கொரோனா வைரஸின் கோரத்தாண்டவத்தில் சிக்கி இந்தியா நிலைகுலைந்து கொண்டிருக்கும் இந்த தருணத்தில் மருத்துவர்கள் மக்கள் உயிர்காக்க இரவு பகல் பாராமல் அயராது உழைத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், சிலர் தீவிரம் தணியாமல் பரவிக் கொண்டிருக்கும் கொரோனா நோய்த்தொற்றை ஒழிக்க கொரோனாவின் பெயரிலேயே கடவுள் சிலைகளை அமைத்து வழிபட்டு வருகின்றனர். முன்னதாக, கோவையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஊர்மக்கள் ‘கொரோனா தேவி’ சிலை அமைத்து கொரோனாவை ஒழிக்க மந்திரங்கள் ஓதி பூஜைகள் செய்தனர். கோவையின் கொரோனா தேவி சிலை சமூக வலைத்தளங்களில் மிகப்பெரியளவில் வைரலானது.

கோவையில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா தேவிசிலை

இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம், பிரதாப்கர் மாவட்டத்தை அடுத்த ஜுஹி ஷுகுல்பூர் கிராமத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்து ஏராளமானோர் நோய்ப்பாதிப்புக்கு உள்ளாகி வருவதால், கிராம மக்கள் உயிர்ச்சேதங்களை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸையே கடவுளாகக் கருதி வணங்கினால் கோபம் தணிந்து தானாக கிராமத்திலிருந்து விலகி விடும் எனக் கருதியாகச் சொல்லப்படுகிறது. அதனையடுத்து, கடந்த 7-ம் தேதி ஜுஹி ஷுகுல்பூர் கிராமத்தின் ஒரு வேப்ப மரத்தடியில் ‘கொரோனா மாதா’ என்ற பெயரில் சிலையை உருவாக்கிய கிராம மக்கள் அதைச் சுவரில் பொருத்தி பூஜைகள் செய்து வழிபடத் தொடங்கினர். கொரோனா மாதா கோயில் அமைக்கப்பட்டுள்ள தகவல் தீயாய் பரவியதைத் தொடர்ந்து அண்டை கிராமங்களிலிருந்தும் மக்கள் கூட்டம் கூட்டமாக ஜுஹி ஷுகுல்பூருக்கு வந்து கொரோனா மாதாவை வணங்கிச் சென்றனர். மக்கள் கூட்டம் மிகுதியாக வரத் தொடங்கியதால் கொரோனா மாதாவின் சிலைக்கு நோய்த்தொற்று பரவிவிடும் என்று அஞ்சிய கிராம மக்கள் கொரோனா மாதா சிலைக்கும் முகக்கவசம் அணிவித்தனர்.

சில நாள்களிலேயே பிரபலம் அடைந்ததால் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. ஆனாலும், மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்தும், சமூக விலகலை கடைப்பிடித்தபடியுமே கொரோனா மாதாவை வணங்கிச் சென்றனர். இந்நிலையில், கொரோனாவுக்கு கோயில் கட்டி மூடநம்பிக்கைகளை வளர்ப்பதாகக் கோயிலைக் கட்டியவர்கள் மீது காவல்நிலையத்தில் சிலர் புகார் அளித்ததாகக் கூறப்படுகிறது. அதனையடுத்து, மாவட்ட நிர்வாகம் கோயிலை அகற்றி சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டிருந்தது. இதற்கிடையில், நாகேஷ் என்பவர் காவல்நிலையத்தில் கோயில் அமைக்கப்பட்டுள்ள நிலம் தன்னுடையது என்றும், தன் நிலத்தை அபகரிக்கவே சிலர் கொரோனா மாதா கோயிலைக் கட்டியதாகவும் புகாரளித்தார்.

கொரோனா மாதாவை வழிபடும் கிராம மக்கள்

நாகேஷின் புகாரைப் பெற்றுக்கொண்ட போலீஸார் நேற்று முன்தினம் இரவு அவரின் நிலத்தில் கட்டப்பட்டிருந்த கொரோனா மாதா சிலையைக் கைப்பற்றி கோயிலை இடித்து தரைமட்டமாக்கினர். மேலும், கொரோனாவுக்கு கோயில் கட்டியதற்காகவும், நில அபகரிப்பில் ஈடுபட்ட குற்றத்திற்காகவும் லோகேஷ் என்பவரைக் கைது செய்தனர். ஜூன் 7-ம் தேதி கட்டப்பட்ட கொரோனா மாதா கோயில் ஒரே வாரத்தில் அகற்றப்பட்டிருக்கிறது. கோயில் இடிக்கப்பட்டதற்குக் கண்டனம் தெரிவித்துள்ள கிராம மக்கள் சிலர் கொரோனா வைரஸின் கோபத்தைத் தணித்து மக்களைக் காக்கவே கோயில் கட்டியதாகவும், தற்போது அந்த கோயிலை இடித்து விட்டதால் மொத்த கிராமமும் கடவுளின் கோபத்திற்கு ஆளாகி விட்டதாகவும் அதிருப்தியுடன் கூறுகின்றனர்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.