காந்தி ஜெயந்தியான இன்று மதுரை மாவட்டம் பாப்பாபட்டி கிராம சபை கூட்டத்தில் கலந்து கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை மதுரை வந்தார்.

மகாத்மா காந்தி அரையாடை அணிந்த இடத்தில்

பட்டியல் சமூகத்தினருக்கு ஒதுக்கப்பட்ட உசிலம்பட்டி அருகிலுள்ள பாப்பாபட்டி ஊராட்சியில், ஒரு தரப்பு மக்களின் எதிர்ப்பினால் நீண்டகாலம் உள்ளாட்சித் தேர்தல் நடத்த முடியாமல் இருந்த நிலையில் கடந்த 2006-ம் ஆண்டு திமுக ஆட்சியில் வெற்றிகரமாக தேர்தல் நடத்தப்பட்டது.

மு.க.ஸ்டாலின் முதலமைச்சரான பின்பு காந்தி ஜெயந்தியன்று நடைபெறும் கிராமசபை கூட்டத்தில் கலந்துகொள்ள பாப்பாபட்டியை தேர்வு செய்தார் ஸ்டாலின். இதனால் மதுரை மாவட்ட கட்சியினர் மகிழ்ச்சி அடைந்தனர். இன்று காலை பாப்பாபட்டிக்கு வருகை தந்து மக்களுடன் உரையாடினார்.

காந்தி சிலைக்கு மரியாதை

இந்த கூட்டத்தில் பேசிய பொதுமக்கள், ஊராட்சித் தேர்தல் நடத்த காரணமான அப்போது மதுரை கலெக்டராக இருந்த உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ்ஸை பாராட்டிப் பேசியதுடன், செயல்பாட்டுக்கு வந்துள்ள 58-ம் கல்வாயில் வைகை தண்ணீர் வர ஏற்பாடு செய்ய வேண்டும், திருமங்கலம் பிரதானக் கால்வாயில் கிளைக்கால்வாய் உருவாக்கி இப்பகுதி விவசாயிகளின் பிரச்னையை தீர்க்க வேண்டும், பாப்பாபட்டியை அரசு தத்தெடுத்து சிறப்பு திட்டங்களை கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

மக்களுடன் கலந்துரையாடிய பின் உரையாற்றி மு.க.ஸ்டாலின் “பாப்பாபட்டி மக்களை பார்ப்பதில் எனக்கு மகிழ்ச்சி. உங்களால் போற்றப்படும் உதயச்சந்திரன் எனக்கு தனிச்செயலாளராக உள்ளார்.

வயலில் வேலை செய்யும் பெண்களளுடன் உரையாடல்

கொரோனா பாதிப்பால் இரு ஆண்டுகளாக கிராம சபை கூட்டம் நடைபெறவில்லை. இந்த கிராம சபை கூட்டத்தில் கலந்துகொண்டது பெருமை அளிக்கிறது. இந்தியா கிராமங்களில் இருந்து உருவாகிறது,

நாட்டையே கிராம ராஜ்யமாக மாற்ற விரும்பியவர் மகாத்மா காந்தி. இதுபோன்ற கிராமங்கள் நிறைந்த மதுரை மண்ணை மறக்க முடியாது.

மதுரை மண் மகாத்மாவால் மறக்க முடியாத மண். தென் ஆப்ரிக்காவில் கோட் சூட் போட்டுக்கொண்டு வழக்கறிஞராக இருந்த மகாத்மாவை அரையாடை அண்ணலாக மாற்றியது மதுரை. அவர் பிறந்த நாளில் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

கட்சி நிர்வாகிகளின் வரவேற்பு

நான் முதல்வர் என்ற முறையில் பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டாலும், அங்கு கிடைக்காத மகிழ்ச்சி, இங்கு நடைபெறும் கிராம சபையில் கலந்துகொள்வதில் ஏற்படுகிறது.

