விரைவில் பிரதமர் மோடியும், அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் சந்தித்துக் கொள்ள உள்ளனர். இந்த சந்திப்பு மிகுந்த எதிர்ப்பார்ப்புக்கு உள்ளாகியுள்ளது. அதன் பின்னணியை இங்கு காணலாம்.

ஒருபுறம் ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆதிக்கம் ஏற்பட்டுள்ளதால் தீவிரவாத ஊடுருவல் அச்சம் நிலவுகிறது. இன்னொரு பக்கம் சீன எல்லையில் தொடரும் பதட்டம் காரணமாக பாதுகாப்பு பிரச்சினைகள் அதிகரித்துவருகிறது. இப்படியான நிலையில், பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா சென்று அதிபர் ஜோ பைடனை சந்திக்க திட்டமிட்டிருக்கிறார். இந்த சந்திப்பு, வருகிற 23-ம் தேதியன்று நடைபெறும் என்றும் அதற்கான ஏற்பாடுகள் தற்போது நடந்து கொண்டிருப்பதாகவும் வெளியுறவுத்துறை அமைச்சக அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர்.

image

செப்டம்பர் 22-ம் தேதி தனி விமானம் மூலம் இந்தியாவில் இருந்து பிரதமர் மோடி புறப்பட திட்டமிடப்பட்டுள்ளார் என கூறப்படுகிறது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உலகம் முழுவதும் போக்குவரத்து கட்டுப்பாடுகள் தொடரும் நிலையில், கோவிட் பெருந்தொற்றுக்கு பிறகு முதல் முறையாக பிரதமர் மோடி அமெரிக்கா செல்கிறார்.

இதற்கிடையில், செப்டம்பர் 24 ஆம் தேதியன்று அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்த உள்ளார் என சொல்லப்பட்டுள்ளது. ஏற்கெனவே “க்வாட்” என்கிற பெயரில் இந்த மூன்று நாடுகளுடன் இந்தியா இணைந்து போர் ஒத்திகையில் ஈடுபட்டு வருகிறது. இந்த கூட்டமைப்பு சீனாவின் ஆதிக்க போக்குக்கு எதிரான வலுவான கூட்டணி என கருதப்படுகிறது. இந்த சந்திப்புக்கு பின், செப்டம்பர் 26-ம் தேதியன்று ஐக்கிய நாடுகள் கூட்டத்தில் உரை நிகழ்த்த உள்ளார். இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள அமெரிக்கா வருகை தரவுள்ள பல்வேறு நாட்டுத் தலைவர்களும் ஆப்கானிஸ்தான் குறித்த ஆலோசனைகளில் ஈடுபடுவார்கள் என வல்லுநரகள் கருதுகிறார்கள்.

ஜோ பைடன் மற்றும் பிற முக்கிய தலைவர்களுடன் பிரதமர் மோடி நடத்தும் ஆலோசனைகளில், ஆப்கானிஸ்தான் பற்றிய விவாதம் முக்கிய இடம்பெறும் என வெளியுறவுத்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக தலிபான் ஆதிக்கத்திற்கு பிறகு ஆப்கான் மக்களின் நிலை, அந்த நாட்டு அகதிகளுக்கு உதவுவது, அதற்கான நடவடிக்கைகள், தீவிரவாதத்தை ஒழிப்பது, தீவிரவாதத்தால் அந்த பிராந்தியத்தில் மட்டுமல்லாது உலகத்தின் பிற பகுதிகளுக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தக்கூடிய சூழல் நிலவுவது ஆகியவை குறித்து ஆலோசனை நடைபெற உள்ளதாக தெரிகிறது.

தொடர்புடைய செய்தி: பயங்கரவாத எதிர்ப்பு திட்டத்தை பிரிக்ஸ் ஏற்கிறது – பிரதமர் மோடி

ஆப்கன் விவகாரத்தில், சீன அரசு தலிபான் அமைப்புக்கு ஆதரவாக நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அதேபோல பாகிஸ்தான் அரசு நேரடியாக ஆப்கானிஸ்தான் பிரச்னையில் தலையீடு செய்கிறது. இவையாவும் பல்வேறு நாடுகளுக்கு கவலை அளித்து வருகின்றன. குறிப்பாக ரஷ்யா மத்திய ஆசிய நாடுகள் மற்றும் செச்சினியா ஆகிய நாடுகள், தங்கள் பகுதிகளுக்குள்ளும் தீவிரவாதம் பரவிவிடுமோ என அஞ்சுகிறது. இவற்றை மையமாக வைத்து, ‘சீன ஆதிக்கம் காரணமாக, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகளின் கூடாரமாக மாறிவிடும்’ என்கிறார்கள் வல்லுநர்கள்.

image

இவையாவும் இந்தியா மற்றும் அமெரிக்காவுக்கு கவலை அளித்து வருகிறது. ஆப்கனை இத்தனை நாடுகள் எதிர்க்க முக்கிய காரணம், ‘மீண்டும் தீவிரவாதிகள் ஆப்கானிஸ்தானில் முகாம்கள் அமைத்து முன்பு போல சுதந்திரமாக செயல்பட ஆரம்பித்துவிட்டால், அல்-காய்தா மற்றும் ஐசிஎஸ் போன்ற தீவிரவாத அமைப்புகள் அரேபியா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய பகுதிகளிலிருந்து மத்திய ஆசியா மற்றும் இந்தியா உள்ளிட்ட பகுதிகளில் நாச வேலையில் ஈடுபடக்கூடும். அதற்கான தளமாக ஆப்கன் அமைந்துவிடும்’ என்ற அச்சம்தான்.

இவை அனைத்தையும் அடிப்படையாக வைத்துப்பார்க்கும்போது, அமெரிக்காவில் இந்த மாதம் நடைபெற உள்ள ஆலோசனைக் கூட்டங்களில் ஆப்கானிஸ்தான் குறித்த விவாதங்களே முதன்மை பெறுமென தெரிகிறது. இதுவே உலக அரசியல் அரங்கில் இந்த சந்திப்பை மிக மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக மாற்றுகிறதென வல்லுனர்கள் கருதுகிறார்கள்.

– கணபதி சுப்பிரமணியம்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.