இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் ஜூலையில் மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாட உள்ளது இந்திய கிரிக்கெட் அணி. இந்த அணியை வழிநடத்தும் பொறுப்பு கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்ததை போலவே ஷிகர் தவானிடம் ஒப்படைத்துள்ளது பிசிசிஐ.

‘கேப்டன்’ தவான்!

ஒரே நேரத்தில் இந்திய அணி இருவேறு சர்வதேச கிரிக்கெட் தொடர்களில் விளையாடுகிறது. இலங்கை அணியுடன் ஒருநாள் மற்றும் டி20 தொடரும், இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்த அணியுடன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் இந்தியா விளையாடுகிறது.  

இங்கிலாந்து தொடரில் டெஸ்ட் அணியின் பிரதான மற்றும் மூத்த வீரர்கள் விராட் கோலி, ரோகித் ஷர்மா, ஜடேஜா, பண்ட் என அனைவரும் இங்கிலாந்து பயணத்தில் விளையாடுகின்றனர். 

image

அதனால் இலங்கை தொடரில் ஷார்டர் பார்மெட் கிரிக்கெட் ஸ்பெஷலிஸ்ட் வீரர்கள் இந்தியாவுக்காக களம் இறங்க உள்ளனர். இந்த அணியைதான் தவான் வழிநடத்துகிறார். 

தவான் சர்வதேச கிரிக்கெட்டில் 2010இல் அறிமுகமானது ஒருநாள் போட்டியில்தான். இருப்பினும் அப்போது அவரால் அணியில் தனக்கென ஒரு இடத்தை பிடிப்பதில் சிக்கல் இருந்தது. அதற்கு சீனியர் வீரர்களின் இருப்பும் ஒரு காரணம். 2013இல் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமான தவான் தனது முதல் டெஸ்ட் இன்னிங்ஸில் 187 ரன்களை விளாசினார். அது இந்திய அணியில் அவருக்கென தவிர்க்க முடியாத இடத்தை ஏற்படுத்தியது. அதன் பிறகு டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என அனைத்து பார்மெட் கிரிக்கெட்டிலும் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தார் தவான்.

2013 சாம்பியான்ஸ் டிராபி மூலம் தன்னை பெரிய ஆட்டக்காரர் என தனது ஆட்டத்தின் மூலம் நிரூபித்தார். தொடர்ந்து 2015 உலக கோப்பை தொடரிலும் சிறப்பாக ரன் குவிப்பில் ஈடுபட்டார். ஐசிசி தொடர் என்றாலே தவான் ரன் குவிப்பதை தட்டுக்க முடியாது என சொல்லும் அளவுக்கு அவரது ஆட்டம் அமைந்தது. இப்போது வரை ஷார்டர் பார்மெட் கிரிக்கெட்டில் அதிரடி ரன் குவிப்பில் ஈடுபடுவது தவானின் வழக்கம்.

கடந்த 2016 சீசனிலிருந்து ஐபிஎல் தொடரில் 479 ரன்களுக்கு மேல் அவர் குவித்து வருகிறார். கடந்த 2020 சீசனில் 618 ரன்களை அவர் விளாசி இருந்தார். தற்போது பாதியில் கைவிடப்பட்டுள்ள 2021 சீசனில் கூட 8 போட்டிகளில் விளையாடி 380 ரன்களை அவர் குவித்துள்ளார். இதனால் நல்ல பார்மில் உள்ள தவானை கேப்டனாக அணியை வழிநடத்த பணித்துள்ளது வரவேற்கதக்கது. 

தவானும் கேப்டன்சியும்!

தவான் 2014 ஐபிஎல் சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை முதல் 10 போட்டிகளுக்கு வழி நடத்தி இருந்தார். அதில் தனது அணியை நான்கு முறை வெற்றி பெற செய்திருந்தார். அதன் பிறகு தனது ஆட்டத்தில் கவனம் செலுத்துவதாக சொல்லி கேப்டன் பதவியை உதறினார் தவான். அதன்பிறகு ஐபிஎல் தொடரில் அணியை வழிநடத்தவில்லை என்றாலும் ஒரு தலைவனுக்கு உரிய பண்புடன் சக வீரர்களுக்கு உற்சாகம் கொடுப்பதில் தவான் கவனம் செலுத்தி வந்தார். இதனை அவரது டெல்லி அணியின் கூட்டாளி மார்கஸ் ஸ்டாய்னிஸ் ஒரு பேட்டியிலும் சொல்லி இருந்தார். தற்போது இலங்கை தொடரில் துடிப்பு மிக்க இளம் இந்திய அணியை வழிநடத்துகிறார் தவான். நிச்சயம் அதில் வெற்றி வாகை சூடுவார் அவர். 

– எல்லுச்சாமி கார்த்திக்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.