வியர்வை சிந்தி வயலில் நாற்று நடும் பணியில் ஈடுபட்ட பெண்கள் தங்களுக்கு களைப்பு தெரியாமல் இருக்க, பல பாடல்களைப் பாடியும் நடனமாடியும் உற்சாகமாக தங்கள் வேலையை தொடர்ந்த செயல், காண்போரை நெகிழவைத்துள்ளது. வாருங்கள், அந்த நெகிழ் புதுக்கோட்டை மாவட்டம் கருக்காக்குறிச்சி ராஜாகுடியிருப்பு வயல்வெளியில் சற்றே வலம் வருவோம்.

வறுமை சூழ்ந்த வாழ்க்கை, வயல்வெளிகளில் வேலை, வியர்வை சிந்தி உழைத்தால் மட்டுமே கூலி என கனவுகளைத் தொலைத்த கண்ணீரோடு வாழ்வை நகர்த்தி வருகின்றனர். அவ்வாறு வயல்வெளிகளில் நாற்று நடுவது உள்ளிட்ட பணிகளில் ஈடுபடும் பெண்கள் உடல் வலி தெரியாமல் இருக்கவும், தொய்வின்றி பணிகள் நடைபெறவும் நாட்டுப்புற பாட்டு, தெம்மாங்கு பாட்டு, சினிமா பாடல்கள் என ஒன்று சேர பாடியும் ஆடியும் கவலைகளை மறந்து உற்சாகத்தோடு இருப்பது வழக்கம். இன்றும் கிராமப்புறங்களில் பெண்கள் நாற்று நடும் பணிகளில் ஈடுபட்டு வருவது காண்போரை கண்கவர வைத்தாலும், அதனை சுமையான சுகமாக கருதி உற்சாகத்தோடு தங்களது வாழ்வை நகர்த்தி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த விவசாயக் கூலித் தொழிலாளி பெண்கள்.

image

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி நெடுவாசல் கருக்காகுறிச்சி மற்றும் அதனை சுற்றிய பகுதிகளில் தொன்று தொட்டு இன்றளவும் அப்பகுதி விவசாயிகள் நெல் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.மாவட்டத்தின் மற்ற பகுதிகளில் ஒரு போக சாகுபடிக்கு வழியின்றி விவசாயிகள் தவித்தாலும் இந்த பகுதிகளை பொறுத்தவரையில் மின்மோட்டார் பாசனம் மூலம் முடிந்தவரை முப்போக சாகுபடி ஆண்டுதோறும் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

லாபம் வந்தாலும் நட்டம் வந்தாலும் அதனை தங்களுக்குள்ளேயே தாங்கிக் கொண்டு எப்படியாவது ஒரு போக சாகுபடியில் இழந்த பணத்தை அடுத்த போக சாகுபடியில் மீட்டுவிடலாம் என்ற நம்பிக்கையோடுதான் காலங்காலமாய் இப்பகுதி விவசாயிகள் நெல் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் இவர்களின் வாழ்வாதாரம் இன்றளவும் உயர்ந்ததாக தெரியவில்லை.

இந்நிலையில்தான் புதுக்கோட்டை மாவட்டம் கருக்காக்குறிச்சி வட தெரு ஊராட்சிக்குட்பட்ட ராஜா குடியிருப்பு கிராமத்தில் முத்தையா என்பவர் தனது ஐந்து ஏக்கர் வயல் வெளிகளில் குறுவை சாகுபடி பணிகளை தொடங்கி இன்று நாற்று நடும் பணி நடைபெற்றது. இதற்காக அப்பகுதியைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட பெண்கள் வேலைக்காக அழைத்து வரப்பட்டு அவர்கள் மும்முரமாய் நாற்று நடும் பணியில் ஈடுபட்டனர்.

image

அவ்வாறு நாற்று நடும்போது தங்களுக்கு களைப்பு தெரியாமல் இருக்கவும் பணி சுணக்கம் இன்றி மும்முரமாய் நடைபெறும் அந்தத் தொழிலாளர்கள் தங்களுக்கு தெரிந்த நாட்டுப்புற பாடல்கள் மற்றும் தெம்மாங்கு பாடல்கள் மற்றும் சினிமா பாடல்களை அழகிய ராகத்தோடு ஒருவர் பாட மற்றவர் பின் தொடர்ந்து அதனை பாட உற்சாகத்தோடு நாற்று நடும் பணிகளில் ஈடுபட்டனர். அதுமட்டுமின்றி சில பெண்கள் அந்தப் பாட்டிற்கு ஏற்ப நடனங்களையும் ஆடிய நிகழ்வு காண்போருக்கு ஒரு இனம்புரியாத உணர்வுகளை ஏற்படுத்தியது.

