பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

அது ஒரு மழைக்காலக் காலை. அவனுக்கு அன்றைக்குப் பார்த்துத் தலைமைச் செயலகத்தில், அவன் துறைச் செயலருடன் மீட்டிங். அயனவரம் வீட்டிலிருந்து குறளகத்திலுள்ள அலுவலகம் வந்து, அங்கிருந்து பிற பணியாளர்களுடன் சேர்ந்து சென்றாக வேண்டும். அடுத்த நாள் மீட்டிங் என்றாலே முதல் நாள் இரவில் அதனைப்பற்றிய எண்ணங்களே அவனுக்கு அதிகமாக மனத்திலோடும். காலையில் விரைந்து எழும்ப ‘அலார்ம்’ வைத்திருந்தாலும், அலார்ம் அடிக்கு முன்பாகவே எழுந்து விடுவதே அவனுக்குப் பழக்கமாகிவிட்டது. கையில் ‘சில்வர் ப்ளஸ்’ வண்டி இருப்பதால், பேரூந்துக்குக் காத்து நிற்க வேண்டிய அவசியமில்லை. அந்த வண்டி வாங்கியதையே ஒரு தனிக்கதை ஆக்கலாம். ஆமாம். நீண்ட காத்திருப்புக்குப் பின்னரே அவனால் அந்த வண்டியை வாங்க முடிந்தது.

Representational Image

வண்டியின் முழு விலையைக் கையிலிருந்து செலுத்தி வாங்கும் அளவுக்கு அவனது பொருளாதாரம் அவ்வளவு திருப்திகரமாக இல்லை. அலுவலக லோனில் வாங்கினால் தான் உண்டு. எனவே முதல் தடவை ஒரு ‘ஸ்கூட்டர்’ வாங்குவதற்காக மனுச் செய்தான். இதோ வந்துவிடும். அதோ வந்துவிடும் என்று எண்ணிக் காத்துக் கிடந்ததுதான் மிச்சம். கடைசியாக வந்த செய்தி என்னவென்றால்’ இவ்வருட ஒதுக்கீடு முடிந்து விட்டதால் மனு திருப்பி அனுப்பப் படுகிறது.’ என்பதுதான். அதற்காக அவன் சோர்ந்துப் போகவில்லை. மீண்டும் மனுச் செய்ய முடிவெடுத்தான். மனு செய்ய வேண்டிய நேரத்தில் அவன் பணி நிமித்தம் களப்பணி சென்று விட நேர்ந்தது. திரும்பி வந்ததும் மனுவை உரிய விதத்தில் தயாரித்து அனுப்பினான். ஆனாலும் ஒரு வாரத் தாமதம் காரணமாக மனதில் சிறு உறுத்தல் இருந்து கொண்டேயிருந்தது. இந்த முறையும் திரும்பி வந்துவிடுமோவென்று.

ஓ.ஏ. பழனி வந்து அட்மின் கூப்பிடுவதாக அவனிடம் சொல்லிச் சென்றார். அண்ணன் மாணிக்கம் அட்மினாக வந்த பிறகு எதையும் நேரடியாகவே கூப்பிட்டுச் சொல்லிவிடுவார். சுமார் 100 பேரைக் கொண்ட அந்த அலுவலகம், அரசின் பல திட்டங்களையும் மதிப்பீடு செய்து, அரசுக்கு அறிக்கையையும், ஆலோசனைகளையும் வழங்கும் மகத்தான பணியைச் செவ்வனே செய்து வருகிறது. பணியிட மாற்றமில்லாத சிறிய துறை என்பதால் பணியாளர்கள் அனைவரும் ஒரே குடும்பம் போலவே பழகி வந்தார்கள்.

அதிலும் அட்மின் மாணிக்கம் மிகச் சிறந்த மனிதர். மனதாலும் அடுத்தவர்க்குத் தீங்கு நினைக்காதவர். முடிந்த வரை அடுத்தவருக்கு உதவ நினைப்பவர். வேலை என்று வந்துவிட்டால் பம்பரமாகச் சுழல்வார். நெல்லைத் தமிழில் அவர் இளையவர்களைத் தம்பி என்றழைக்கையில், கேட்பவர் மனத்தில் சகோதரப் பாசத்தை ஓடச் செய்து விடுவார்.

