தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாம் மூலம் ஒரே நாளில் 28.36 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மொத்தம் 43,000-க்கும் மேற்பட்ட இடங்களில் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டன. இந்த முகாம்கள் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்பட்டன. முன்னதாக, இன்றைய சிறப்பு தடுப்பூசி முகாமின் மூலம் 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. இதற்காக, மக்கள்நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மத்திய அரசிடம் கூடுதலாக ஒரு கோடி தடுப்பூசிகள் வழங்கக் கோரி கடந்த செவ்வாய் அன்று கடிதம் எழுதியிருந்தார்.

மெகா தடுப்பூசி முகாம்

Also Read: மெகா தடுப்பூசி முகாம்: `தங்கக்காசு, ஹெட்போன், சேலை பரிசாக வழங்கப்படும்!’- மக்களை ஈர்க்க புது முயற்சி

இந்த மெகா தடுப்பூசி முகாமிற்காக இன்று சென்னையில் மட்டும் 1,600 முகாம்கள் செயல்பட்டு ஆயிரக்கணக்கான பணியாளர்கள் பணியில் ஈடுபட்டனர். விநாயகர் சதூர்த்தி, இரண்டாவது சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை என தொடர் விடுமுறை இருந்ததால் மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வருவார்களா என்ற கேள்வி இருந்து வந்தது. ஆனால் சில தடுப்பூசி முகாம்களில் கூட்டம் அலை மோதும் அளவு மக்கள் இல்லாவிட்டாலும் சாதாரண வார நாள்களை விட கூடுதலாகவே மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன் வந்ததாக தடுப்பூசி பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள் தெரிவித்தனர்.

மாலை நேரத்தில் மக்கள் கூடும் மால்கள் உள்ளிட்ட இடங்களிலும் முகாம்கள் அமைக்கப்பட்டன. காலையில் ஓரிடத்தில் செயல்படும் சிறப்பு முகாம்கள் மாலை மக்கள் கூட்டம் உள்ள பகுதிகளுக்கு மாற்றப்பட்டன. உதாரணமாக, சென்னை வேளச்சேரி சிவசக்தி பள்ளியில் நடைபெறும் முகாம் மாலை விஜயநகருக்கு மாற்றப்பட்டது. மக்களும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

மேலும், வேளச்சேரி ரயில் நிலையம் அருகில் தனியார் வணிக வளாகத்தின் கார் பார்க்கிங்கில் நடைபெற்ற முகாமில் மாநகராட்சி ஊழியர்கள் ஆறு பேர் இருந்தாலும் ஊசி செலுத்த ஒருவர் கூட காத்திருக்கவில்லை.

அதேபோல், தினசரி 500 தடுப்பூசி வரை செலுத்தப்படும் முகாம் ஒன்றில் இன்று மதியம் வரையிலும் கிட்டத்தட்ட 130 பேர்தான் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர் என்று அங்கிருந்த மாநகராட்சி ஊழியர் கூறினார்.

மெகா தடுப்பூசி முகாம்

Also Read: `மொத்த உழைப்பும் வீணாகிடுமே?!’ – மெகா தடுப்பூசி முகாமுக்கு எதிராக சில குரல்கள்; அரசு பரிசீலிக்குமா?

இந்த முகாமில் தடுப்பூசி போட்டுக்கொண்ட ஒருவரிடம் பேசினோம்.“வார நாள்களில் ஊசி போட்டுகிட்டா சரியா வேலை செய்ய முடியாம போகலாம். இல்லைனா, லீவ் போட வேண்டியதா இருக்கும். ஆனா, ஞாயிற்றுக்கிழமை போட்டுகிட்டா இன்னையோட முடிஞ்சிடும். அதனால இதுவே சரியா இருக்கு. கறி சாப்பிடக்கூடாதுனு சொல்றாங்க அதான் கொஞ்சம் கஷ்டம்” என்றார் அவர்.

மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள முகாமை எளிதாக கண்டறிய இணையத்தில் சேவை வழங்கப்பட்டது. மேலும் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு அளிக்கும் வண்ணம் “தடுப்பூசி போடு மாக்கா” எனும் பாடலை சென்னை மாநகராட்சி வெளியிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தியது. மற்ற நகரங்களில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வரும் நபர்களுக்கு குலுக்கல் முறையில் பரிசு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், மெகா தடுப்பூசி முகாம் குறித்து பேசிய முதல்வர் ஸ்டாலின், “ இன்று ஒரே நாளில் 25 லட்சத்துக்கும் மேல் தடுப்பூசி போடப்பட்டு தமிழகம் தேசிய அளவில் சாதனை படைத்துள்ளது” என்று கூறியுள்ளார்.

மேலும் இதுகுறித்து பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், “ மெகா தடுப்பூசி முகாமின் மூலம் சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட நகரங்களில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இன்றைய தடுப்பூசி முகாமிற்கு மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளதால் தொடர்ந்து இதேபோல் நடத்த ஏற்பாடு செய்யப்படும்” என்று கூறினார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.