தென் அமெரிக்க நாடான எல் சால்வடார் மீண்டும் ஒரு பதைபதைக்கும் சம்பவத்தால் அதிர்ந்து போய் கிடக்கிறது. அங்கு ஒரு போலீஸ் அதிகாரி வீட்டில் குவியல் குவியலாக சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருவதுதான் லத்தீன் நாடுகளில் தற்போதைய ஹாட் டாபிக்.

பாலியல் காரணங்களுக்காக பெண்களும், சிறுமிகளும் அதிகம் கொலையாகும் நாடுகளில் ஒன்று எல் சால்வடார். கடந்த ஆண்டு மட்டும் சுமார் 70 பெண்களும், சிறுமிகளும் இந்தக் காரணங்களுக்காக கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். இதுவே 2019-ல் 111 பேர் கொலை செய்யப்பட்டு இருந்தனர் என்று அந்நாட்டு காவல்துறை சமீபத்தில் சொல்லியது.

இந்தநிலையில், இந்த ஆண்டு அந்நாட்டில் நடைபெற்றுள்ள மிகப்பெரிய கொலை சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. எல் சால்வடோர் தலைநகர் சான் சால்வடோரில் இருந்து சுமார் 78 கிலோ மீட்டர் தூரம் வடக்கே இருக்கும் நகரம், சாவேஸ் சான்ச்சுவாபா. இந்த நகரத்தில் வசிக்கும் முன்னாள் காவல் அதிகாரியான ஹியூகோ எர்னஸ்டோ ஒசாரியோ என்பவர் சில தினங்கள் முன் பாலியல் வழக்கின் விசாரணை ஒன்றில் ஆஜராகி இருந்தபோது, தான் வசிக்கும் நகரத்தைச் சேர்ந்த 57 வயதாகும் தாய் மற்றும் 26 வயது மகளை கொலை செய்ததையும் அவர்களின் சடலங்களை தனது வீட்டுத் தோட்டத்தில் புதைத்து வைத்துள்ளதையும் ஒப்புக்கொண்டார்.

image

இவரின் ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் ஹியூகோ எர்னஸ்டோவின் வீட்டை காவல்துறை மற்றும் தடயவியல் துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். இந்த சோதனையில் அந்த இரண்டு பெண்கள் மட்டுமில்லாமல், பல பெண்களை கொலை செய்து சடலங்களை புதைத்து வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கண்டுபிடிக்கப்பட்ட சடலங்கள் அனைத்தும் பெண்கள் மற்றும் சிறுமிகளுடையது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வியாழக்கிழமை தொடங்கிய சடலங்கள் தோண்டும் பணி தற்போது வரை நடைபெற்றுள்ளது.

முதலில் மொத்தமாக 24 உடல் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டது என காவல்துறை தகவல் தெரிவித்த நிலையில், சில மணி நேரங்களில் மொத்தம் எட்டு பேரின் சடலங்கள் ஹியூகோ வீட்டில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என செய்தி நிறுவனங்கள் தெரிவித்தன. இதனால் எத்தனை சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டது என்பதில் குழப்பம் நிலவி வருகிறது. எனினும் தொடர்ந்து தோண்டும் பணிகள் நடைபெற்றுவருவதால் இன்னும் அதிகமான சடலங்கள் கண்டுபிடிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

image

சடலங்களின் நிலையை வைத்து பார்க்கும்போது, ஹியூகோ பல வருடத்துக்கும் மேலாக தொடர் கொலைகளை நிகழ்த்தி வந்திருக்கலாம் என போலீஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர். மண்ணில் புதைக்கப்பட்டிருந்த மேலும் சில உடல்கள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு புதைக்கப்பட்டு இருக்கலாம் எனவும் யூகிக்கப்படுகிறது என்று அந்நாட்டு காவல்துறை கூறியுள்ளனர். தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள சடலங்களை கொண்டு இறந்தவர்களை அடையாளம் காண்பதற்காக டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதற்கிடையே, ஏ.பி நியூஸ் ஏஜென்சி வெளியிட்ட செய்தியில், கண்டுபிடிக்கப்பட்ட சடலங்களில் இரண்டு வயது குழந்தையின் உடலும் இடம்பெற்றுள்ளது என கூறியுள்ளது.

image

இதேபோல், அந்நாட்டைச் சேர்ந்த ‘லா ப்ரெண்சா’ என்ற செய்தித்தாள் கூறுகையில், “இந்த வழக்கில் ஆள் கடத்தல்காரர்கள், முன்னாள் காவல் அதிகாரிகள், முன்னாள் ராணுவத்தினர் உள்பட குறைந்தது 10 பேர் இடம்பெற்றுள்ளனர் என்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது” என்று தெரிவித்துள்ளது.

முன்னதாக, ஹியூகோ வீட்டில் சடலங்கள் எடுக்கப்பட்டு வருவதாக செய்திகள் வெளியானதை அடுத்து பல ஆண்டுகளாக தங்கள் உறவினர்களை காணாமல் தவித்தவர்கள் பலரும் அவரின் வீட்டின் முன்பு குவிந்தனர். கையில் காணாமல் போன தங்கள் உறவினர்களின் புகைப்படத்துடன் குவிந்ததால் அங்கு அதிக பரபரப்பு நிலவியது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.