நாடகம், திரைப்படம், தொலைக்காட்சி என எல்லாத் தளங்களிலும் தனிமுத்திரை பதித்து சிகரம் தொட்டர் இயக்குநர் சிகரம்; ரஜினி, கமல் என தமிழ் சினிமாவின் ஆளுமை பிம்பங்களை கட்டமைத்த கே.பாலச்சந்தருக்கு 91-வது பிறந்த தினம் இன்று.
 
திருவாரூர் அருகேயுள்ள நன்னிலம் கிராமத்தில் பிறந்து இயக்குநர் சிகரம் என கொண்டாடும் அளவிற்கு வளர்ந்தவர் கே.பாலச்சந்தர். ஆசிரியர் பணியில் இருந்துகொண்டு நாடகங்களில் கவனம் செலுத்தத் தொடங்கிய அவர், அவற்றில் பரீட்சார்த்தமாக பல முயற்சிகளை முன்னெடுத்தார். அதுதான், திரையிலும் பல புதுமைகள் படைக்க உறுதுணையானது. எம்.ஜி.ஆர் நடித்த ‘தெய்வத்தாய்’ படத்திற்கு உரையாடல் எழுதி, திரைத்துறைக்குள் வந்தார் கே.பாலச்சந்தரை, அந்தப் படத்தின் கூர்மையான வசனங்கள் பிரபலமடைய வைத்தது. தொடர்ந்து, அவர் கதை எழுதிய ‘சர்வர் சுந்தரம்’ படம் பெரும் வெற்றியடைந்தது.
 
image
கதாசிரியராக, வசனகர்த்தாவாக வெற்றியடைந்த கே.பாலச்சந்தர் இயக்குநரான படம் ‘நீர்க்குமிழி’. நாடகமாகவே பெரும் வெற்றியடைந்த இந்தப் படம் அதுவரை தமிழ் சினிமாவிற்குள் இருந்த சில போலி நம்பிக்கைகளை தகர்த்து வெற்றியையும் பெற்றது. சிவாஜி நடித்த ‘எதிரொலி’ படத்தின் தோல்விக்குப் பிறகு, முன்னணி நடிகர்களை இயக்குவதை தவிர்த்த கே.பாலச்சந்தர் அடுத்த தலைமுறை கலைஞர்களான கமல்ஹாசனையும், ரஜினிகாந்தையும் தன் பிரதானமாக்கத் தொடங்கினார்.
 
அந்தந்த காலகட்டத்தில் சமூகத்திற்கு எது தேவையோ அதனை கருப்பொருளாக்கி திரைக்கதை அமைப்பதில் வல்லவர் கே.பாலச்சந்தர். எதிர் நீச்சல், மேஜர் சந்திரகாந்த், நாணல், வறுமையின் நிறம் சிவப்பு என அவரது பல திரைப்படங்களை அதற்கு உதாரணமாக்க முடியும்.
 
image
ஒருபுறம் அழுத்தமும் கனமும் நிறைந்த படைப்புகளை கொடுத்த கே.பாலச்சந்தர் முழுக்க முழுக்க நகைச்சுவை நிறைந்த பூவா தலையா, தில்லுமுல்லு போன்ற படங்களையும் இயக்கி அசத்தினார். அதுதான், பாலச்சந்தர் இப்படித்தான் இருக்கும் என்கிற முன் யோசனை எதுவுமின்றி ரசிகர்களை திரையரங்கு இழுத்து வந்தது.
 
நாடகங்கள், திரைப்படங்கள் போன்றே தொலைக்காட்சியில் புதுமைகள் படைத்த கே.பாலச்சந்தர் திரைத்துறையின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது, தேசிய விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகள் என எக்கச்சக்கமான அங்கீகாரங்களை பெற்றிருக்கிறார். இன்றும் புதுமை பேசும் அவரது படைப்புகள் என்றென்றும் கே.பாலச்சந்தர் எனும் பெரும் படைப்பாளியின் பெருமைகளை பேசிக்கொண்டே இருக்கும்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.