ஒலிம்பிக் அரங்கில் இந்தியாவுக்குப் பெருமை சேர்க்கும் வகையில் பதக்க தாகத்தைத் தீர்ப்பதில் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த வீரர்கள் முன்னிலை வகிக்கும் சூழலில், ‘வடகிழக்கு இந்திய மக்கள் நம் நாட்டில் இனவெறிச் சீண்டலை சந்தித்து வருகின்றனர்’ என்ற அங்கிதாவின் ஆதங்கத்தைப் பதிவு செய்திருப்பதும் கவனிக்கத்தக்கது. இதன்மூலம், இந்திய சமூகத்தின் பொதுபுத்தியில் உதிக்கும் உருவக்கேலி, கலாய்ப்புகளுக்கு தங்கள் பதக்கங்களால் வடகிழக்கு இந்திய சாதனையாளர்கள் பதிலளித்து வருவதாக புரிந்துகொள்ளலாம்.

நடப்பு ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கான பதக்க கனவை நிறைவேற்றி இருக்கிறார்கள் வடகிழக்கு மாநிலங்களான மணிப்பூரைச் சேர்ந்த மீராபாய் சானுவும், அசாமைச் சேர்ந்த லவ்லினாவும். பளுதூக்குதலில் வெள்ளிப் பதக்கம் வென்றவுடன், இந்தியா முழுவதிலும் இருந்து மீராபாய் சானுவுக்கு வாழ்த்துகள் குவிந்துகொண்டிருக்க, நடிகர் மிலந் சோமனின் மனைவியும், அசாமைச் சேர்ந்தவருமான அங்கிதா கன்வார் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு கருத்தைப் பதிந்திருந்தார்.

அதில் “நீங்கள் வடகிழக்கு இந்தியாவைச் சேர்ந்தவராக இருந்தால், நாட்டிற்காக பதக்கம் வெல்லும்போது மட்டுமே நீங்கள் ஒரு இந்தியராக முடியும். மற்றபடி, ‘சைனீஸ்’, ‘நேபாளி’, இதோ இப்போது ‘கொரோனா’ என மற்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்களால் அழைக்கப்படுகிறோம். இந்தியா சாதிவெறியால் மட்டுமல்ல, இனவெறியாலும் பாதிக்கப்பட்டுள்ளது. எனது அனுபவத்திலிருந்து இதை பேசுகிறேன்” என்று விரக்தியாக பதிவிட்டிருந்தார்.

அங்கிதாவின் விரக்தி ஒருபுறம் இருக்க, இந்தியாவின் குறிப்பிடத்தக்க பகுதியாக, குறிப்பாக விளையாட்டில் தவிர்க்க முடியாத ஒரு பகுதியாக வடகிழக்கு மாநிலங்கள் மாறி வருகின்றன. அதுவும் ஒலிம்பிக் போன்ற தடகளப் போட்டிகள் கொண்ட போட்டி தொடர்களில் வடகிழக்கு இந்திய வீரர்களின் பங்களிப்பு அதிகம். ‘எட்டு சகோதரிகள்’ என அழைக்கப்படும் அருணாசலப் பிரதேசம், அசாம், மணிப்பூர், மேகாலயம், மிசோரம், நாகாலாந்து, திரிபுரா, சிக்கிம் ஆகியவை வடகிழக்கு மாநிலங்களாக அறியப்படுகின்றன. பொதுவாக வளர்ச்சியடையாத பகுதிகளை அதிகம் கொண்டவை வடகிழக்கு இந்திய மாநிலங்கள்.

image

இந்த பிராந்தியங்களில் வாழும் மக்களின் வாழ்க்கை நிலை மற்ற பகுதிகளில் இருப்பவர்களைவிட கஷ்டங்கள் நிறைந்த ஒன்று. இதே நிலையில் இருந்துதான் இந்தப் பகுதி விளையாட்டு வீரர்களும் வருகிறார்கள். என்றாலும், சர்வதேச விளையாட்டு நிகழ்வுகளில் நாட்டிற்காக விருதுகள் வாங்குவதில் வடகிழக்கு மாநில வீரர்கள் முன்னிலையில் இருக்கிறார்கள் என்பது மறுக்கமுடியாத உண்மை. பெரும்பாலும் குக்கிராமங்களில், சிறிய நகரங்களில் இருந்து வரும் இவர்கள், அரசின் உதவிகள் கிடைக்காமல் தாங்களாகவே தனிப்பட்ட முறையில் பயிற்சிகளை பெற்றுக்கொண்டு சர்வதேச களத்தில் சாதித்து வருகிறார்கள்.

வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த விளையாட்டு சாதனையாளர்களின் நீண்ட பட்டியலில் அண்மையில் இணைந்தவர்தான் மீராபாய் சானு. ஒலிம்பிக்கில் பளுதூக்குதலில் வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் இந்திய விளையாட்டு வீரர் என்ற பெருமையை மீராபாய் சானு உருவாக்கியுள்ளார். ஆனால், மீராபாய் சானுவுக்கு அவ்வளவு எளிதாக இந்தப் பதக்க வாய்ப்பு அமைந்துவிடவில்லை. ஒலிம்பிக்கை நோக்கிய அவரின் பயணத்தின் ஒவ்வொரு அடியிலும் தடைகளை எதிர்கொண்டார். பளுதூக்குதலில் அவர் தூக்கிய பாரத்தை, விட அவர் மீது கொடுத்த அழுத்தம் தாங்க முடியாத அளவுக்கு அதிகமாக இருந்தது. ஆரம்பகட்டத்தில் விமர்சகர்கள் அவரின் திறமையையும் நேர்மையையும் சந்தேகிக்கத் தொடங்கினர். மேலும், அவரின் அணுகுமுறையில் குறைபாடுகளைக் கண்டனர்.

ஆனால், இதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில், சானு வலுவாக திரும்பி வந்து 2017-இல் காமன்வெத் மற்றும் உலக சாம்பியன்ஷிப் இரண்டிலும் தங்கப் பதக்கங்களை வென்றார். அடுத்த ஆண்டு, காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் மற்றொரு தங்கத்தை வென்றார். பிறகு மீண்டும் காயம், அதனால் பத்து மாதங்களுக்கு விளையாட முடியாத நிலை. இதிலிருந்து மீண்டு வந்து தான் இப்போது ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றுள்ளார். இப்படித்தான், இவரைப் போன்றே மற்ற வடகிழக்கு விளையாட்டு வீரர்களும் பல கட்ட சோதனை தாண்டியே வெளிவருகின்றனர்.

image

பொதுவாக அர்ப்பணிப்பு, உறுதிப்பாடு மற்றும் ஒழுக்கம் ஆகியவை அதிகம் கொண்டவர்கள் வடகிழக்கு விளையாட்டு வீரர்கள். இதுவே அவர்களின் வெற்றிக்குக் காரணமாக அமைகிறது. இந்தியாவுக்காக தடகள விளையாட்டில் பல விளையாட்டு வீரர்களை உருவாக்கி கொடுத்துள்ள வடகிழக்கு மாநிலங்கள், இந்தியாவிற்கான ஒலிம்பிக்கிற்கான மையமாக மாறி வருகிறது. இதற்கு உதாரணம்தான் சமீபகாலமாக ஒலிம்பிக், காமன்வெல்த், தேசிய சாம்பியன்ஷிப் போன்ற தடகள விளையாட்டு போட்டிகளில் இந்தியாவின் பதக்க கனவை நிறைவேற்றிய வீரர்களில் அதிகம் இடம்பிடித்திருக்கும் வடகிழக்கு மாநில விளையாட்டு வீரர்கள். மேரி கோம், ஹிமா தாஸ் முதல் இப்போது சானு வரை இந்தப் பட்டியல் நீளம்.

ஒவ்வொரு முறையும், வடகிழக்கு மாநிலங்கள் சார்பில், 15-க்கும் குறைவானவர்கள் ஒலிம்பிக் தொடரில் பங்கேற்கின்றனர். இந்த டோக்கியோ ஒலிம்பிக்கில் கூட ஜூடோ முதல் குத்துச்சண்டை மற்றும் வில்வித்தை முதல் ஹாக்கி வரை, வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த பல விளையாட்டு வீரர்கள் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தி வருகின்றனர். இப்படி, தங்களுக்கு கிடைத்த வாய்ப்புகளில் நாட்டை பெருமைப்படுத்தும் வடகிழக்கு விளையாட்டு வீரர்கள் போதுமான ஸ்பான்சர்ஷிப் இல்லாதது, நவீன பயிற்சி வசதிகள் போன்றவற்றை பெறுவதில் பெரும் சிரமங்களையே எதிர்கொள்கின்றனர்.

image

இதுவே ஒரு ஒரு சராசரி கிரிக்கெட் வீரர் இதுபோன்ற சாதனையை செய்திருந்தால் இந்தியாவை பெருமைப்படுத்திய வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்த மற்ற விளையாட்டு வீரர்களை விட இன்னும் பிரபலமாகவும், அதேநேரம் ஸ்பான்சர்ஷிப் போன்ற வசதிகளையும் பெற்றிருப்பார்கள் என்பதே நிதர்சனம். ஸ்பான்சர்ஷிப் போன்ற சரியான வாய்ப்புகள் கிடைத்தால், உலக அரங்கில் பெரிய அளவில் சாதனை படைக்க முடியும் என்பது இந்தப் பகுதி விளையாட்டு வீரர்களின் கோரிக்கை. ஆனால் அவர்களின் கோரிக்கை நீண்ட காலமாகவே சரிசெய்யப்படாமல் இருந்து வருகிறது.

இந்தத் தடைகளை எல்லாம் தாண்டி, தங்கள்மீதான இந்தியாவின் பிறமாநிலங்களைச் சேர்ந்தவர்களின் பொதுபுத்தியின் கீழ்த்தரமான வெளிப்பாடாக வருகின்ற உருவக்கேலிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, தங்களை பெருமித இந்தியர்களாக நிறுவும் தன்மையும் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த வீரர்களுக்கு இருப்பதை அங்கிதாவின் ஆதங்கப் பதிவு மூலம் உணர முடிகிறது.

– மலையரசு

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.