பிரதமரிடம் வலியுறுத்தப்பட்ட கோரிக்கைகள் என்னென்ன என்பது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தகவல் தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து ஆலோசனை நடத்தினார். பிரதமருடன் சந்திப்பின்போது முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். 

image

பிரதமர் உடனான சந்திப்புக்கு பின், செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “டெல்லியில் உள்ள அனைத்து ஊடக நண்பர்களுக்கும் வணக்கம். தமிழ்நாடு முதலமைச்சரான பிறகு முதல்முறையாக டெல்லிக்கு வந்திருக்கிறேன். கொரோனா பெருந்தொற்று பணிகள் காரணமாக பிரதமரை முன்கூட்டி சந்திக்க இயலவில்லை. பிரதமருடன் நடந்த சந்திப்பு மகிழ்ச்சியான, மனநிறைவான சந்திப்பாக அமைந்தது. தமிழ்நாட்டின் கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமரிடம் வழங்கியுள்ளேன். எந்த கோரிக்கைகள் தொடர்பாகவும் எந்த நேரத்திலும் தன்னை தொடர்பு கொள்ளலாம் என பிரதமர் கூறியுள்ளார். 

ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் எனக் கேட்டுள்ளேன்.

மேகதாது அணைத் திட்டத்துக்கு அனுமதிக்கப்பட்ட அனுமதியை ரத்து செய்யக் கேட்டுக் கொண்டேன்.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை விரைவாக அமைக்க வேண்டும் என வலியுறுத்தினேன்.

மருத்துவக் கல்வியில் இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு அளிக்க வலியுறுத்தினேன்.

குடியுரிமை திருத்தச் சட்டம், வேளாண் சட்டங்களை திரும்பப் பெற கேட்டுக் கொண்டேன்.

கூடுதல் தடுப்பூசிகளை தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டும் என கோரியுள்ளேன்.

செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தை உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டு வர கோரினேன்.

நீட் உள்ளிட்ட அனைத்து நுழைவுத்தேர்வுகளையும் ரத்து செய்ய வேண்டுமென கோரிக்கை வைத்தேன்.

திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கு சலுகை வழங்க கேட்டுக்கொண்டேன்.

புதிய கல்விக் கொள்கையை திரும்பப் பெற வேண்டும் எனவும் பிரதமரிடம் வலியுறுத்தினேன்.

தமிழ்நாட்டில் உள்ள இலங்கை அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க கேட்டுக்கொண்டேன்.

சேது சமுத்திர திட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு பிரதமரிடம் வலியுறுத்தினேன்.

7 பேர் விடுதலை விவகாரத்தில் நீதிமன்றத்தின் போக்கை பொறுத்து தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கும்.

தேர்தல் நேரத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளோம்.

தலைநகரில் உள்ள தமிழ் ஊடகங்களும் தமிழ்நாட்டு மக்களுக்காக வாதாட வேண்டும்.

கச்ச தீவை மீட்க நடவடிக்கை, சென்னை மெட்ரோ 2ஆம் வழித்தடம் தொடக்கம் ஆகியவற்றையும் கோரினேன்.

கோரிக்கைகளுக்கான காரண காரியங்களை பிரதமரிடம் சொல்லியுள்ளோம்” என்றார்.

முன்னதாக, தமிழ்நாடு அரசின் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் முதல் முறையாக டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார். சென்னையில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காலை 10 மணி அளவில் டெல்லி விமான நிலையம் சென்றார். அவரது மனைவி துர்கா ஸ்டாலினும் உடன் சென்றார். டெல்லி சென்ற முதலமைச்சருக்கு, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், தமிழ்நாடு அரசின் டெல்லி பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், திமுக எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர்.

அதனைத் தொடர்ந்து டெல்லியில் கட்டப்படும் திமுக அலுவலகத்திற்குச் சென்று, பணிகளை ஆய்வு செய்தார். பின்னர் தமிழ்நாடு இல்லத்திற்கு சென்ற முதலமைச்சருக்கு காவல்துறை அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.