அண்மைய கால நிகழ்வுகளால் மனிதர்கள் விண்வெளிக்கு பயணம் மேற்கொள்வது இன்ப உலா சென்று வரும் நிகழ்வை போல மாறி நிற்கிறது. குறிப்பாக அமேசான் நிறுவனர் ஜெஃப் பெஸாஸ், தொழிலதிபர் ரிச்சர்ட் பிரான்சன், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் என உலகத்தின் பெரும் பணக்காரர்கள் தற்போது இந்த தொழிலில் அதிக ஆர்வம் செலுத்தி வருகின்றனர். அதற்காக அவர்கள் சொந்தமாக நிறுவனமும் நிறுவியுள்ளனர்.  

இதில் பெஸாஸ் மற்றும் ரிச்சர்ட் பிரான்சன் தங்களது சொந்த நிறுவனத்தின் விண்கலத்தை பயன்படுத்தி விண்வெளிக்கு சுற்றுலா சென்றும் திரும்பியுள்ளனர். 

image

இனி வரும் நாட்களில் ஊட்டி, கொடைக்கானல் மற்றும் கொஞ்சம் வசதி படைத்தவர்கள் கடல் கடந்து அயல்நாடுகளுக்கு சுற்றுலா நிமித்தமாக செல்வது போல விண்வெளிக்கு சுற்றுலா சென்று வருவதும் சகஜம் ஆகிவிடும். என்ன இந்த பயணத்திற்கான செலவுதான் கூடுதலாக உள்ளது. 

இந்த ஆண்டு மட்டுமே பெஸாஸின் ‘ப்ளு ஆரிஜின்’ நிறுவனத்தின் விண்கலம் விண்வெளிக்கு இரண்டு முறை பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. அதே போல ரிச்சர்ட் பிரான்சனின் ‘விர்ஜின் கேலடிக்’ நிறுவனத்தில் விண்வெளிக்கு பயணிக்க 600 பேர் தலா 2.5 லட்சம் அமெரிக்க டாலர்களை செலுத்திவிட்டு காத்திருப்போர் பட்டியலில் காத்துள்ளனர். இந்திய ரூபாய் மதிப்பில் இந்த பயணத்திற்கான ஒரு டிக்கெட்டின் விலை 1,86,19,637 ரூபாய் (கிட்டத்தட்ட 2 கோடி ரூபாய்). 

‘அரசு’ படத்தில் ‘I AM GOING TO CHENNAI’ என வடிவேலு சொல்வது போல விண்வெளிக்கு செல்ல உள்ளவர்கள் ஓவராக அலப்பறை செய்யலாம். சுருக்கமாக இந்த பயணத்தை சொல்ல வேண்டுமென்றால் விண்வெளிக்கு வாடகை வாகனத்தில் சென்று வரும் பயணம் என சொல்லலாம். பூமிக்கும், விண்வெளிக்கும் இந்த நிறுவனங்களின் விண்கலங்கள் டவுன் பஸ் போல பயணிக்க உள்ளன. 

image

குறிப்பாக எதிர்வரும் நாட்களில் விண்வெளிக்கு பயணிக்க உள்ளவர்களுக்கும் மற்றும் பூமியில் உள்ள மற்றவர்களுக்கும் இந்த விண்வெளி பயணத்தில் அப்படி என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்வதில் ஆர்வம் அதிகம் இருப்பதுண்டு. அது என்ன என்பதை பார்ப்போம். 

விண்வெளி சுற்றுலா பயண அனுபவம் எப்படி இருக்கும்? : விண்வெளிக்கும் பூமிக்கும் இடையிலான எல்லையைத் தாண்டி பயணிகள் பயணிக்கும் போது பூமிக் கோளின் அமைப்பை விண்வெளியில் இருந்து பார்த்து ரசிக்க முடியும். விர்ஜின் கேலடிக் விண்கலத்தில் பயணித்தால் கடல் மட்டத்திலிருந்து சுமார் 53 மைல் தொலைவிலும், ப்ளூ ஆரிஜின் விண்கலத்தில் பயணித்தால் கடல் மட்டத்திலிருந்து சுமார் 62 மைல் உயரத்திற்கும் பறந்து செல்ல முடியும். இந்த இரண்டு நிறுவனங்களின் விண்கலனும் சப்-ஆர்பிட்டல் எல்லை வரை மட்டுமே பறக்கின்றன. வட்ட பாதையான ஆர்பிட்டலை இவை அடையாது. வரும் நாட்களில் இது மாற்றம் பெறலாம். 

