கேரளாவில் பழங்குடியின தலைவி பாஜக கூட்டணியில் சேர்வதற்கு ரூ.10 லட்சம் பேரம் பேசும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
கேரளாவில் ஜனதிபத்ய ராஷ்டிரேயா கட்சியின் தலைவராக இருப்பவர் சி.கே.ஜானு. பழங்குடியின தலைவர்களில் முக்கியமானவரான சி.கே.ஜானு ஆரம்பத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தார். பின்னர் அக்கட்சியிலிருந்து விலகி 2016-ல் ஜனதிபத்ய ராஷ்டிரேயா எனும் பெயரில் தனிக்கட்சி தொடங்கினார். பாஜகவுடன் இணக்கமாக செயல்பட்டு வந்த ஜானு, சமீபத்தில் நடந்து முடிந்த கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் சுல்தான் பத்தேரி தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
 
இந்நிலையில் சி.கே.ஜானுவுடன் கருத்து முரண்பாட்டில் இருக்கும் அவரது கட்சியின் பொருளாளர் பிரசீதா, “ஜானுவை பாஜக தனது கூட்டணிக்குள் சேர்க்க ரூ.10 லட்சம் கொடுத்தது” என குற்றம்சாட்டியுள்ளார். மேலும் இதுதொடர்பாக ஜானுவுடன் பாஜக மாநிலத் தலைவர் சுரேந்திரன் பேசியதாக தொலைபேசி உரையாடல் ஒன்றையும் பிரசீதா வெளியிட்டுள்ளார். இந்த ஆடியோ விவகாரம் கேரளா அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை கிளப்பியிருக்கிறது.
 
பாஜக மாநிலத் தலைவர் சுரேந்திரன் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளார். இது குறித்து சுரேந்திரன் கூறுகையில், ”நீங்கள் என்னை அவமதிக்கலாம், ஆனால் ஆயிரக்கணக்கான பழங்குடிகள் மற்றும் பட்டியலினத்தவர்களுக்கு சேவை செய்த ஒரு சமூக சேவகரை நீங்கள் அவமதிக்கிறீர்கள், ஒருவரின் தொலைபேசி உரையாடலை வெளியிடுகிறீர்கள். சி.கே.ஜானுவும் நானும் எதுவும் பேசவில்லை. அவர் என்னிடம் பணம் கேட்கவில்லை, நான் கொடுக்கவில்லை. நாங்கள் சுல்தான் பத்தேரியில் தேர்தல் செலவுகளை பார்த்துக் கொண்டோம். அவ்வளவுதான்” என்று கே.சுரேந்திரன் கூறினார்.
 
இதுதொடர்பாக சி.கே.ஜானு கூறும்போது, “இது ஆதாரமற்ற குற்றச்சாட்டு. நான் இதற்காக சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்’ எனக் கூறியுள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.