இன்றைய விஞ்ஞான காலகட்டத்தில் நவீன வேளாண்மையின் தாக்கம் அதிகரித்து விட்டதால் இயந்திரங்கள் மூலம் நடவு செய்யும் பணிகள் கூட நடைமுறைக்கு வந்துவிட்ட நிலையிலும் கூட இன்னும் கருக்காகுறிச்சி உள்ளிட்ட அப்பகுதி கிராமங்களில் பாரம்பரியம் மாறாமல் கையால் நாற்று நடும் பணியில் அப்பகுதி பெண்கள் ஈடுபட்டு வருவதோடு அவர்களுக்கு உறுதுணையாக ஆண்களும் வரப்புகளை சரி செய்து கொடுப்பது வயல்வெளிகளை சமநிலை படுத்திக் கொடுப்பது உள்ளிட்ட வேலைகளில் உற்சாகமாக ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த அழகிய வயல்வெளியில் வேலைகள் மும்முரமாக நடந்து கொண்டிருக்க அங்கு வேலை பார்க்கும் பெண்கள் தங்கள் மனதிற்குள் ஆயிரம் கவலைகளை சுமந்தபடியே நாற்று நட்டாலும் அவற்றை எல்லாம் மறந்தபடி மெய்மறந்து அவர்கள் பாடிய பாட்டுக்கள் தென்றல் காற்றாய் அந்த வயல் வெளிகள் முழுவதும் பரவி புதியதொரு உற்சாகத்தைஅங்கு பணியாற்றியவர்களுக்கு ஏற்படுத்தியது காண்போருக்கு வியப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து நாற்று நடும் பணியில் ஈடுபட்ட பெண்கள் கூறுகையில், “எங்கள் பகுதி கிராமங்களில் பொருத்தவரையில் நாள்தோறும் கூலி வேலைக்கு வந்தால் மட்டுமே வயிற்றுப் பசியை போக்க முடியும் என்ற நிலையில் நாற்று நடுவது, களை பறிப்பது உள்ளிட்ட வேலைகளுக்கு சென்று தான் பெண்கள் தங்கள் குடும்பங்களை காத்து வருகிறார்கள்.

எங்களின் வாழ்க்கை வறுமையில் நகர்ந்தாலும் வேலைக்கு வரும் இடங்களில் அதனை மறந்து இதேபோல் உற்சாகமாக பாடல்கள் பாடியும் நடனங்கள் ஆடியும் வேலை செய்யும்போது தங்களின் உடல் அலுப்பு குறைவதோடு மனநிறைவும் ஏற்படுகிறது. இப்படித்தான் தொன்றுதொட்டு எங்களின் வாழ்வும் தொழிலும் நகர்ந்து கொண்டிருக்கிறது.

நாங்கள் மட்டுமின்றி எங்களைப் போல இப்பகுதியை சுற்றிய கிராமத்து பெண்கள் இதேபோல்தான் நாற்று நடும் இடங்களில் நாட்டுப்புற பாடல்களையும் சினிமா பாடல்களையும் தங்களுக்கு ஏற்ற ராகத்தில் பாடி உற்சாகமாகப் பணி செய்வார்கள். அப்படி செய்வதால்தான் வயலின் உரிமையாளர்களும் தொழிலாளர்களும் குறிப்பிட்ட நேரத்தில் தங்களது பணிகளை முடிக்க வழி வகையாக அமைந்துள்ளது.

image

எங்களின் வாழ்க்கை கண்ணீரில் கரைந்தாலும் வயல்வெளியில் கால் வைத்துவிட்டால் கண்ணீரை மறந்து உற்சாகத்தோடு உழைத்து அதன் பின்பு கிடைக்கும் சொற்ப கூலியைக் கொண்டு எங்கள் குடும்பத்தை நடத்தி வருகிரோம். இது எங்களுக்கு பழகிப் போய் விட்டது” என்று விவரித்தனர் ராஜா குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த நாற்று நடும் கூலித் தொழிலாளர்கள்.

இது அவர்களுக்கு பழகிப்போன ஒரு நடைமுறை என்றாலும் காண்போருக்கு ஓர் இனம்புரியாத உணர்வை ஏற்படுத்துவதோடு தமிழர்களின் பாரம்பரிய வேளாண் முறைகளை உலகிற்கு பறைசாற்றும் உன்னத நிகழ்வாகவே திகழ்கிறது.

நவீன வேளாண்மையின் ஆதிக்கம் நாடெங்கும் பரவிக் கிடந்தாலும் இதுபோன்ற கிராமங்களில் இன்றும் பாரம்பரியம் மாறாமல் பெண் தொழிலாளர்களும் ஆண் தொழிலாளர்களும் ஒன்று சேர ஆனந்தத்தோடு பாட்டுப்பாடி நடனத்துடன் ஆடி நாற்று நடும் நிகழ்வு காண்போரை மெய்சிலிர்க்க வைக்கிறது.

– சுப.முத்துப்பழம்பதி | படங்கள்: அப்துல் கபூர்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.