கொரோனா தீவிரமாக இருக்கும் முக்கியமான 11 மாநிலங்களை சேர்ந்த மாவட்ட மாஜிஸ்திரேட்டுகளுடன் பிரதமர் நரேந்திர மோடி நடத்திய கூட்டத்தில், மோடி மட்டுமே பேசியதாகவும் மாஜிஸ்திரேட்டுகளுக்கு பேச உரிமை மறுக்கப்பட்டதாகவும் கூறி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பிரதமர் மோடிக்கு கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

மோடியுடனான பேச்சுவார்த்தை, ஒரு வழியாக இருந்திருக்கிறது எனக்கூறியுள்ள அவர், இது முதல்வராக தனக்கு இழைக்கப்பட்ட அவமானம் என கூறியிருக்கிறார் மம்தா. 

image

இந்தக் கூட்டம் மட்டுமன்றி, மாநில முதல்வர்கள் கலந்துக்கொள்ளும் கூட்டத்திலும் இப்படித்தான் நடக்கிறது எனக்கூறியுள்ளார் மம்தா. இதுபற்றி பேசுகையில், “மாநில முதல்வர்கள் அனைவரும், நாட்டின் சர்வாதிகாரவாதி ஒருவரால், பொம்மலாட்ட பொம்மைகள் போல அந்தக்கூட்டத்தில் அமர வைக்கப்பட்டனர். மாநில முதல்வர்கள் பிரச்னைகளைப்பற்றி கூற அனுமதிக்கப்படாவிட்டால், பிரதமர் எப்படி நாட்டின் பிரச்னைகளை அறிவார்?

நாங்கள் யாரும் அவரிடம் வேலைபார்க்கும் தொழிலாளர்களல்ல. மக்களின் பிரதிநிதிகள். பிரதமரின் இந்த நடவடிக்கைகள், எங்களுக்கு இழைக்கப்பட்ட அவமானம். அவர் சர்வாதிகாரத்தன்மையோடு செயல்படுகிறார். தன் நாட்டின் மாநில முதல்வர்களுடன்கூட பேச பிரதமருக்கு பயமாக இருக்கிறது. இந்த அளவுக்கு அவர் இதில் பயப்பட என்ன இருக்கிறதென்றுதான் எனக்கு தெரியவில்லை.

மத்திய அரசுக்கு, கட்டடங்கள் கட்டமைக்கவும், சிலைகள் எழுப்பவும் நேரம் இருக்கிறது. ஆனால், மாநில முதல்வரின் கருத்தை கேட்க நேரமில்லை. இந்தியா தனது இக்கட்டான நிலையில் இருக்கிறது, ஆனால் பிரதமர் எதுவுமே நடக்காதது போல சர்வசாதாரணமான மனநிலையில் இருக்கிறார். பிரதமருக்கு ஏற்றவாறு டெல்லி முதல்வர், அவர் கண்முன்னே மக்கள் செத்துக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில்கூட ‘எல்லாம் நன்மைக்கே’ என சொல்லிக்கொண்டுள்ளார்.

மத்திய அரசு, புனித கங்கையை மரணங்களின் கூடாரமாக மாற்றிவிட்டது. கொரோனாவால் இறந்தோரின் சடலங்கள் அங்கிருந்து நதி வழியாக பாய்ந்தோடி, எங்கள் மேற்கு வங்கத்தை அடைந்து வருகின்றன. இவையாவும் நீரை மாசுபடுத்தி, சுகாதார சீர்கேடுகளை அதிகப்படுத்துகின்ற்ன. முக்கியமாக கொரோனாவை இன்னும் இன்னும் பரப்புகின்றன. கங்கையில் வீசப்பட்ட சடலங்கள் பற்றிய சிறு தரவுகூட அரசிடம் இல்லை. இயற்கையோடு விளையாடுவது, மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும். விளைவுகளுக்கு பின், இயற்கையோடு நம்மால் சமரசம் செய்ய முடியாது. சூழல் இந்தளவுக்கு மோசமாகியும் மத்திய அரசு ஏன் இன்னும் கங்கைக்கு சி.பி.ஐ-யோ, மத்திய குழுவையோ அனுப்பாமல் இருக்கிறது?” எனக்கூறிப்பிட்டுள்ளார் அவர்.

இதைத்தொடர்ந்து, மத்திய பாஜக அரசுக்கு எதிராக குழுவொன்றை நியமிக்க வேண்டுமென குறிப்பிட்டுள்ளார் மம்தா. அந்தக்குழு, சர்வாதிகாரத்துக்கும் ஜனநாயகத்துக்குமான போட்டியாக இருக்கும் என்று கூறியுள்ளார் அவர்.

மம்தாவுக்கு எதிராகவும் இந்தக் கருத்துகள் திருப்பப்படுகிறது என்பதும் மறுப்பதற்கில்லை. அந்தவகையில், மேற்கு வங்கத்திலுள்ள நார்த் 24 பார்கனாஸ் பகுதி மாவட்ட மாஜிஸ்திரேட் கூட்டத்தில் தன் கருத்தை பகிர்ந்துக்கொள்ள நினைத்து முன்வந்தபோது, மம்தா பானர்ஜிதான் அவரை தடுத்துவிட்டார் என்றும்; தான் கூட்டத்தில் இருக்கும்போது, தான் மட்டுமே பேசவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டதாக சொல்லப்படுகிறது.

மம்தா பானர்ஜி இந்தளவுக்கு காட்டமாக இந்த விவகாரத்தில் விமர்சனம் செய்தபோதும், அக்கூட்டத்தில் பங்கெடுத்த பிற மாநில முதல்வர்கள் யாரும் இதுபற்றி வாய்த்திறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தகவல் உறுதுணை : Indian Express

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.