முதல் அலையில் 60 வயதுக்கும் மேற்பட்டவர்களைத் தாக்கிய கோவிட்-19 வைரஸ், இரண்டாவது அலையில் நடுத்தர வயதினரை அதிகமாகத் தாக்கியது. அடுத்து கொரோனா மூன்றாவது அலை வர வாய்ப்பு இருப்பதாகவும், அது குழந்தைகளை அதிகம் பாதிக்கும் எனவும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். கொரோனா மூன்றாவது அலையில் இருந்து குழந்தைகளைக் காக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, கன்னியாகுமரி மாவட்டம் கோட்டாறில் உள்ள அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி குழந்தைகள் நலப்பிரிவு துறைத் தலைவர் மருத்துவர் செந்தி அரசியிடம் பேசினோம்.

“கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் படிப்படியாகக் குறைஞ்சுகிட்டு வருது. இந்த நிலையில மூன்றாவது அலை வந்தால் அது குழந்தைகளை அதிகமாகப் பாதிக்கும் என மருத்துவ வல்லுநர்கள் கணிச்சிருக்கிறாங்க. 18 வயசுக்கு மேல உள்ளவங்க அதிகமா தடுப்பூசி எடுத்துக்கொண்டதால், தடுப்பூசி எடுத்துக்கொள்ளாத குழந்தைகளுக்கு பாதிப்பு அதிகமாக இருக்கலாம் என்கிறார்கள்.

இந்திய மருத்துவ முறைப்படி குழந்தைகளை எப்படி பாதுகாக்கலாம் என்பதை, ஆயுஷ் அமைச்சகம் வழிகாட்டி நெறிமுறையாக வெளியிட்டிருக்காங்க.

வெற்றிலை

குழந்தைங்களோட ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக தினசரி, அதாவது ஒவ்வொரு நாளும் ஆரோக்கியம் மேம்படுத்தும் செயல்களைச் செய்து வந்தால் குழந்தைகளோட ஆரோக்கியம் மேம்படும் என்று சொல்லப்பட்டிருக்கு. அதன்படி என்னவெல்லாம் செய்யலாம்..?

கண்டூசம்… வாய் கொப்பளிக்கும் முறைகள்!

குழந்தைகள் காலையிலும் மாலையிலும் பல் துலக்கணும். அதோடு, `கண்டூசம்’ செய்யணும். அதாவது, ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணையில் வாய் கொப்பளிக்க வேண்டும். அதேபோல, சுடுதண்ணீரில் உப்பும், மஞ்சள் தூளும் கலந்தும் வாய்கொப்பளிக்கலாம். ஆயுர்வேத மருந்துக் கடைகளில் கிடைக்கும் திரிபலா, அதிமதுரம் ஆகிய பொடிகளை சுடுதண்ணீரில் கலந்தும் வாய் கொப்பளிக்கலாம்.

எண்ணெய் தேய்த்துக் குளிக்க வைக்கலாம்!

அடுத்ததா, அப்யங்கம். அதாவது, உடம்பு முழுவதும் எண்ணெய் தேய்த்துக் குளிக்கிறது. இதுக்கு நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் பயன்படுத்தலாம். ஆயுர்வேதத்தில் தன்வந்திர தைலம், லக்‌ஷாதி தைலம், பலாசுகந்த தைலம்னு பல தைலங்கள் இருக்கு. அதைக் குழந்தைங்களோட உடலுக்கு ஏற்றவாறு தினமும் தேய்த்துக் குளிக்க வைக்கலாம். குழந்தைக்கு ஒத்துக்காது என்றால், வாரத்துக்கு மூன்று நாள்கள் எண்ணெய் தேய்த்துக் குளிக்க வைக்கலாம். குளிச்ச பிறகு, உச்சிப்பொடிங்கிற ராஸ்னாதி லேப சூரணத்தை தலைஉச்சியில் வைத்து தேய்த்து விடணும். இது நீர் கோர்க்கிறதைத் தடுக்கும்.

Representational Image

Also Read: Covid Questions: ரத்தச் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இல்லை; தடுப்பூசி போட்டுக் கொள்ளலாமா?

மூக்கில் மருந்து!

அடுத்து, நஸ்யம். அதாவது மூக்கில் மருந்து விடும் முறை. அனு தைலத்தை ஒரு துளி அல்லது ரெண்டு துளி மூக்கில் விடலாம். காலையோ, சாயங்காலமோ ஏதாவது ஒரு டைம்ல இதைச் செய்யலாம். ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைங்களுக்கு, அம்மாவோட சுண்டு விரல்ல லேசா தைலத்தைக் தொட்டு மூக்கில வைக்கலாம். குழந்தைகளை ஒரு மணி நேரமாவது யோகா, பிராணாயாமம் போன்ற உடற்பயிற்சி செய்யவோ, விளையாடவோ விடணும். கோவிட் காலம் என்பதால வீட்டு மொட்டமாடியிலோ, சூரிய ஒளி படக்கூடிய வேறு இடத்திலோ குழந்தைகளை விளையாட விடலாம்.

உணவும் உறக்கமும் முக்கியம்!

குழந்தைங்களுக்கு சத்தான உணவு கொடுக்கணும். அந்தந்த சீஸன்ல கிடைக்கிற பழங்கள் நிறைய கொடுக்கணும். சூடுபண்ணி ஆறவெச்ச தண்ணீர் தொடர்ந்து கொடுக்கலாம். தண்ணியில சீரகம், சுக்கு, ஓமம் இதுல ஏதாவது ஒன்றை போட்டு கொதிக்க வேச்சு குழந்தைங்களுக்குக் கொடுக்கலாம். பசி வரும்போது குழந்தைகளுக்கு ஆகாரம் கொடுக்கலாம். பசிக்காதபோது திணிக்கக் கூடாது. ஜங் ஃபுட், ஸ்நாக்ஸ் சுத்தமா தவிர்க்கிறது நல்லது. பச்சைப்பயறு, பட்டாணி, கொண்டைக்கடலை போன்றவற்றை வேகவைத்து குழந்தைங்களுக்குக் கொடுக்கலாம்.