Representational Image

அவன் அவர் மேஜையை நெருங்கியதுமே ’ டூ வீலர் லோனுக்கு அப்ளை பண்ணியிருந்தீங்க என்ன. பண்ட்ஸ் தீர்ந்துடுச்சாம். ஸ்கூட்டர் கேட்டிருந்தீங்களோ. நீங்க வேணும்னா ஈவ்னிங் என்கூட வாங்க. நான் ஒரு சில்வர் ப்ளஸ் வெச்சிருக்கேன். அதை ஓட்டிப் பாருங்க. ஒங்களுக்குப் பிடிச்சிருந்தா அதுக்கே அப்ளை பண்ணிடலாம். மனுவை எங்கிட்ட கொடுத்துடுங்க. நீங்க இல்லன்னாக்கூட நான் சமயத்ல அனுப்பிடறேன்.’ என்றார். அவர் அன்பில் திக்குமுக்காடிய படி அவன் ‘சரி.’ என்றான்.

இம்முறையும் லோன் கிடைக்காத வருத்தத்தை மறைத்தபடி. சொன்னபடி அன்றே மைலாப்பூரிலுள்ள அவர் வீட்டிற்குச் சென்று, செமையான டிபன் சாப்பிட்டபிறகு, சில்வர் ப்ளசை ஓட்டிப் பார்த்தான். கல்லூரி நாட்களிலேயே பைக் ஓட்டிப் பழகி விட்டதால் அந்த வண்டி அவனுக்கு எளிதாக இருந்தது. என்ன?புல்லட் பைக் ரேஸ் குதிரையென்றால், இது கன்றுக்குட்டி. ஆனால், விலையும் குறைவு.

மைலேஜும் அதிகம். அதிலும் மாணிக்கம் கொடுக்கும் ஆலோசனைகள் உகந்தவையாகவே இருக்கும். அலுவலகத்தில் சேர்ந்த புதிதில், ’ஆக்ஸ்போர்ட் டிக்‌ஷனரி’ சொந்தமாக வாங்கச் சொன்னார். அதோடு அவர் ஒவ்வொரு எடிஷனையும் விடாமல் வாங்கிப் படித்து வருவதாகவும் கூறினார்.அவனும் அவ்வாறே செய்தான். ஒற்றைச் சம்பளத்தில் செலவைக் குறைப்பது நல்லது என்றே அவனுக்கும் தோன்ற, அதற்கே மனுச் செய்தான். வண்டியின் விலை ரூ 9500/-தான். மாதப் பிடித்தம் ரூ 133/- என்பது அப்போதுள்ள பேரூந்துக் கட்டணத்தை விடக் கொஞ்சம்தான் அதிகம். நண்பர் குருவுடன் சென்று தாசப் பிரகாஷ் பக்கத்திலுள்ள ஷோ ரூமிலிருந்து வண்டியையெடுத்தது இன்றும் பசுமையாக மனதிலுள்ளது.

அவசரமாகக் குளித்து சிற்றுண்டி அருந்திவிட்டு, வண்டியை எடுத்தான். மழை சற்றேவிட்டிருந்தது. செயலருடன் மீட்டிங் என்பதால் ஆடையில் கவனம் செலுத்தினான்.

அதன் மேல் ரெயின் கோட் போட வேண்டாமென்று எண்ணினான். சென்னை சீதோஷ்ணம் சற்றே வேடிக்கையானது. மழைக்காக ரெயின் கோட் போட்டாலும் உள்ளே வியர்க்கும். எனவே அதனைத் தவிர்த்தான்.

