உலகுக்கு கொரோனா வைரஸ் அதிகாரபூர்வமாக அடையாளம் காட்டப்பட்டதற்கு முன்பே 2019-ல் வூஹான் ஆய்வகத்தின் ஆராய்ச்சியாளர்களுக்கு அந்த வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டது தொடர்பான புலனாய்வு அறிக்கை அதிரவைத்துள்ளது. அந்த அறிக்கைக்கு பதற்றத்துடன் உடனடியாக சீனாவும் மறுப்பு வெளியிட்டுள்ளது.

அமெரிக்க ஊடகமான ‘வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ தனது பத்திரிகையில் வெளியிட்ட புலனாய்வு அறிக்கை, உலகின் மற்ற நாடுகளை சீனா மீது சந்தேக கண்ணோடு பார்க்கவைத்துள்ளது. சீனா குறித்தும், கொரோனா வைரஸ் குறித்தும் அந்த புலனாய்வு அறிக்கை பேசுகிறது. அந்த அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள முக்கிய தகவல், ‘சீனாவில் கொரோனா பரவிய அதிகாரபூர்வ தகவல்களை அந்நாட்டு அரசு வெளியிடும் சில மாதங்களுக்கு முன்பே, கொரோனா வைரஸின் பிறப்பிடமாக சந்தேகிக்கப்படும் சீனாவின் வூஹான் வைராலாஜி ஆய்வகத்தில் பணியாற்றிய மூன்று ஆராய்ச்சியாளர்கள் கொரோனா அறிகுறிகள் உடன் மருத்துவ உதவி கேட்டு மருத்துவமனையில் சேர்ந்துள்ளனர்’ என்பதுதான்.

image

இந்த தகவல் இதுவரை பொதுவெளியில் வெளியிடப்படாத நிலையில், இந்தப் புலனாய்வு அறிக்கையில் ‘இதுபோல் ஆராய்ச்சியாளர்கள் எத்தனை பேர் கொரோனா பெருந்தொற்று ஏற்படும் முன்னரே பாதிக்கப்பட்டனர், அவர்கள் எப்போது பாதிப்பை உணர்ந்தனர்’ என்பது போன்ற தகவல்கள் விரிவாக சொல்லப்பட்டுள்ளது என வால் ஸ்ட்ரீட் ஜர்னல் தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

இதுபோன்ற அதிர்ச்சிதரக் கூடிய பல தகவல்கள் அந்த அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கிறது. ட்ரம்ப் அரசு இருந்தபோது அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் இந்தத் தகவல்களை திரட்டியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாக, அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் வூஹான் வைராலாஜி ஆய்வகத்தில் இருந்துதான் கொரோனா வைரஸ் பரவியது என உலக நாடுகள் மத்தியில் சந்தேகிக்கப்பட்டு வரும் இந்த வேளையில், இந்த தகவல் அதற்கு தீ வைக்கும் வகையில் அமைந்துள்ளது. உலக சுகாதார அமைப்பு நிபுணர்களின் சந்திப்பு இன்று நடக்க இருக்கும் நிலையில், இந்தச் சந்திப்பில் இந்த அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள தகவல் குறித்தும் விவாதித்து விசாரணை நடத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், சீனா இந்த அறிக்கையில் கூறப்பட்டிருக்கும் தகவல் பொய்யானது என்று கூறியுள்ளது. சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன் பெய்ஜிங்கில் இதுப்பற்றி பேசியபோது, ”அந்த அறிக்கை, உண்மையல்ல. முற்றிலும் பொய்யானது. அதில் கூறப்பட்டிருக்கும் கூற்றுக்கள் ஆதாரமற்றவை. இந்த நிலைமை குறித்து வூஹான் ஆய்வகம் அறிந்திருக்கவில்லை. இதுபோன்ற தகவல்கள் எங்கிருந்து வந்தன என்பது கூட எங்களுக்குத் தெரியாது. அமெரிக்கா தொடர்ந்து ஆய்வக கசிவு கோட்பாட்டை மிகைப்படுத்தி வருகிறது. இது கொரோனாவின் பிறப்பிடம் பற்றிய உண்மையை கண்டுபிடிக்கக்கூடிய தன்மையைப் பற்றி கவலைப்படுகிறதா அல்லது கவனத்தை திசை திருப்ப முயற்சிக்கிறதா என்பது தெரியவில்லை” என்று பதற்றத்துடன் கூறியிருக்கிறார்.

image

அதேநேரம், வால் ஸ்ட்ரீட் வெளியிட்டிருக்கும் இந்த அறிக்கை குறித்து அமெரிக்க அரசு இதுவரை வாய்திறக்கவில்லை. முன்னதாக பைடன் தலைமையிலான அரசு அமைந்தபோது கொரோனா பெருந்தொற்று குறித்தும், அதன் ஆரம்ப நாள்கள் குறித்து அமெரிக்க அரசு தொடர்ந்து கேள்விகளை எழுப்பி உண்மையை வெளிக்கொண்டுவர பாடுபடும் என கூறப்பட்டது. ஆனால், சமீபகாலமாக பைடன் அரசு இந்த விவகாரத்தில் மூக்கை நுழைப்பதை தவிர்த்து வருகிறது. ஆனால், உலக சுகாதார அமைப்புடன் இணைந்து கொரோனா தொற்று ஏற்பட்டது, பரவிய விதம் குறித்து ஆய்வு நடத்தி வருகிறோம். அந்த ஆய்வு அரசியல் மற்றும் பிற தலையீடுகள் எதுவுமில்லாத நடுநிலையாக இருந்து வருகிறது என அமெரிக்க தேசியப் பாதுகாப்புக் கவுன்சலின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

உலக சுகாதார அமைப்பு நடத்தி வரும் இதே ஆய்வை பல உலக நாடுகளும் சீரியஸாக கவனித்து வருகின்றன. மேலும், இந்த நாடுகள் அனைத்தும் விசாரணையில் வெளிப்படை தன்மை, அதோடு, கொரோனா தொற்றின் ஆரம்பகாலம், எப்படி பரவியது, வைரஸ் தொடர்புடைய மனிதர்கள் மற்றும் விலங்குகள் போன்றவற்றை கொண்டு விரிவான ஆய்வு நடத்த வேண்டும் என குரல் எழுப்பியுள்ளன. இதில் நார்வே, கனடா மற்றும் பிரிட்டன் போன்ற நாடுகள் முக்கியமானவை.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.