சட்டமன்றக் கூட்டத்தொடரை வரும் 24ஆம் தேதி வரை நடத்த அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆளுநர் உரை மீது நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு வியாழன் அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் உரையாற்றுகிறார்.

பெரியார் காண விரும்பிய தமிழகமாக மாற்றுவோம்: தந்தை பெரியார் காண விரும்பிய சுயமரியாதை சமூகமாகவும், உரிமை பெற்ற மக்களாகவும் மாற்ற கலைஞர் அளித்த பாதையில் பீடு நடை போடுவோம் என ஆளுநர் உரையில் தெரிவித்தார். இந்தியாவின் ஈடு இணையற்ற மாநிலம் இன்பத் தமிழ்நாடு என்பதை நிரூபித்துக் காட்டுவோம் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.

வேளாண்மை துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை: உழவர் நலனை பேணவும், வேளாண் உற்பத்தியை பெருக்கவும் வேளாண்மை துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை வெளியிடப்படும் என்றும், கருணாநிதியால் தொடங்கப்பட்ட உழவர் சந்தைகளுக்கு மீண்டும் புத்துயிர் ஊட்டப்படும் என்றும் ஆளுநர் அறிவித்துள்ளார்.

தமிழை இணை அலுவல் மொழியாக்க வேண்டும்: ஒன்றிய அரசு வழங்கும் கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கையை உயர்த்திட வேண்டும் எனவும், தமிழை ஒன்றிய அரசின் அலுவலகங்களிலும், வங்கிகளிலும் இணை அலுவல் மொழியாக பயன்படுத்த வேண்டும் எனவும் ஆளுநர் வலியுறுத்தியுள்ளார்.

நீட் – தேவையான சட்டங்கள் இயற்றப்படும்: தமிழகத்தில் நீட் தேர்வால் மாணவர்கள் பாதிப்படையாமல் இருக்க தேவையான சட்டங்கள் நிறைவேற்றப்படும் எனவும், கொரோனா பெருந்தொற்று தீவிரம் குறைந்தவுடன் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நிபுணர்கள் அடங்கிய பொருளாதார ஆலோசனைக் குழு: நோபர் பரிசு பெற்ற எஸ்தர் டஃப்ளோ, முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் அடங்கிய பொருளாதார ஆலோசனைக் குழு அமைக்கப்படும். தமிழ்நாடு மின்உற்பத்தி பகிர்மான கழக நிதிநிலை மற்றும் நிர்வாக கட்டமைப்பு குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

69% இட ஒதுக்கீடு தொடர்ந்து பாதுகாக்கப்படும்: தமிழகத்தில் வழங்கப்படும் 69% இட ஒதுக்கீடு தொடர்ந்து பாதுகாக்கப்படும். தமிழ்நாட்டில் உள்ள ஒன்றிய அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்களில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களுக்கு பணி நியமனங்களில் முன்னுரிமை வழங்கவும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேகதாது திட்டத்தை ஒன்றிய அரசு நிராகரிக்க வேண்டும்: கர்நாடக அரசால் திட்டமிடப்பட்டுள்ள மேகதாது அணை திட்டத்தை ஒன்றிய அரசு நிராகரிக்க வேண்டும் என ஆளுநர் வலியுறுத்தி உள்ளார். மேலும் கச்சத்தீவை மீட்பது குறித்து ஒன்றிய அரசுக்கு தொடர்ந்து வலியுறுத்துவோம் என்றும் உரையில் தெரிவித்துள்ளார்.

கனிம வள கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும்: கனிம வளங்களை கொள்ளை அடிப்பவர்களை கடுமையான முறையில் கையாள வேண்டும் என உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. தமிழக அரசு உடனடி கவனம் செலுத்தி கனிம வளங்கள் எடுப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தி இருக்கிறது.

கொரோனா பரவலை தடுக்க அரசு தவறிவிட்டது: கொரோனா பரவலை தடுக்க அரசு தவறிவிட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டியுள்ளார். கொரோனா மரணங்களும் மறைக்கப்பட்டுவிட்டதாகவும் அவர் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

‘பப்ஜி’ மதன் மீது குவியும் புகார்கள்: பண மோசடி செய்ததாக பப்ஜி மதன் மீது மின்னஞ்சல் மூலம் புகார்கள் குவிந்தவண்ணம் உள்ளன. மத்திய குற்றப்பிரிவின் சைபர் க்ரைம் போலீஸார் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

பட்டாசு விபத்து – 3 பேர் பலி; ஒருவர் கைது: விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் அனுமதியின்றி பட்டாசு தயாரித்தபோது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ளது. இதில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மூன்று பேர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

40 நாட்களுக்குப் பிறகு பேருந்து சேவை: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பேருந்து சேவை மீண்டும் தொடங்கியது. சென்னையில் காலை மற்றும் மாலையில் 5 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்களும் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநகர பேருந்தின் டயர் வெடித்து விபத்து: சென்னையில் மாநகர பேருந்தின் முன்பக்க டயர் வெடித்து விபத்து ஏற்பட்டது. ஓட்டுநர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதில் 5க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர்.

ரூ.1,000 பஸ் பாஸ் ஜூலை 15 வரை செல்லும்: ஏற்கனவே வாங்கிய ஆயிரம் ரூபாய் பஸ் பாஸ் ஜூலை 15ஆம் தேதி வரை செல்லும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவித்துள்ளார்.

நீட் தேர்வுக்கு நிச்சயம் விலக்கு பெறப்படும்: நீட் தேர்வுக்கு நிச்சயம் முதலமைச்சர் விலக்கு பெற்றுத் தருவார் என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நம்பிக்கை அளித்துள்ளார்.

நோய்நாடி நோய்முதல் நாடி: கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் யோகா நம்பிக்கை ஒளியாக திகழ்கிறது என பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்தார். திருக்குறளை சுட்டிக்காட்டி சர்வதேச யோகா தினத்தில் அவர் உரையாற்றினார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.