பாப்பாபட்டி போல எல்லா கிராமங்களும் நம்ம கிராமம்தான். எல்லா மக்களும் நம் மக்கள்தான். இது என் ஆட்சி அல்ல. உங்கள் ஆட்சி.

2006 -ம் ஆண்டில் ஜனநாயகத்தை வலுப்படுத்த தேர்தலை நடத்தியே ஆக வேண்டும் என்ற முயற்சியில் திமுக ஆட்சியில் தேர்தல் நடத்தப்பட்டது. கலைஞர் முதல்வராகவும், நான் உள்ளாட்சித்துறை அமைச்சராகவும் இருந்தேன்.

கிராம சபையில்

மதுரை மாவட்டத்தில் பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம், விருதுநகர் மாவட்டத்தில் கொட்டாக்காச்சியேந்தலில் நடத்த முடியாத ஊராட்சித் தேர்தலை எப்படியாவது நடத்தி ஆக வேண்டுமென்று முடிவு செய்தோம்.

அரசு செயலாளரான அசோக்வர்தன் ஷெட்டி, அப்போது மதுரை கலெக்டர் உதயச்சந்திரன் ஆகிய இருவரும் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் கிராமத்தினரைச் சந்தித்து பேசி தேர்தல் நடத்தப்பட்டது

இங்கு தேர்தல் நடத்தப்பட்டதை எண்ணி கலைஞர் மகிழ்ச்சி அடைந்தார். அதன்பின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு சென்னையில் சமத்துவ பெருவிழா நடத்தி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

சமத்துவ பெரியார் கலைஞர் என்ற பட்டத்தை திருமாவளவன் வழங்கினார். பாப்பாபட்டி ஊராட்சி வளர்ச்சிக்கு அரசு சார்பில் 80 லட்சம் ரூபாயும், திமுக சார்பில் 20 லட்சம் ரூபாயும் வழங்கப்பட்டது.

கலந்துகொண்ட மக்கள்

தமிழகத்தின் எத்தனையோ ஊராட்சிகளில் கிராம சபை நடந்தாலும் நான் பாப்பாபட்டியை தேடி வர இதுவே காரணம். சமத்துவம் தான் வளர்ச்சிக்கு அடிப்படைக் காரணம் என்றார் கலைஞர். கிராமங்களில் இருந்துதான் ஜனநாயகம் பிறக்கிறது.

தேர்தல் நேரத்தில் நாங்கள் அளித்த 505 வாக்குறுதிகளில் 202 வாக்குறுதிகள் நிறைவேற்றியுள்ளோம். இதில், சொன்னதும் சொல்லாததும் நிறைவேற்றப்பட்டுள்ளது. மீதியுள்ள வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவது எங்களின் கடமை. இது சாமனிய மக்களுக்காக நடத்தப்படும் ஆட்சி.

கிராம சபையில்

வேளாண்துறைக்கு தனி பட்ஜெட் முதன்முறையாக தாக்கல் செய்யப்பட்டது. ஏழை பணக்காரன், கிராமம், நகரம் வட மாவட்டம், தென்மாவட்டம் என வேற்றுமையின்றி செயல்படுவோம். நீங்கள் வைத்த கோரிக்கை அனைத்தும் நிறைவேற்றப் படும்.

இது கிராம சபை போல் இல்லாமல் பொதுக்கூட்டம் போல் அமைந்துள்ளது. இந்தியாவின் தலைசிறந்த முதலமைச்சர் என்ற விருது எனக்கு அளிக்கப்பட்டது. ஆனால், இந்தியாவின் முதல் மாநிலம் தமிழகம்தான் என்ற பெருமைதான் எனக்கு மகிழ்ச்சி ” என்றார்.

பின்பு நலத்திட்ட உதவிகளை வழங்கிவிட்டு கிளம்பியவர், மதுரை மேலமாசி வீதியில் காந்தி அரையாடை அணிந்த வீட்டுக்கு வருகை தந்து காந்தியடிகளின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.