ஐசிசி இதுவரை 50 ஓவர் உலகக் கோப்பை, டி20 உலகக் கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் கோப்பை போட்டிகளை மட்டுமே நடத்தி வந்தது. டி20 போட்டிகள் காரணமாக பாரம்பரியமான டெஸ்ட் போட்டிகளை காணும் ஆர்வம் குறைந்தது. இதனை சரி செய்ய சில முயற்சிகளை மேற்கொண்டது. அதன் விளைவாகவே பிங்க் நிற பந்தில் பகலிரவு டெஸ்ட் போட்டிகளை நடத்த தொடங்கியது. இது கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதனையடுத்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் நாடுகளை ஊக்குவிக்கும் வகையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியை அறிவித்தது. இந்த அறிவிப்பை 2019 ஆம் ஆண்டு அறிவித்தது. மேலும் டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் 8 நாடுகளுக்கான போட்டி அட்டவணையையும் வெளியிட்டது.

image

இதுவரை ஒருநாள், டி20 உலகக் கோப்பையை மட்டும் பார்த்த ரசிகர்களுக்கு ஐசிசியின் இந்த அறிவிப்பு பெரும் எதிர்பார்ப்பை தூண்டியது. ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் 2021-ஆம் ஆண்டு இறுதிப் போட்டியை லார்ட்ஸ் மைதானத்தில் விளையாடும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து 2019-ஆம் ஆண்டு முதல், டெஸ்ட் தர வரிசையில் முதல் இரண்டு இடங்களை பிடிக்க கடும் போட்டி நிலவியது. இதில் இந்தியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் இந்த வரிசையில் முதல் இரு இடங்களை பிடிக்க ஆடுபுலி ஆட்டத்தை விளையாடியது என்றே சொல்ல வேண்டும்.

இறுதியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இந்தப் பட்டியலில் புள்ளிகள் மற்றும் வெற்றி சதவிதத்தின் அடிப்படையில் முதல் இரண்டு இடங்கள் பிடித்தது. இதனையடுத்து இரு அணிகளும் வரும் ஜூன் 18 ஆம் தேதி இங்கிலாந்தின் சவுத்தாம்டன் நகரில் இருக்கும் ரோஸ் பவுல் மைதானத்தில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் மல்லுக்கட்டுகிறது. முன்னதாக இந்தப் போட்டி லண்டனில் இருக்கும் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் கொரோனா காரணமாக இறுதிப் போட்டி சவுத்தாம்டன் நகருக்கு மாற்றப்பட்டது. விராட் கோலி தலைமையிலான அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் பங்கேற்க இருப்பது பெரும் கெளரவமாக பார்க்கப்படுகிறது.

image

இந்தியா கடந்து வந்த பாதை….

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி அறிவிக்கப்பட்டதும் இந்தியா முதலில் வெஸ்ட் இண்டீஸ் உடன் டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப் பயணம் செய்த கோலி தலைமையிலான இந்திய அணி 2-0 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி சாதித்தது. அந்தத் தொடரில் இஷாந்த் சர்மா, பும்ரா, ரஹானே மற்றும் ஹனுமா விஹாரி ஆகியோர் ஸ்டார்களாக ஜொலித்தனர். அந்தத் தொடரில் பும்ரா ஹாட்ரிக் விக்கெட் எடுத்தது மட்டுமல்லாமல் 257 ரன்கள் என்ற வித்தியாசத்தில் பெரிய வெற்றியை ருசித்தது.

அதேபோல அதே ஆண்டில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தி கோலி தலைமையிலான இந்திய அணி அபார வெற்றிப்பெற்றது. அந்தத் தொடரில் மயாங்க் அகர்வால், ரோகித் சர்மா, கோலி, ரஹானே ஆகியோர் பேட்டிங்கில் அசத்தினர். அதேவேளையில் பவுலிங்கில் ஒற்றை ஆளாக அஸ்வின் தன் சுழற்பந்து வீச்சால் தென் ஆப்பிரிக்கா பேட்ஸ்மேன்களை திணறவைத்தார். அந்த்த தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் பட்டியலில் முதலிடத்தை பிடித்தார் அஸ்வின்.

image

அதே ஆண்டில் இறுதியாக வங்கதேச அணியுடன் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது இந்தியா. வங்கதேசத்தை 2-0 என்ற கணக்கில் ஊதித்தள்ளியது இந்தியா. இந்தத் தொடரில் மயாங்க் அகர்வால் ஒரு இன்னிங்ஸில் 243 ரன்களை விளாசினார். அதேவேளையில் உமஷே் யாதவ் ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். வங்கதேசத்துடனான பெரிய வெற்றிகள் இந்தியாவின் புள்ளிகளை விறுவிறுவென உயர்த்தியது. இதனால் தரவரிசைப் பட்டியலில் வேகமாக முந்தியது இந்திய அணி.

தொடர் வெற்றிகள் இந்தியாவுக்கு திருஷ்டியாக அமைந்தது. 2020 தொடக்க்திதல் இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டது. அங்கு நியூசிலாந்துக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை இழந்தது. இந்திய பேட்ஸ்மேன்களை நியூசிலாந்து பவுர்கள் கசக்கி பிழிந்தனர். இதன் பிறகு கொரோனா பரவியதால் இந்திய அணி அத்துடன் 2020-இல் டிசம்பர் மாதம் ஆஸ்திரேலிய தொடருக்கு சென்றது. அதில் முதல் டெஸ்ட்டில் 2 ஆம் இன்னிங்ஸில் 36 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தது. அதன் பின்பு சிட்னி போட்டியை டிரா செய்த இந்தியா, மெல்பர்ன் மற்றும் காபா டெஸ்ட்டில் வெற்றி வாகை சூடி அசத்தியது.

image

இதன் பின்பு நாடு திரும்பிய இந்திய அணி உள்நாட்டில் இங்கிலாந்தை எதிர்த்தது. இதிலும் முதல் டெஸ்டில் தோற்ற இந்தியா அடுத்த 3 டெஸ்ட்களை வென்று அசத்தி தரவரிசையில் முதலிடம் பெற்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிக்கு தகுதிப்பெற்றது. ஏறக்குறைய 2 ஆண்டுகளில் இந்திய அணி 4 டெஸ்ட் தொடர்களில் 4 நாடுகளுடன் விளையாடி அதில் ஒரு தொடரை மட்டுமே இழந்துள்ளது. இது இந்திய டெஸ்ட் அணியின் வரலாற்றில் மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. இந்தப் பெருமையையும் சாதனையயையும் இந்திய அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் கோப்பையை வெல்வதன் மூலம் மேலும் நிரூபிக்குமா என்பத பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

– ஆர்.ஜி.ஜெகதீஷ்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.