அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸை சந்தித்த பிரதமர் மோடி இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
 
அமெரிக்கா சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டின் துணை அதிபர் கமலா ஹாரிஸை சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது சர்வதேச விவகாரங்கள், பிராந்திய வளர்ச்சிகள், சுகாதாரம், சிக்கலான தொழில்நுட்பங்கள், கல்வி ஆகியவை குறித்து இருவரும் விவாதித்ததாக வெளியுறவுத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர், இரு நாட்டு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
 
அப்போது பேசிய பிரதமர் மோடி, அமெரிக்காவின் துணை அதிபராக கமலா ஹாரிஸ் தேர்வானது வரலாற்று சிறப்பு வாய்ந்தது என பாராட்டினார். உலகம் முழுவதும் பலருக்கு கமலா ஹாரிஸ் உந்து சக்தியாக திகழ்கிறார் என்றும் புகழாரம் சூட்டினார். பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் தலைமையில் இந்திய, அமெரிக்க உறவு நிச்சயம் புதிய உயரத்தை அடையும் என தாம் நம்புவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார். மேலும், அவர் விரைவில் இந்தியாவுக்கு வர வேண்டும் எனவும் பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.
 
image
இதைத் தொடர்ந்து பேசிய கமலா ஹாரிஸ், உலகம் முழுவதும் கொரோனா பரவத் தொடங்கியபோது, பிற நாடுகளுக்கு தடுப்பூசி வழங்குவதற்கான மூல ஆதாரமாக இந்தியா விளங்கியதாக பாராட்டினார். அதே போல் கொரோனாவால் இந்தியா பாதிக்கப்பட்டபோது, மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான பொறுப்பை உணர்ந்து அமெரிக்கா உதவியதை பெருமையாக கருதுவதாகவும் கமலா ஹாரிஸ் தெரிவித்தார். இந்தியாவில் தினமும் லட்சக்கணக்கானோருக்கு தடுப்பூசி செலுத்தி வரும் நிலையில், பிற நாடுகளுக்கும் தடுப்பூசியை ஏற்றுமதி செய்ய முன் வந்திருப்பது வரவேற்கத்தக்கது என்றும் கமலா ஹாரிஸ் கூறினார்.
 
முன்னதாக வெள்ளை மாளிகையில், இருவரும் நடந்தபடியே சர்வதேச விவகாரங்கள் குறித்து பேசினர். கமலா ஹாரிஸூடனான சந்திப்புக்கு முன், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசனுடன், இரு நாட்டுக்கு இடையே பொருளாதாரம் மற்றும் மக்கள் தொடர்பில் ஆழமான உறவை வலுப்படுத்துவது குறித்து, பிரதமர் மோடி விவாதித்தார். அதே போல், ஜப்பான் பிரதமர் யோஷிடே சுகாவையும் பிரதமர் மோடி தனியே சந்தித்து பிராந்திய உறவுகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.