கொரோனாவின் தாக்கமானது நாளுக்கு நாள் புதிய உச்சத்தினை அடைந்து வருகிறது. இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் மத்திய பா.ஜ.க. அரசானது சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாமல் செயல்பட்டு வருகிறது. ஒருமுனையில், கொரோனா நோயாளிகளுக்கு தேவையான அளவு ஆக்ஸிஜன் வசதிகளின்றி அல்லாடி வருகின்றனர். மறுமுனையில், கொரோனாவால் கொத்துக் கொத்தாக மடிந்து வருபவர்களை எரிப்பதற்கு இடமின்றி திணறி வருகின்றனர். நோயிலிருந்து தற்காத்துக் கொள்ளும் தடுப்பூசிகளுக்கும் தட்டுப்பாடு. இப்படி பல்வேறு இன்னல்களை சந்தித்து வரும் இந்தியா அபாய நிலையில் உள்ளது என்பதே நிதர்சனம். குறிப்பாக தலைநகர் டெல்லியை பொறுத்தவரையில், கொரோனாவால் உயிரிழப்போர் விகிதம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அவர்களுக்குத் தேவையான படுக்கை வசதிகளும் போதுமானதாக இல்லை. டெல்லி மாநில அரசாங்கம் அவசரகால நடவடிக்கையாக பல்வேறு பணிகளைச் செய்துவருகிறது. ஆனால், மத்திய அரசாங்கம் இந்த இக்கட்டான சூழலிலும் நாட்டிற்கான புதிய நாடாளுமன்ற கட்டிடத்தைக் கட்டி (Central Vista Redevelopment Project) நாட்டின் 75வது சுதந்திர தின விழாவன்று அதற்கு திறப்பு விழா நடத்துவதற்கு முனைப்பாக செயல்பட்டு வருகிறது. இதற்கென மத்திய பட்ஜெட்டில் சுமார் ரூ.20,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்புற மேம்பாட்டு அமைப்பின் கீழ் இதற்கான கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள ஷபூர்ஜி பல்லோன்ஜி கட்டுமான நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

new parliament construction work

மொத்தம் 64,500 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்படும் இக்கட்டிடத்திற்காக இந்தியா கேட் நெடுகே அமைந்திருக்கும் நூற்றுக்கணக்கான மரங்கள் வெட்டப்படுவதாக சர்ச்சை எழுந்தது. பின்னர், அவை இடமாற்றம் செய்யப்போவதாக தெரிவித்தனர்.அதன்பின், தற்போது கொரோனாவின் இரண்டாவது அலையானது டெல்லியில் நாளுக்கு நாள் வேகமெடுத்து வருவதால் அதை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக அம்மாநில அரசாங்கம் கடுமையான ஊரடங்கினை அமல்படுத்தியுள்ளது.இந்நிலையில், இந்தாண்டு மே மாதம் 7ம் தேதி கொரோனாவின் தாக்கம் தலைவிரித்து ஆடி வருவதால். சூழ்நிலையானது இயல்பு நிலைக்கு திரும்பும் வரை புதிய நாடாளுமன்றத்தின் கட்டிடப் பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டுமென்று அன்யா மல்ஹோத்ரா என்பவரால் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதற்கு மத்திய அரசின் தரப்பிலிருந்து, “நாங்கள் கட்டுமானப் பணியில் ஈடுபட்டு வரும் 400க்கும் மேற்பட்ட பணியாளர்களையும் அங்கேயே பணி நடைபெற்று வரும் இடத்திலேயே தனியாக தங்க வைத்து கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி செயல்படுத்தி வருகிறோம். அதேபோல் அனைவருக்கும் கொரோனா பரிசோதனையானது அவ்வப்போது நடத்தப்பட்டு வருகிறது. மேலும், பணியாளர்களின் உடல்நிலையில் அக்கறை கொண்டு அவசரத் தேவைகளுக்காக சிறப்பு மருத்துவக் குழு ஒன்றையும் நியமித்துள்ளோம். இவ்வாறு அரசாங்கத்தின் அனைத்து விதிகளையும் கடைப்பிடித்து செயல்பட்டு வருகிறோம். அதனால், இதற்கு நீதிமன்றம் தடைவிதித்தால் அது சட்டத்திற்கு புறம்பான செயலாகும் என்றும். மனுதாரரால் கோரப்பட்ட மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்”. எனத் தெரிவித்துள்ளனர்.இந்நிலையில், அங்கே பணிபுரிந்து வரும் பணியாளர்களின் பெரும்பாலானோர் தினமும் வெளியிலிருந்து பயணித்து வந்து கட்டுமானப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மிகவும் தொலைவிலிருந்து வரும் பணியாளர்களே இங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதுவும் கொரோனா விதிககள் காற்றில் பறந்துள்ளதாகவே கூறுகின்றனர் பணியாளர்கள். இந்த இக்கட்டான சூழலிலும் பணியாளர்களின் கைகளில் கணிசமான பணப்புழக்கம் உள்ளதால், அவர்களும் புதிய நாடாளுமன்றத்தின் கட்டிடப் பணிகள் தொடர்ந்து நடைபெறுவதையே விரும்புகின்றனர் என்பது ஆங்கில செய்தி ஊடகம் ஒன்று சமீபத்தில் நடத்திய கள ஆய்வில் தெரியவந்துள்ளது. டெல்லி உயர்நீதிமன்றமும் மறு விசாரணையை வரும் மே 17ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது. அதனைத் தொடர்ந்து தற்போது கட்டுமானப் பணி நடைபெற்று வருமிடத்தில் புகைப்படங்கள் மற்றும் வீடியோ எடுப்பதற்கு அனுமதியில்லை என்ற அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது மீண்டும் சர்ச்சை அலைகளை கிளப்பியுள்ளது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.