ்ரா மகன் ஆஷிஸ் மிஸ்ரா மகன் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே சம்பவம் நடந்த இடத்தில் தனது மகன் இல்லை என்பதற்கான விடியோ ஆதாரம் உள்ளது என்று மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா கூறினார். இச்சம்பவம் குறித்து உரிய முறையில் விசாரணை நடத்தப்படும் என்று உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உறுதியளித்தார்.
 
image
இந்தநிலையில், கருப்புக் கொடி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது அமைச்சருடன் வந்த கார்கள் மோதும் வீடியோவை காங்கிரஸ் அதன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் சாலையில் நிற்கும் விவசாயிகள் பின்புறம் வழியாக வேகமாக வரும் கார் அவர்கள் மீது ஏற்றிவிட்டு நிறுத்தாமல் செல்கிறது. தொடர்ச்சியாக இரண்டு கார்கள் அதேபோல செல்கின்றன. இந்த வீடியோவை ட்விட்டரில் பலரும் பகிர்ந்து வருகின்றனர். அந்த வீடியோ பார்ப்பவர்களைப் பதறச் செய்யும் வகையில் உள்ளது.


 
இதனிடையே, உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும், ரூ.45 லட்சம் இழப்பீடு தொகையும் வழங்குவதாக அம்மாநில அரசு உறுதி அளித்துள்ளது. மேலும், ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் லக்கிம்பூர் வன்முறை சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது. மாநில அரசு உறுதியளித்ததை தொடர்ந்து, விவசாயிகள் தங்களது போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர்.
 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.