மேக்கேதாட்டுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசைக் கண்டித்து தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா தலைமையில் அக்கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். உள்ளாட்சித் தேர்தல் எப்போது நடந்தாலும் தயாராக இருப்பதாகவும் விஜயகாந்த் பெயரில் அறிக்கையும் வெளியிட்டனர். இந்த சூழலில், விஜயகாந்த் எப்படி இருக்கிறார்? அவரது ஹெல்த் அப்டேட் குறித்து தே.மு.தி.க வட்டாரத்தில் விசாரித்தோம்.

“அவ்வப்போது உடல்நிலை பாதிக்கப்படுவதால் அடிக்கடி மருத்துவமனைக்குச் சென்று வந்துகொண்டிருக்கிறார் கேப்டன். அவருக்கு பார்த்துப் படிப்பது சிரமமாக இருப்பதால், தினமும் செய்தித்தாள்களில் வரும் செய்திகளைப் படித்துக் காண்பிக்கிறார்கள். சர்க்கரைப் போடாத பால் அல்லது காபி, வேகவைத்த உணவு, காரமில்லாதா உணவு இவைதான் விஜயகாந்தின் ஃபுட் மெனு. இரவு நேரத்தில் வீட்டிலேயே சிறிது நேரம் வாக்கிங் செல்கிறார்.

Also Read: தேமுதிக – அதிமுக பிரிவு – இருவர் காரணமா? பதிலளிக்கும் பிரேமலதா

பிரேமலதா

கட்சி சார்ந்த முடிவுகளை பிரேமலதாவும், அவரது இரண்டாவது மகன் விஜய பிரபாகரனும்தான் எடுக்கிறார்கள். உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி அமையாத பட்சத்தில் தனித்துக் களம் காண வேண்டுமென்பதில் பிரேமலதா உறுதியுடன் இருக்கிறார். இந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பெருவாரியான இடங்களில் கவுன்சிலர் பதவிகளை ஜெயித்தால் போதும் என்கிறார். ஏனெனில், கட்சி சாராத கவுன்சிலர் பதவிகளில் தி.மு.க., அ.தி.மு.க என யாருக்கும் மெஜாரிட்டி இல்லையென்றால், சுயேச்சையாகப் போட்டியிட்டு ஜெயித்தவர்களையோ, மாற்றுக் கட்சி சார்பில் வெற்றி பெற்றவர்களையோ பஞ்சாயத்து தலைவர் பதவிக்குத் தேர்வு செய்யும் வழக்கம் உள்ளது. அப்படிப்பட்ட இடங்களைப் பிடிக்க வேண்டுமென நினைக்கிறார் பிரேமலதா. அதேநேரம், கவுன்சிலராக வெற்றி பெற்றவர்களை தங்கள் பக்கம் இழுத்துக்கொண்டு தலைவர் பதவியைப் பிடிக்கும் குதிரைப் பேரமும் நடக்கும் என்பதால் விலைபோகாத, கட்சிக்கு விசுவாசமான நபர்களை வேட்பாளர்களாகத் தேர்வு செய்ய வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறார் பிரேமலதா” என்றனர்.

தேமுதிக பார்த்தசாரதி

தே.மு.தி.க மாநிலச் செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ-வுமான பார்த்தசாரதியிடம் பேசினோம். “அமெரிக்காவில் சிகிச்சையை முடித்து வந்ததில் இருந்து ஒவ்வொரு திங்கள் கிழமையன்றும் மருத்துவமனைச் சென்று பரிசோதனை மேற்கொள்வது வாடிக்கை. மூன்று மணிநேரத்தில் அன்றே வீடு திரும்பிவிடுவார் கேப்டன். ஹெல்த் நன்றாக இருக்கிறது. பேசவும், நடக்கவும் மட்டுமே கொஞ்சம் சிரமப்படுகிறார். மற்றபடி, தினமும் செய்திகளைப் பார்க்கிறார், கட்சியினர் செய்துவரும் பணிகளை கவனிக்கிறார். லண்டனைச் சேர்ந்த பிரபல மருத்துவர் ஒருவர் நேரில் வந்து பரிசோதித்துவிட்டுச் சென்றிருக்கிறார். மீண்டும் சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல வேண்டிய தேவை இருக்கிறது. அந்த மருத்துவர் எங்கு அழைக்கிறாரோ அங்கு சென்று சிகிச்சை மேற்கொள்வார் கேப்டன். விமான வழிப்பயணத்துக்கு அனுமதி கிடைத்ததும் செல்வார். உள்ளாட்சித் தேர்தலுக்கு நாங்கள் தயார் என்று சொல்லிவிட்டோம். எப்போது தேர்தல் குறித்த அறிவிப்பு வெளிவருகிறதோ அப்போதுதான் மேற்கொண்டு பேச முடியும்” என்று முடித்தார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.