கடந்த அ.தி.மு.க ஆட்சியின்போது கொண்டுவரப்பட்ட திட்டங்களை தி.மு.க அரசு கிடப்பில் போட முயல்வதாக முன்னாள் எம்.எல்.ஏ-வும் வழக்கறிஞருமான இன்பதுரை புகார் தெரிவித்தார். இது தொடர்பாக நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணுவை சந்தித்துப் புகார் மனுவை அவர் அளித்தார்.

புகார் மனு

அதில், கடந்த அ.தி.மு.க ஆட்சியின்போது முன்னாள் முதல்வரான எடப்பாடி பழனிசாமி, ராதாபுரம் தொகுதியின் மேம்பாட்டுக்காகச் சிறப்புக் கவனம் செலுத்தி பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்தார். அவர் கொண்டு வந்த திட்டங்களை தற்போதைய அரசு நிறுத்தி வைக்க முயற்சிக்கிறது.

கடந்த ஆட்சியில், தாமிரபரணி-நம்பியாறு-கருமேனியாறு இணைப்பு திட்டத்தை தீவிரமாகச் செயல்படுத்தியது. அந்தத் திட்டத்தின் கடைசி பகுதியான எம்.எல்.தேரியில் தண்ணீரை தேக்கி வைக்கும் வகையில் பணிகள் நடந்தன.

Also Read: ‘தி.மு.க-வுக்கு எதிரான அ.தி.மு.க-வின் ‘போராட்ட அரசியல்’ எடுபட்டதா?’ – ஓர் அலசல் பார்வை

செய்தியாளர்களிடம் பேசிய இன்பதுரை

எம்.எல்.தேரியில் தண்ணீர் தேக்குவதால் தனியார் கனிமவள நிறுவனத்துக்குப் பாதிப்பு ஏற்படும். அதனால் திட்டத்தை மாற்றியமைக்கும் முயற்சி நடக்கிறது. அதுவரை திட்டத்தை நிறுத்தி வைக்கவும் ராதாபுரம் பகுதியைச் சேர்ந்த ஆளுங்கட்சியினர் முடிவு செய்துள்ளனர். இதனால் ராதாபுரம் பகுதி மக்களுக்குப் பாதிப்பு ஏற்படும்

குமரி மாவட்டம் பழையாற்றில் இருந்து ஆண்டு முழுவதும் தண்ணீர் கொண்டுவர ரூ.169 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகளைத் தொடங்க முடிவு செய்யப்பட்டது.இந்தத் திட்டத்தையும் கிடப்பில் போடும் முயற்சி நடக்கிறது. மீனவர்கள் நலனுக்காக இடிந்தகரை அருகே அருவிக்கரை பகுதியில் ரூ.10 கோடி மதிப்பில் மீன்பிடி துறைமுகம் அமைக்கும் திட்டத்தையும் நிறுத்தி வைக்க வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

நெல்லை ஆட்சியர் அலுவலகம்

இது குறித்து பேசிய முன்னாள் எம்.எல்.ஏ-வான ஐ.எஸ்.இன்பதுரை, “தாமிரபரணி நதிநீர் இணைப்புத் திட்டத்தின் 80 சதவிகிதம் பணிகள் முடிவடைந்த நிலையில் இறுதிக் கட்ட பணிகளால் தனியாருக்குப் பாதிப்பு வரும் என்பதால் விவசாயிகளைப் பாதிக்கும் வகையில் திட்டத்தையே மாற்றி அமைக்கும் முயற்சியில் ராதாபுரம் எம்.எல்.ஏ-வும் தமிழக சட்டப்பேரவை சபாநாயகருமான அப்பாவு மற்றும் ஆளுங்கட்சியினர் முயற்சி செய்கின்றனர் . நதிநீர் இணைப்புத் திட்டம், குமரி மாவட்டத்தில் இருந்து ராதாபுரம் கால்வாயில் தண்ணீர் கொண்டு வரும் திட்டம், மீன் பிடி துறைமுகம் அமைக்கும் திட்டம் ஆகியவற்றை விரைந்து செயல்படுத்த வேண்டும். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக மக்கள் நலனுக்கான திட்டங்களை நிறுத்தி வைக்கும் எண்ணத்தைக் கைவிட வேண்டும்” என வலியுறுத்தினார்

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.