தீவிர கோவிட் அலை காரணமாக, நாடு முழுவதும் லட்சக்கணக்கானோர் கடந்த சில மாதங்களில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அதில் பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு பல நாட்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுள்ளனர். இந்நிலையில், மருத்துவ காப்பீடு வாடிக்கையாளர்கள் தங்களுடைய சிகிச்சைக்கு செலவிட்ட பணம் ரூ.23,000 கோடி தங்களுக்கு திரும்ப அளிக்க வேண்டும் என காப்பீடு நிறுவனங்களிடம் கிளைம் செய்துள்ளனர்.

பல மாநிலங்களில் இன்னும் மருத்துவமனைகள் நிரம்பி வழியும் நிலை உள்ளதால், தொடர்ந்து இதுபோன்ற கிளைம்ஸ் கோரிக்கைகள் இன்னும் சில மாதங்களுக்கு அதிகரித்துக் கொண்டிருக்கும் என காப்பீட்டுத் துறையைச் சேர்ந்தவர்கள் கருதுகிறார்கள். காப்பீட்டுத் துறை சங்கம் சமீபத்தில் சேகரித்துள்ள புள்ளிவிவரங்கள்படி மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா, டெல்லி, தமிழ்நாடு மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களில் இருந்து அதிக எண்ணிக்கையில் மருத்துவ செலவை திரும்பப் பெறுவதற்கான கோரிக்கைகள் வந்த வண்ணம் உள்ளன.

இதுவரை மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து மட்டும் கிட்டத்தட்ட 5.5 லட்சம் கோரிக்கைகள் வந்துள்ளன என்றும், சராசரியாக பயனாளர் ஒருவருக்கு ரூ.1.5 லட்சம் என்கிற அளவில் கோரிக்கை வந்துள்ளது என்றும் சமீபத்தில் திரட்டிய தகவல்களில் தெரியவந்துள்ளது. தமிழ்நாட்டிலிருந்து இதுவரை 1.2 லட்சம் கோரிக்கைகள் பல்வேறு காப்பீடு நிறுவனங்களுக்கு வந்துள்ளன.

image

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள வாடிக்கையாளர்களின் கோரிக்கைகள் மட்டுமே ரூ.6,900 கோடிக்கானவை என்றும், அடுத்தபடியாக குஜராத் மாநிலத்திலிருந்து ரூ.2,300 கோடி மற்றும் கர்நாடக மாநிலத்தில் இருந்து ரூ.2,000 கோடி மருத்துவ செலவை திரும்பப் பெறுவதற்கான கோரிக்கைகள் வந்துள்ளன. தமிழ்நாட்டிலிருந்து வந்துள்ள கோரிக்கைகள் கிட்டத்தட்ட ரூ.2,270 கோடி மதிப்பிலானவை என காப்பீடு துறையைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

இப்படி முன்பைவிட அதிக அளவு பணத்தை வாடிக்கையாளர்களுக்கு திரும்ப அளிக்க வேண்டியிருப்பதால் காப்பீடு நிறுவனங்கள் தங்களுடைய பிரீமியம் என்று சொல்லப்படும் காப்பீட்டுக்கான விலையை உயர்த்தக் கூடும் என அஞ்சப்படுகிறது. கிட்டத்தட்ட 25 சதவிகிதம் வரை காப்பீட்டின் விலையை அதிகரிக்க வேண்டும் என காப்பீடு நிறுவனங்கள் கருதுகின்றன. அப்போதுதான் கோவிட் பாதிப்பு காரணமாக அதிகரித்து வரும் கோரிக்கைகளின் செலவை சமாளிக்க முடியும் என அந்த நிறுவனங்கள் கருதுகின்றன.