Traffic Jam in Chennai

நியூ ஆவடி ரோட்டில் ஏறி, வாட்டர் டேங்கைத் தாண்டியதும் லேசான தூறல் ஆரம்பித்தது. சாலையில் தேங்கியிருந்த நீர் ‘சல் சல்’ என்று அடிக்க, நீரைக் கூடுமானவரை தவிர்த்து ஓட்ட முயற்சித்தான். பச்சையப்பாவுக்கு எதிரே வந்து பூனமல்லி ஐ ரோட்டில் ஏறியதும், முன்னே சென்ற பைக்கில் பின்னால் ‘பிளாப்’ இல்லாததால் சாலையின் கலங்கல் நீர் அவன் முகத்தையும், ஆடைகளையும் பதம் பார்த்தது. முன்வண்டிக் காரரோ அதைப் பற்றிய சொரணையே இல்லாமல் வேகமாகப் போய்க் கொண்டிருந்தார். அவனால் பொறுக்க முடியவில்லை. மீட்டிங் வேறு போயாக வேண்டும். அலுவலகத்தில் மாற்று ஆடைகளும் இல்லை. இனி ஒரு ஜோடி மாற்று ஆடையை அலுவலகத்தில் வைத்துக் கொள்ள வேண்டுமென்று எண்ணியபடியே அவரைத் துரத்த ஆரம்பித்தான். இவர்களையெல்லாம் இப்படியே விட்டு விடக் கூடாது.

அவர்கள் தப்பை, ’அட்லீஸ்ட்’ சுட்டிக் காட்டவாவது வேண்டும். திடீரென சின்ன வயதில் அம்மா சொன்னது ஞாபகத்திற்கு வந்தது. ’ஊரு எக்கேடோ கெட்டுப் போகட்டும். நீ எதற்கு எல்லாவற்றிலும் மூக்கை நுழைக்கிறாய்?’ ‘ என்னால் அப்படியெல்லாம் தவறை ஏற்றுக் கொண்டு போக முடியலம்மா.’ என்று பதில் சொன்னதும் மனதில் நிழலாடியது.

இருந்தாலும் முன் பைக்கை விடாமல், முடிந்த வரை வேகமெடுத்துத் துரத்த, டேய்லர்ஸ் ரோடு சந்திப்பையும் தாண்டியாகி விட்டது. எப்படியும் ‘ஈகா’ சிக்னலில் பிடித்து விட வேண்டுமென்று எண்ணியபடி இன்னும் வேகத்தைக் கூட்டினான். இதோ. சிக்னலையும் நெருங்கியாகி விட்டது. ஆ…ஆஹா. ரெட் சிக்னல் இவனுக்கு விழ, துரத்தப்பட்டவர் முன்னே போய், சிக்னலைத் தாண்டிப் போய்விட்டார். ‘சே. கிட்ட வந்தும் கோட்டைவிட்டு விட்டோமே.’ என்று அவன் தனக்குள்ளே மருக, அவன் சில்வர் ப்ளசின் பக்கத்தில் வந்து நின்ற பைக்காரர் பொறுமையாகச் சொன்னார்.

Representational Image

‘ஏன் சார். பார்த்தா படிச்சவர் மாதிரி இருக்கீங்க. இங்க கொஞ்சம் என் சட்டைபேண்டையும், முகத்தையும் பாருங்க. மழை நேரத்ல வண்டியில ஒரு நல்ல பிளாப் வெச்சிக்கிடனும்னு ஒங்களுக்குத் தோணலையா? இந்த ட்ரஸ்ஸோட எப்படி சார் நான் இண்டர்வியூ அட்டண்ட் பண்ணுவேன். நானும் பச்சையப்பாவிலிருந்து ஒங்களைத் துரத்தறேன். இத்தனயூண்டு வண்டில.. அப்பா.. என்ன வேகம்?

அவன் ‘திக் பிரமை’யிலிருந்து மீண்ட போது,பொறுமையாகச் சொன்ன இளைஞர், முன்னாடி மெதுவாகப் போய்க் கொண்டிருந்தார்.

விஜய்,

மெக்லீன்,அமெரிக்கா

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.