உலகிலேயே மிகக்குறைந்த குற்றங்கள் நடக்கும் நாடான சிங்கப்பூர், தற்போது ஒரு கொலைக் குற்றத்தால் உறைந்து போயுள்ளது. ஒட்டுமொத்த சிங்கப்பூர் மக்களிடமும் பேசுபொருளாகியுள்ள அந்தக் கொலை குற்றத்தை செய்தது, ஒரு பள்ளி மாணவர் என்பது முதல்கட்ட தகவலில் தெரியவந்துள்ளது.

சிங்கப்பூரின் புகழ்பெற்ற பள்ளிகளில் ஒன்று ரிவர் வேலி ஹை ஸ்கூல். இந்தப் பள்ளியில் இருந்து அந்நாட்டு காவல்துறைக்கு நேற்று ஓர் அழைப்பு வந்தது. அந்த அழைப்பில் 13 வயது மாணவர் ஒருவர் பள்ளி கழிப்பறையில் உயிரற்ற நிலையில் இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே பள்ளிக்கு விரைந்த காவல்துறையினர், மாணவர் உயிரிழந்த இடத்தில் ஒரு கோடரி கிடக்க, அதனைக் கைப்பற்றி விசாரணையைத் தொடங்கினர்.

image

அப்போது மற்ற மாணவர்கள், ஒரு மாணவர் கோடரியுடன் சென்றதாக குறிப்பிட, சில மணிநேரங்களில் 16 வயது மாணவர் ஒருவரை கைது செய்தனர் போலீசார். அந்த மாணவரிடம் நடத்திய விசாரணையில் கொலைக் குற்றத்தை ஒப்புக்கொண்டாலும், எதற்காக கொலை செய்தார் என்பதை தெரிவிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. எனினும், கொல்லப்பட்ட மாணவருக்கும், கொலை செய்த மாணவருக்கும் எந்தவித சம்பந்தம் இல்லை என்று மட்டும் காவல்துறை தெரிவித்துள்ளது.

அந்த மாணவர் கைது செய்யப்பட்ட பின்புதான் மற்ற மாணவர்கள் வீட்டுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். பள்ளியில் மாணவர் கொலை என்ற தகவல் தெரிந்ததும், சிங்கப்பூர் முழுவதும் இந்தச் சம்பவம் பேசுபொருளாக ஆனது. இதனால் சம்பந்தப்பட்ட பள்ளியில் பெற்றோர்கள் குவியத் தொடங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே, கைது செய்யப்பட்ட மாணவரை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆஜர்படுத்தப்பட்டாலும், அப்போது அந்த மாணவர் மிகவும், அமைதியாக எதுவுமே பேசாமல் இருந்துள்ளார்.

image

இதையடுத்து, மாணவரை மனநல பரிசோதனைக்கு அனுமதிக்க வேண்டும் என அரசு தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். இதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. இதே மாணவர் கடந்த 2019-ல் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனால் ஏற்கெனவே ஒரு மருத்துவமனையில் மனநல சிகிச்சை எடுத்து வந்திருக்கிறார். இந்த சிகிச்சையில் இருந்து வந்த நிலையில்தான் இந்தக் கொலை குற்றத்தை செய்துள்ளார். இதற்காக கோடரியை ஆன்லைன் மூலமாக வாங்கி இருக்கிறார் அந்த மாணவர். இதையடுத்துதான் அவர் மீண்டும் மனநல சிகிச்சைக்கு அனுப்பப்பட்டு வருகிறார்.

வழக்கமாக கொலை குற்றத்துக்கு சிங்கப்பூரில் தண்டனைச் சட்டம் பிரிவு 302 (1)-இன் கீழ் மரண தண்டனை விதிக்கப்படும். ஆனால் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மாணவருக்கு 16 வயதே ஆவதால், அவருக்கு அதிகபட்சம் ஆயுள் தண்டனை விதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே, சிங்கப்பூர் பிரதம மந்திரி லீ ஹ்சியன் லூங், இந்தக் கொலை தொடர்பாக கூறும்போது, “இந்தச் சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை தந்துள்ளது. இறந்த மாணவரின் குடும்பத்துக்கு துணையாக அரசு நிற்கும். அதேநேரம், இந்த துயரத்தின் பின்னணியில் உள்ள உந்துதல்களைக் கண்டுபிடிப்பதற்கான விசாரணைகள் நடந்து வருகிறது. பள்ளிகளின் பாதுகாப்பு மற்றும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் நல்வாழ்வுக்கு நாங்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம்.

image

எங்கள் கல்வி முறை, நல்ல கல்வி செயல்திறனைப் பற்றியது மட்டுமல்லாமல், எங்கள் குழந்தைகள் மகிழ்ச்சியான மற்றும் நன்கு சரிசெய்யப்பட்ட நபர்களாக வளர உதவுகிறது” என்று தெரிவித்துள்ளார்.

இதேபோல், சிங்கப்பூரின் சட்டம் மற்றும் உள்துறை அமைச்சர் கே.சண்முகம்  “கொலையுண்ட மாணவரின் மறைவையொட்டி அவரது பெற்றோருடன் நாங்கள் அனைவரும் துக்கத்தை பகிர்ந்துகொள்கிறோம். அவர்களின் துயரத்தை ஆழத்தை விளக்குவது உண்மையிலேயே மிகவும் கடினமானது” என்று கூறியிருக்கிறார்.

image

இந்தச் சம்பவம் தொடர்பாக சிங்கப்பூர் மக்கள் தற்போது ஆன்லைனில் தீவிரமாக விவாதிக்க தொடங்கியுள்ளனர். இதனால், இந்தச் சம்பவம் அங்கு தற்போது பரபரப்புக்குள்ளாகி உள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.