வாடிக்கையாளர்களின் கோரிக்கைகளை பரிசீலனை செய்து, இதுவரை கோவிட் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டும் கிட்டத்தட்ட ரூ.12,000 கோடி மருத்துவ செலவு திரும்ப அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் மட்டும் 3,600 கோடி ரூபாய் வாடிக்கையாளர்களுக்கு கிளைம் கோரிக்கை செட்டில்மென்ட் செய்யப்பட்டு பணம் அளிக்கப்பட்டுள்ளது என காப்பீடு துறையைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர். அடுத்தபடியாக குஜராத் மாநிலத்தை சேர்ந்த வாடிக்கையாளர்களுக்கு 1300 கோடி ரூபாய் அளிக்கப்பட்டுள்ளது, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு வாடிக்கையாளர்களுக்கு தலா ரூ.1000 கோடி செட்டில்மென்ட் செய்யப்பட்டுள்ளது. அதேபோல டெல்லி மாநிலத்தைச் சேர்ந்த வாடிக்கையாளர்களுக்கு ரூ.900 கோடி திரும்ப கொடுக்கப்பட்டுள்ளது.

எதிர்பார்த்ததைவிட கோவிட் இரண்டாம் அலை மிகவும் தீவிரமாக நாடு முழுவதும் பாதிப்பு ஏற்படுத்தி உள்ளதன் காரணமாக காப்பீடு நிறுவனங்களுக்கு அதிக அளவில் இதுபோன்ற கோரிக்கைகள் வந்தவண்ணம் உள்ளன என்றும், செட்டில்மென்ட் செலவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்றும் காப்பீட்டுத் துறையைச் சேர்ந்தவர்கள் இதனால் லாபம் பாதிக்கப்படும் என கவலையில் உள்ளனர்.

மேலும் கோவிட் பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கான செலவு அதிகமாக உள்ளது என காப்பீட்டுத் துறை நிபுணர்கள் கருதுகிறார்கள். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படுவார்கள் மற்றும் ஆக்சிஜன் செயற்கை முறையில் பெறுபவர்கள் ஆகியோருக்கான செலவு அதிகமாக இருக்கிறது என்றும், கருப்பு பூஞ்சை தொற்று போன்ற கூடுதல் பிரச்சினைகள் காரணமாக நோயாளிகள் அதிகம் செலவு செய்ய
வேண்டியுள்ளது எனவும் கருதப்படுகிறது.

image

இதைத்தவிர வீட்டிலிருந்தே சிகிச்சை பெறுபவர்கள் மற்றும் மெய்நிகர் மருத்துவ ஆலோசனை பெறுவார்கள் ஆகியோருக்கான செலவும் பல்வேறு கோவிட் காப்பீடு திட்டங்கள் மூலம் நோயாளிகளுக்கு திரும்ப அளிக்கப்படுகிறது. இதனால் நோயாளிகளுக்கு செலவு அதிகரிப்பது ஒருபுறம் என்றாலும் அவர்களுக்கு காப்பீடு அளித்துள்ள நிறுவனங்களுக்கும் இதனால் கூடுதல் செலவு ஏற்படுவதால் அவர்கள் காப்பீட்டின் விலையை அதிகரிக்க திட்டமிட்டு வருவதாகவும் நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள் ஆனால் காப்பீட்டு துறையை முறைப்படுத்தும் இன்ஷூரன்ஸ் ரெகுலேட்டரி அத்தாரிட்டி இத்தகைய விலை உயர்வுக்கு ஒப்புதல் அளிக்கும் என்பது சந்தேகமே.

ஒருவேளை விலை உயர்வுக்கு ஒப்புதல் அளித்தாலும் அது குறைந்த அளவில் பிரீமியம் தொகையை அதிகரிப்பதற்காக மட்டுமே இருக்கக்கூடும் என்றும், 25 சதவிகித விலை உயர்வுக்கு இன்ஷூரன்ஸ் ரெகுலேட்டரி அத்தாரிட்டி ஒப்புதல் அளிக்காது என்றும் நம்பப்படுவது வாடிக்கையாளர்களுக்கு ஆறுதலான தகவல் ஆகும்.

– கணபதி சுப்ரமணியம்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.