“நடிகர் சிவகார்த்திகேயனுக்கும் எனக்கும் எந்தவித விரோதமும் இல்லை. அவர் தந்தையும் காவல்துறையில் இருந்தவர் என்பதால் தவறுதலாக அவர் பெயரை கூறிவிட்டேன். சிவகார்த்திகேயனை தர்மசங்கடத்தில் ஆழ்த்த வேண்டுமென்று பேசவில்லை” என்று, பாஜக தலைவர் ஹெச்.ராஜா விளக்கம் அளித்துள்ளார். அதேநேரம் மமக தலைவர் ஜவாஹிருல்லாவை பற்றி பேசியுள்ளது மீண்டும் சர்ச்சையாகியுள்ளது.

ஹெச். ராஜா

ஹெச்.ராஜா சில நாட்களுக்கு முன் செய்தியாளர்களிடம் , நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், மமக தலைவர் ஜவாஹிருல்லா ஆகியோரை கடுமையாக விமர்சித்து பேசியவர், சிறை அதிகாரியாக இருந்த நடிகர் சிவகார்த்திகேயன் தந்தை கொலை செய்யப்பட்டதற்கு ஜவாஹிருல்லா காரணம் என்று கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கு முன்பும் பல்வேறு பிரச்னைகளில் அதிரடியாக பேசி சர்ச்சையை ஏற்படுத்தியவர் ஹெச்.ராஜா. ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறிய ஹெச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மமக சார்பில் டி.ஜி.பி-யிடம் புகார் அளிக்கப்பட்டது. மாவட்ட அளவிலும் மமகவினர் காவல்துறையில் புகார் அளித்தனர்.

ஜவாஹிருல்லா

இந்நிலையில் நேற்று காரைக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய ஹெச்.ராஜா, “சிவகார்திகேயனுக்கும் எனக்கும் எந்தவித விரோதமும் இல்லை. அவர் தந்தையும் காவல்துறையில் இருந்தவர் என்பதால் தவறுதலாக அவர் பெயரை கூறிவிட்டேன். அவரை தர்மசங்கடத்தில் ஆழ்த்த வேண்டுமென்று பேசவில்லை” என்றவர், தொடர்ந்து பேசும்போது,

“மதுரையில் ஜெயிலர் ஜெயப்பிரகாஷை கொன்ற அல் உம்மா இயக்கத்தில் ஜவாஹிருல்லா உறுப்பினராக இருந்தவர்தான். அவர் குற்றம் செய்ததாக கூறவில்லை. அதேநேரம் கோவை கலவரத்தை தொடர்ந்து அரசு அனுமதி இல்லாமல் வெளிநாட்டிலிருந்து நிதியை பெற்ற வழக்கில் ஒருவருடம் தண்டனை பெற்றவர் ஜவாஹிருல்லா. அந்த வழக்கு மேல் முறையீடு செய்யபட்டுள்ளது. இவர் ஜாமீனில் உள்ளார். இவர்தான் பாபநாசம் எம்.எல்.ஏ என்று கூறினேன். இதில் ஒன்றும் தவறு இல்லை. இதற்காக என்னை பலரும் விமர்சிக்கிறார்கள். நான் இதை சட்டப்படி எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன்” என்றார்.

ஹெச்.ராஜா

தொடர்ந்து, “பாலியல் வழக்கில் சிக்கியுள்ள பத்மா சேஷாத்திரி பள்ளி ஆசிரியரை அதிகபட்ச தண்டனையாக தூக்கிலேயே போடலாம். ஆனால் பள்ளி நிர்வாகத்தை குறை கூறுவது உள்நோக்கம் கொண்டது. எத்தனையோ கிறிஸ்தவ பள்ளிகளில் இதுபோன்ற குற்றச்சாட்டு எழுந்தபோது யாரும் நிர்வாகத்தை குறை கூறவில்லை.

தமிழகத்தில் தடுப்பூசி போட மக்களை தயக்கப்பட வைத்தது தற்போதுள்ள ஆளும் கட்சியும், அதனுடைய கூட்டணிக் கட்சியும்தான். கொரோனா தொற்று ஒழிப்பில் தமிழக அரசு இன்னும் எச்சரிக்கையோடு கவனம் செலுத்த வேண்டும். மெத்தனப்போக்கு கூடாது. தமிழ்நாட்டில் 12 லட்சத்திற்கு மேல் தடுப்பூசிகள் வீணாக போயுள்ளன.

சிவகார்த்திகேயன்

நான் செய்தியாளர்களிடம் பேசும்போது யாரைப் பற்றியும் அவதூறாகவோ, தவறுதலாக பேசியதே கிடையாது. எந்த சமுதாயத்தை பற்றியும் இழிவாக பேசியது கிடையாது. நான் சமுதாய ரீதியாக பேசியதாக விமர்சிக்கும் விடுதலை சிறுத்தைகள்தான் ஜாதி கட்சி. ஜவாஹிருல்லாதான் மதவாத கட்சி.

நான் அன்று சிவகார்த்திகேயன் தந்தையை பற்றி பேசியது மட்டும்தான் தவறானது. மற்றபடி நான் கூறியது அனைத்தும் உண்மை” என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.