நாடு முழுவதும் கொரோனா வைரஸிடம் இருந்து மக்களை பாதுகாக்க 18 வயது பூர்த்தி அடைந்த அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி நடந்து வருகிறது. அதேநேரத்தில் கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்படாமல் இருந்தது. கொரோனா வைரஸால் கர்ப்பிணிகள் பலர் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், கர்ப்பிணிகளுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தலாம் என சமீபத்தில் அரசு அறிவித்தது.
 
ஆனால், கர்ப்பிணிகள் தடுப்பூசி போட்டுக்கொள்ள அச்சமும் தயக்கமும் கொள்வதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆர்வம் உள்ள சிலருக்கு அவர்களின் குடும்பத்தினர், தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டாம் என்று கூறுவதால் அவர்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வருவதில்லை. எனவே கொரோனா தடுப்பூசி குறித்து கர்ப்பிணிகளுக்கு எழும் பொதுவான சந்தேகங்களுக்கு விளக்கமளிக்கிறார், ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரியின் உதவி பேராசிரியர் சாய் லட்சுமிகாந்த்.
 
image
கர்ப்பிணிகள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதால் ஆபத்தான பக்கவிளைவுகள் ஏற்படுமா?
 
“இல்லை. தடுப்பூசிகள் போட்டுக்கொள்வதால் கர்ப்பிணிகளுக்கு பிரத்யேகமான ஆபத்தான பக்கவிளைவுகள் ஏற்பட வாய்ப்பில்லை.
 
கர்ப்பிணிகள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வது கருவிலிருக்கும் குழந்தைக்கும் உதவுமா?
 
நிச்சயமாக உதவும். கர்ப்பக் காலத்தில் கர்ப்பிணிப் பெண்களுக்கு என்று தடுப்பூசிகள் ஏற்கெனவே போடப்பட்டு வருகின்றன. அவை தாயை மட்டுமல்ல, வயிற்றில் வளரும் குழ்ந்தையின் பாதுகாப்புக்காகவும் போடப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. தாயின் உடம்பில் ஏற்படும் கொரோனா தொற்றிற்கான எதிர்ப்பு திறன் நஞ்சுக்கொடி வழியாக சேய்க்கும் செல்ல வாய்ப்புள்ளது. அதனால் பிறந்த குழுந்தைக்கும் கொரோனா நோய்க் கிருமியை எதிர்கொள்ளும் ஆற்றல் உண்டாகும். கொரோனா தொற்று ஏற்பட்டாலும் பாதிப்புகள் ஏற்படாது.
கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் கொரோனா தொற்றால் குழந்தை என்ன பாதிப்பை சந்திக்கும்?
 
கர்ப்பக் காலத்தில் ஏற்படும் கொரொனா தொற்று பெரிய பாதிப்புகளை தாய்க்கும் சேய்க்கும் விளைவிக்க கூடும். தாயை பொறுத்தவரையில் மூச்சுத்திணறல், ரத்தம் உறையும் தன்மை அதிகரித்தல், வலிப்பு நோய், ரத்தக்குழாய் அடைப்பு போன்றவைகள் ஏற்படக் கூடும். சேயை பொறுத்தவரை கொரோனா தொற்று பாதிப்புக்குள்ளான தாய்க்கு உடலில் ஆக்சிஜன் குறைபாடு ஏற்படுமானால் கருவில் உள்ள குழந்தைக்கு வளர்ச்சி குறைபாடு, மூளை வளர்ச்சி குறைபாடு, கருக் கலைதல் போன்ற பாதிப்புகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. பிறந்த பிறகும் மூச்சுத்திணறல், வயிற்றுப்போக்கு, பால் குடிப்பதில் சிக்கல், வளர்ச்சி குறைபாடு போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது.
 
புதிதாகப் பிறந்துள்ள குழந்தைகளுக்கும் கொரோனா தொற்று ஏற்படுமா?
 
ஏற்படலாம். நோய் கிருமிக்கு குழந்தை, பெரியவர்கள் என்று வித்தியாசம் எதுவும் தெரியாது. தொற்று ஏற்பட்டாலும் பெரும்பான்மை பச்சிளம் குழந்தைகளுக்கு பாதிப்பு கடந்த இரண்டு அலைகளில் பெரிதாக ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
image
நாட்டில் கொரோனா 2-வது அலையில் கர்ப்பிணி பெண்கள் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்கிறது ஐ.சி.எம்.ஆர். கர்ப்பிணிகளை கொரோனா வைரஸ் குறிவைப்பது ஏன்? கொரோனாவிலிருந்து தப்பிக்க கர்ப்பிணிகள் செய்ய வேண்டியது என்ன?
 
கர்ப்பிணிகள் இரண்டாவது அலையில் பாதிக்கப்பட்டது உண்மைதான். எப்படி அனைத்து தரப்பினர் மத்தியிலும் இரண்டாம் அலை தன் கோரப்பிடியை செலுத்தியதோ அதேபோல் கர்ப்பிணிகளையும் தாக்கியுள்ளது. கர்ப்பிணிகள் ஏற்கெனவே கர்ப்பக் காலத்தில் ஏற்படும் உடல் ரீதியான மாற்றங்களால் அதிக பாதிப்புக்குள்ளாகின்றனர். குறிப்பாக கர்ப்பக் காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு ஏற்படும். ரத்தம் உறையும் தன்மை அதிகரிக்கும். உணவு உட்கொள்ளுதலில் பலருக்கு பிரச்னை ஏற்படும். உடம்பில் ரத்த அணுக்குள் குறைபாடு ஏற்படும். இவை எல்லாம் இயற்கையாக நடப்பவை. ஆனால் இதுவே கர்ப்பக் காலத்தில் கொரோனா தாக்கும்போது அதன் பாதிப்புகளை அதிகரிக்கக் கூடிய காரணிகளாக மாறிவிடுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
 
கொரோனாவிலிருந்து கர்ப்பிணிகள் தங்களை தற்காத்துக் கொள்வது மிகவும் அவசியமான ஒன்று. வெளியில் செல்வதை தவிர்த்தல், வீட்டிலேயே இருத்தல், விருந்தினர்களையோ வெளியாட்களையோ சந்திப்பதை தவிர்த்தல், வீட்டில் இருந்தாலும் முகக்கவசம் அணிந்திருத்தல், அடிக்கடி சோப்பு பயன்படுத்தி கை கழுவுதல், குடும்ப விழாக்கள், வளைகாப்பு போன்ற நிகழ்ச்சிகளை ஒத்திவைத்தல், முக்கியமாக தடுப்பூசியை செலுத்திக்கொள்வது போன்றவற்றை கடைப்பிடித்தால் தாயும் சேயும் எந்த பாதிப்பிற்கும் உள்ளாகாமல் கொரோனாவிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.