உறக்கம் ரொம்ப முக்கியம். ஒரு வயசுக்கு உட்பட்ட குழந்தைங்க 12 – 16 மணி நேரம் தொடர்ந்து தூங்கலாம். 1 முதல் 2 வயது வரையுள்ள குழந்தைகள் 12 – 14 மணி நேரம்வரை தூங்கலாம். 3 முதல் 5 வயது குழந்தைகள் 10 – 13 மணி நேரம் தூங்கும். 6 முதல் 12 வயது வரை உள்ள குழந்தைகள் 9 – 12 மணி நேரம் தூங்கலாம். இடையில் தூக்கம் கெடாமல் குழந்தைகள் உறங்க வேண்டியது ரொம்ப முக்கியம்.

குழந்தைகள் நல ஆயுர்வேத மருத்துவர் செந்தி அரசி

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆயுர்வேதம்!

குழந்தைகளுக்கு உடல் எடையை அதிகரிக்க, அஷ்வகந்தா பொடியை பால்ல கலந்து கொடுக்கலாம். சவனபிராசம், அஷ்வகந்த லேகியம், கூஸ்மாண்ட அவலேகம் போன்ற மருந்துகள் ஆயுர்வேதத்தில இருக்கு. இதை உங்க பக்கத்தில இருக்கிற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில உள்ள ஆயுர்வேத மருத்துவர்கிட்ட ஆலோசனை பெற்று, குழந்தைங்களுக்குத் தொடர்ந்து கொடுக்கலாம். நீரிழிவு நோய், ஆஸ்துமா போன்ற பிரச்னை உள்ள குழந்தைங்கள் மருத்துவர் ஆலோசனைக்கேட்டு தாளிசாதி சூரணம், தசமூல கடுத்ரேய கஷாயம் போன்ற மருந்துகளை எடுத்துக்கலாம். தொடர்ந்து இந்த மருந்துகளை எடுக்கணும்னு இல்ல. முதலில் ஒரு ஏழு நாள்கள் மருந்து எடுத்துட்டு, அடுத்ததா ஏழு நாள்கள் இடைவெளி விட்டு மீண்டும் ஏழு நாள்கள் என்ற கணக்குல, உடம்புத் தகுதிக்கு ஏத்த மாதிரி, மருத்துவர்கிட்ட ஆலோசனை பெற்று மருந்து எடுத்துக்கலாம்.

மருத்துவர் ஆலோசனை மிக முக்கியம்!

வெற்றிலை, ஆடாதொடை, துளசி, ஓமவல்லி இதோட சாற்றை எடுத்து, சம அளவு தேன் கலந்து, ஒரு ஸ்பூன் அல்லது ரெண்டு ஸ்பூன் காலை, மாலையில எடுத்துக்கலாம். இதனால சளி விலகும். மூலிகை மருந்துகளை மருத்துவர் ஆலோசனை இல்லாம தொடர்ந்து பல நாள்கள் எடுத்துக்கக் கூடாது. முறையான ஆலோசனைக்குப் பிறகு எடுத்துக்கலாம். ஆகாரத்தில் அதிகமாக இஞ்சி, பூண்டு, மிளகு, சீரகம், ஓமம், சோம்பு, நெல்லிக்காய், மஞ்சள் சேர்த்துக்கலாம். பாலில் மஞ்சள் அல்லது சுக்கு கலந்து கொடுக்கலாம். தூங்குறதுக்கு இரண்டு மணி நேரம் முன்னாடியே பால் கொடுக்கணும். இதுபோன்ற உணவுப் பழக்கங்களால் குழந்தைகளோட எதிர்ப்புசக்தி அதிகமாகும்.

துளசி

Also Read: கொரோனா : அச்சம் தரும் கேரளா, மகாராஷ்டிரா நிலவரம்… மூன்றாம் அலை இந்தியாவில் தொடங்கிவிட்டதா?!

ஐந்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு துளசி, வேப்பிலை, யூக்கலிப்டஸ் ஆயில் போட்டு ஆவி பிடிக்கலாம். அதிகபட்சம் ரெண்டு, மூணு நிமிஷம்வரைதான் குழந்தைங்களுக்கு ஆவி பிடிக்கணும். தலைவலி, சளி பிரச்னை உள்ள குழந்தைங்களுக்கு தாளிசாதி சூரணம், ராசனாதி உச்சிப்பொடி வைக்கிறது எல்லாம் செய்யலாம். காய்ச்சல் வந்து நான்கு, ஐந்து நாள்கள் இருந்தாலோ, வயிற்றுப்போக்கு, வயிற்றுவலி, வாந்தி, கண் சிவந்து இருப்பது, மூச்சுவிட சிரமப்படுறது போன்ற பிரச்னைகள் இருந்தாலோ. ஆக்ஸிஜன் 95-க்கு கீழ வந்தாலோ உடனே டாக்டர்கிட்ட போகணும்.

குழந்தைகளை பொது இடங்களுக்கு அழைத்துப் போவதைத் தவிர்க்கணும். மாஸ்க், சானிடைசர், சமூக இடைவெளி போன்ற நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை குழந்தைகளை தவறாமல் பின்பற்ற வைக்கணும். ஆயுர்வேதத்தில் சொல்லப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடித்து குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தி, கொரோனா மூன்றாவது அலையில் இருந்து குழந்தைகளைக் காப்போம்” என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.