இலங்கை அகதிகள் முகாமை இனிமேல் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் என பெயர் மாற்றம் செய்வதாக நடப்பு சட்டமன்ற கூட்டத் தொடரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். ஆனாலும் முகாம்களில் வாழும் தமிழர்களின் நிலையில் மாற்றம் ஏற்படவில்லை என்கிற ஏக்கம் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது.

காவல்துறையினரிடம் வாக்குவாதம்

இந்த நிலையில், நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலில் இலங்கைத் தமிழர் ஒருவர் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.அவர், ‘நான் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து என்னுடைய குறைகளைச் சொல்ல வேண்டும்’ என்று சொல்லிக் கொண்டிருந்தார். ஆனால் வரை காவல்துறையினர் உள்ளே செல்ல அனுமதிக்க மறுத்ததால் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளைஞரிடம் பேசியபோது, “என் பெயர் விஜய் அஜய்குமார். இலங்கைத் தமிழர். எனக்கு இப்போது 32 வயதாகிறது. நான் 10 வயதாக இருந்தபோது இலங்கையில் வன்முறை வெடித்ததால் அறியாத வயதில் எப்படியோ யாருடனோ சேர்ந்து படகு மூலம் தமிழகத்துக்கு வந்து விட்டேன்.

பெற்றோரைப் பிரிந்த ஏக்கத்தில் விஜய் அஜய்குமார்

இங்கே என்னை ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் முகாமில் அடைத்தார்கள். என்னுடைய உறவினர் யாருமே இல்லாமல் கடந்த 22 வருடங்களாக நான் அங்கேயே தங்கியிருக்கிறேன். எனக்கு இந்தியாவில் எந்த உரிமையும் கிடையாது. அடையாள அட்டை கூட கிடையாது. அதே சமயம் என்னால் இலங்கைக்கும் செல்ல முடியவில்லை. அதனால் குடும்பத்தைப் பிரிந்து தவித்து வருகிறேன்.

எனக்கு என்னுடைய பெற்றோரைப் பார்க்க வேண்டும் என்கிற விருப்பம் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. அதனால் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மண்டபம் முகாமில் இருந்து வெளியேறி நாகர்கோவிலுக்கு வந்துவிட்டேன். அங்கு வைத்து என்னைக் கைது செய்து மண்டபம் முகாமில் மீண்டும் அடைத்து விட்டார்கள்.

ஆட்சியரைச் சந்திக்க அனுமதி மறுப்பு

என்னை சொந்த ஊருக்கு அனுப்ப வேண்டும் என்பதை அதிகாரிகளிடம் பலமுறை வலியுறுத்தியும் யாருமே எனக்கு உதவி செய்யவில்லை. அதனால் இப்போதும் முகாமில் இருந்து வெளியேறி இங்கே வந்துவிட்டேன். அதற்காக என்னை மறுபடியும் கைது செய்யக்கூடும். நான் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்தால் என் பிரச்னையை அவரிடம் எடுத்துச் சொல்லி உதவி கேட்க முடியும். ஆனால் காவல்துறையினர் என்னை ஆட்சியரைச் சந்திக்க அனுமதிக்க மறுக்கிறார்கள்” என்று தெரிவித்தார்.

இலங்கைத் தமிழர் அஜய் விஜய்குமாரின் கோரிக்கைகளை மனுவாக எழுதச் சொல்லிய காவல்துறையினர் அதை ஆட்சியரிடம் சேர்ப்பித்தனர்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.