சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரகார சிறையில் இருந்த சசிகலா, சிறை தண்டனை முடிந்து விடுதலையாதும் மீண்டும் கட்சி தலைமை ஏற்பார் என தொண்டர்கள் உற்சாகத்தில் காத்திருந்தனர். அவர், விடுதலையாகி வரும்போது தொண்டர்களால் உற்சாக வரவேற்பும் அளிக்கப்பட்டது. ஆனால், ‘அரசியலில் இருந்து விலகியிருக்கப் போவதாக’ 2021 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டார் சசிகலா. இதனால் தொண்டர்கள் வருத்தத்திற்கு உள்ளானார்கள். இந்நிலையில் சட்டமன்றத் தேர்தலும் நடைபெற்று முடிந்தது. தி.மு.க கூட்டணி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது.

எடப்பாடி பழனிசாமி – சசிகலா – ஓ.பன்னீர்செல்வம்

தற்போது சில வாரங்களாக, சசிகலா அ.தி.மு.க தொண்டர்களுடன் தொலைபேசியில் உரையாடும் ஆடியோக்கள் வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. அ.தி.மு.க தொண்டர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளுடன் தொலைபேசியில் உரையாடி வந்த சசிகலா, தற்போது முன்னாள் அமைச்சராக இருந்த ஆனந்தனிடம் தொலைபேசியில் உரையாடிய ஆடியோ ஒன்று இன்று வெளியாகியுள்ளது. உளுந்தூர்பேட்டை அடுத்த நத்தாமூரை சேர்ந்தவர் ஆனந்தன். 1984 ஆம் ஆண்டு, உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்வானார். 1991-லும் அதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அப்போது, ஜெயலலிதாவின் முதல் அமைச்சரவையில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தார். 2009-ம் ஆண்டு விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு எம்.பி – யாக இருந்தவர். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் கள்ளக்குறிச்சியில் போட்டியிடும் வாய்ப்பை இவர் தலைமையிடம் எதிர்பார்த்து காத்திருந்ததாகவும். ஆனால், வாய்ப்பு மறுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இவருடன், சசிகலா தற்போது உரையாடியுள்ள அந்த ஆடியோவில், ஆனந்தன் மற்றும் அவரது குடும்பத்தைப் பற்றி நலம் விசாரிக்கும் சசிகலா, “எதுக்கும் கவலைப்படாதீங்க ஆனந்தன். சீக்கிரம் ஒரு நல்லது நடக்கும். நிச்சயமாக வந்துடுவேன். நான் எல்லோரிடமும் பேச ஆரம்பித்துவிட்டேன். எவ்வளவோ லெட்டர் வருது. மனசு குமுறலாக எழுதுறாங்க. அதை எல்லாம் பார்க்கும்போது மனதுக்கு கஷ்டமா ஆகிடுச்சி எனக்கு. இந்த கட்சி, நம் கண்ணெதிரே இப்படி ஆகும்போது மிகவும் வருத்தமாக இருக்கு ஆனந்தன். அந்த மனக்கஷ்டம் தாங்க முடியல. நீங்கள் எல்லாம் பழைய ஆட்கள். நீங்கள் எல்லாம் இப்படி இருப்பது எனக்கே மனசு கஷ்டமாக இருக்கு. தொண்டர்களுக்காக நிச்சயம் வருவேன். அம்மா எப்படி கட்சியை வைத்திருந்தாங்களோ.. அதைப் போலவே கொண்டு வந்துடலாம். கொரோனா முடியட்டும், உங்களை விரைவில் நேரில் வந்து சந்திக்கிறேன்”. என்று பேசியுள்ளார்.

ஆனந்தன்

Also Read: “கொலை மிரட்டல்!” சசிகலா மற்றும் ஆதரவாளர்கள் மீது சி.வி.சண்முகம் காவல் நிலையத்தில் புகார்!

முன்னாள் அமைச்சர் ஆனந்தனிடம் பேசினோம்.

“நான்தான் அந்த உரையாடலில் பேசியது. 1984ல் எம்.எல்.ஏ-வாக இருந்தேன்.1986-ல் மதுரையில் எனக்கு திருமணம் நடைபெற்றபோது எம்.ஜி.ஆர் அவர்கள்தான் எனக்கு தாலி எடுத்து கொடுத்தார். 1984-ல் நாங்கள் 33 எம்.எல்.ஏ-க்கள் போகும்போது, சசிகலா அம்மாவும், அவர்களுடைய கணவரும் எனக்கு மிகவும் பழக்கம். ஆனால், சிறையில் இருந்து வந்த பின் இப்போதுதான் முதன் முதலில் பேசுகிறேன். தன்னை தலைவர்களாக நினைத்துக் கொள்பவர்கள் ஒரு பக்கம் இருக்காங்க. தொண்டர்கள் ஒருபக்கம் இருக்காங்க. நான் தீவிர தொண்டன் தான். தலைவன் என சொல்லமுடியாது. தொண்டர்கள் முழுவதும் இன்று இந்த அம்மாவுடன் தான் இருக்காங்க. நான் எம்.எல்.ஏ, எம்.பி, அமைச்சராக இருந்துள்ளேன். ஆனால், அவ்வளவாக வெளியில் தெரியாமல் இருக்கிறேன் என்றால் தொண்டனாகத்தானே இருக்கமுடியும். என்னுடைய அனுபவத்தில் பார்த்திருக்கிறேன். ஜெயலலிதா அம்மாவுடன் நல்லது, கெட்டது என உடனிருந்தவர்கள் சசிகலா அம்மா தான். அதனால், கட்சியை நடத்தும் திறமை இவங்க கிட்ட தான் இருக்கிறது என நினைக்கிறேன் நான். இப்போது கட்சியில் யாரும் ஒருத்தருக்கு ஒருத்தர் பயப்படுவது கிடையாது. ஒரு தலைமையை முடிவெடுக்க முடியாமல் போட்டி போட்டுக்கொண்டு இருக்காங்க இன்று. அந்த வருத்தம் எனக்கு இருக்கு. இப்படியே போனால் வருங்காலத்தில் கட்சியை எப்படி இவர்கள் வழி நடத்துவார்கள். கட்சி நல்லா இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். எனவே, சசிகலா அம்மா வந்தா தான் கட்சியை கன்ட்ரோல் பண்ண முடியும் என்று அவர்களை அழைக்கிறேன்” என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.