View this post on Instagram

A post shared by Jeff Bezos (@jeffbezos)


அதோடு பூமியில் உள்ளது போல புவி ஈர்ப்பு சக்தி விண்வெளியில் மிகவும் குறைவு என்ற காரணத்தினால் விண்கலத்தில் இருப்பவர்கள் மிதப்பது வழக்கம். அந்த வகையில் விண்வெளி சுற்றுலா செல்பவர்களுக்கு மிதக்கும் அனுபவமும் கிடைக்கும். தற்போது 10 முதல் 90 நிமிடங்கள் வரையில் தான் இந்த இரு நிறுவனங்களின் விண்கலமும் விண்வெளி பயணத்தை மேற்கொள்கின்றன. ஆனால் மஸ்க் கொண்டு வர உள்ள ஸ்பேஸ் எக்ஸ் விண்வெளி பயணத்தில் நாள் கணக்கில் இருக்கும் வசதிகளை கொண்டு வரப்பட உள்ளதாக சொல்லப்பட்டு வருகிறது. 

வணிக ரீதியாக மேற்கொள்ளப்பட்டு வரும் விண்வெளி பயணம் வெறும் பொழுது போக்குக்கான பயணமா? : முன்பெல்லாம் விண்வெளி வீரர்கள் ஆய்வு பணிக்காக பயணம் மேற்கொள்வது வழக்கம். தற்போது தனியார் நிறுவனங்களின் முயற்சியால் அனைவரும் விண்வெளிக்கு செல்வது சாத்தியமாகி உள்ளது. இப்போதைக்கு இந்த பயணம் வணிக ரீதியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எதிர்வரும் நாட்களில் ஆய்வு பணிக்காகவும் இந்த விண்கலங்கள் உதவலாம். அண்மையில் நடைபெற்ற விண்வெளி பயணத்தில் கூட செடிகள் சில விண்கலத்தில் கொண்டு செல்லப்பட்டுள்ளன. பின்னர் அந்த செடிகள் புவி ஈர்ப்பு சக்தி மிகவும் குறைவாக உள்ள இடத்தில் செடிகள் எப்படி ரெஸ்பாண்ட் செய்கின்றன என்பது குறித்த ஆய்வுகள் நடந்ததாம். எதிர்வரும் நாட்களில் இது அறிவியல் பூர்வ ஆராய்ச்சி பணிகளுக்காக பயன்படுத்தப்பட வாய்ப்புகள் உள்ளன. 

இதில் ஆபத்து அதிகம் எனவும் சொல்லப்படுகிறது. காரணம் இந்த நிறுவனங்களின் பயணத்தை முறைப்படுத்த எந்தவொரு ஆணையமும் இல்லை. அதே போல முறையான பயிற்சி இல்லாமல் பயணம் மேற்கொள்ளும் போது சில பின்விளைவுகள் ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளதாம். 

சந்தை வாய்ப்பு! : வணிக ரீதியாக விண்வெளி பயணத்தை மேற்கொள்வதற்கான சந்தை வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என பெஸாஸ் தெரிவித்துள்ளார். விமான பயணம் அறிமுகமான காலத்தில் அதற்கான பயண கட்டணமும் அதிகமாக தான் இருந்தது எனவும் மேற்கோள் காட்டுகிறார் அவர். அதே போலா வரும் நாட்களில் இந்த விண்வெளி பயணத்திற்கான பயண கட்டணம் குறையும் என அவர் தெரிவித்துள்ளார். 

image

இருப்பினும் இது இப்போதைக்கு பணம் படைத்த செல்வந்தர்களின் விளையாட்டாகவே உள்ளது. 

மேலும் இந்த விண்வெளி பயணங்களால் சுற்றுப்புற சூழலுக்கும் தீங்கு ஏற்படும் என சொல்லப்படுகிறது. அதற்கு காரணம் இந்த விண்கலங்கள் வெளியேற்றும் கார்பன் மற்றும் கார்பன் டை ஆக்சைட் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அறிவியல் தொழில்நுட்பத்தின் முன்னேற்றத்தில் சில பின்னடைவுகளும் இருக்கத்தான் செய்கின்றன. 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.