நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆய்வு செய்யும் குழுவின் முதல் கூட்டம் நடந்து முடிந்துள்ளது. நீட் தேர்வால் பாதிப்பு தான், அதற்கு மாற்றுக்கருத்து இல்லை என குழுவின் உயர்மட்டக்குழுத் தலைவரான ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டது. கடந்த சில ஆண்டுகளில் சமூகத்தில் பின் தங்கிய மாணவர்களை நீட் தேர்வு பாதித்துள்ளதா என்பது குறித்தும், பாதித்திருந்தால், நீட் தேர்வுக்கு மாற்றாக அனைவரும் பயன்பெறும் வகையிலான சேர்க்கை முறைக்கான வழிமுறைகள் குறித்தும் விரிவாக இந்தக் குழு ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.
அதன்படி, இந்தக் குழுவின் முதல் கூட்டம், சென்னை மருத்துவக் கல்லூரி இயக்குனரகத்தில், ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் சுமார் இரண்டு மணி நேரம் நடைபெற்றது. இதில் மருத்துவர் ரவீந்திரநாத், கல்வியாளர் ஜவஹர் நேசன், பள்ளிக்கல்வித்துறை, சட்டத்துறை, சுகாதாரத்துறை செயலாளர்கள், மருத்துவக் கல்வி இயக்குனர், மருத்துவக் கல்வி கூடுதல் இயக்குனர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த ஏ.கே.ராஜன், நீட் தேர்வால் பாதிப்பு இருக்கிறதா என்பதற்குத் தேவையான ஆதாரங்களை திரட்ட உள்ளதாகவும், அதன் அடிப்படையிலேயே அரசுக்கு அறிக்கையை தாக்கல் செய்யவுள்ளதாகவும் தெரிவித்தார்.
நீட் தேர்வால் பாதிப்புக்கு ஆளான மாணவர்களிடம் கருத்துக் கேட்கும் திட்டம் இல்லை என குழு தெரிவித்துள்ள நிலையில், தங்களது ஆதாரங்கள் மக்கள் ஏற்கும் வகையில் இருக்க வேண்டும் என்பதன் அடிப்படையில், ஆய்வுகள் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆய்வு செய்யும் இந்தக் குழுவின் இரண்டாவது கூட்டம் அடுத்த வாரம் திங்கள்கிழமை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உரிய புள்ளி விவரங்களை ஆய்வு செய்து தமிழ்நாட்டிலுள்ள பின் தங்கிய மாணவர்களின் நலனைப் பாதுகாப்பதற்குத் தேவையான பரிந்துரைகளை, இக்குழு ஒரு மாத காலத்திற்குள் அரசுக்கு அறிக்கையாக அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM