கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கான பணிகள் நாடு முழுவதும் நடந்து வரும் சூழலில், இந்தியாவில் தடுப்பூசி மூலம் கிடைக்கும் ஹெர்டு இம்யூனிட்டி எனப்படும் கொரோனாவுக்கு எதிரான குழு நோய் எதிர்ப்பு சக்தி அனைவருக்கும் கிடைக்க, குறைந்தபட்சம் 3.5 வருடங்களாவது ஆகுமென வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி விநியோகத்தில், தங்களிடம் தடுப்பூசி போதியளவு இல்லையென பல மாநில அரசுகள் கைவிரித்துவிட்டன. மொபைல் செயலியான ‘கோவின்’ ஆப் வழியாக தடுப்பூசிக்கு முன்பதிவு செய்யலாம் என்றால், தொழில்நுட்ப கோளாறுகளால் செயலியில் பல சிக்கல்கள் இருக்கிறது. இதற்கிடையே, தடுப்பூசி நிறுவனங்களும் உடனடி உற்பத்தி சாத்தியமில்லை – ஜூலை மாதம் தான் தடுப்பூசி பன்டங்கு உற்பத்தி கிடைக்கும் என சொல்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, உருமாறிய கொரோனாவுக்கு எதிராக, இப்போதிருக்கும் தடுப்பூசிகள் செயல்படாமல் போகலாம் என உலக சுகாதார நிறுவனம் இன்று எச்சரித்துள்ளது.

இருப்பினும் இந்த இரண்டாவது அலையிலிருந்து தப்பிக்க, தடுப்பூசி மிக முக்கியமானதாக இருக்கிறது.

image

கடந்த 100 நாள்களில் இந்தியாவில் தடுப்பூசி போடப்பட்டு வரும் விகிதத்தை வைத்து பார்க்கும்போது, இனி வரும் நாள்களில் இந்தியா தன் பெருவாரியான மக்களுக்கு தடுப்பூசி போட வெகுகாலம் எடுக்கும் என்பது தெரியவந்துள்ளது. உடனடியாக இந்தியாவில் தடுப்பூசிகள் போடப்படும் மிக வேகமாக அதிகரிக்காவிட்டால், இந்திய மக்கள் தொகையில் 70 சதவிகித மக்களுக்கு தடுப்பூசி போட, மூன்றரை வருடங்கள் ஆகுமென சொல்லப்பட்டுள்ளது.

இதுவரை இந்தியாவில் அனைத்து மாநிலங்களுக்கும் சேர்த்து 19 கோடி வரை தடுப்பூசி விநியோகிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஒரு நாளுக்கு 15 லட்சம் தடுப்பூசி என்ற விகிதத்திலோ, மாதத்துக்கு 4.5 கோடி என்ற விகிதத்திலோ விநியோகிக்கப்பட்டுள்ளது. இதேபோல அடுத்த 12 மாதங்களுக்கு (ஒரு வருடத்துக்கு) தடுப்பூசி விநியோகிக்கப்பட்டால், இந்தியா முழுக்க 54 கோடி தடுப்பூசிகள்தான் மொத்தமாக விநியோகிக்கப்பட்டிருக்கும்.

இந்தியாவின் மொத்த மக்கள் தொகை 135 கோடி. கொரோனாவுக்கான குழு நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்க இந்தியாவில் 70 சதவிகித மக்களுக்கு தடுப்பூசி கிடைக்க வேண்டும். இத்தனை மக்களுக்கு, இரண்டு டோசேஜ் தடுப்பூசி என்று கணக்கீட்டின்படி பார்த்தால், இதுவரை போட்டுக்கொள்ளப்பட்ட தடுப்பூசிகள் போக, மீதம் 189 கோடி தடுப்பூசிகள் தேவைப்படும். இவற்றை வருடத்துக்கு 54 கோடி என்ற வேகத்தில் விநியோகித்தால், 70 % மக்களை அடைய இன்னும் மூன்றரை வருடங்கள் ஆகும் என்பதுதான் கணக்கு.

ஏற்கெனவே ‘இப்போது வழக்கத்திலிருக்கும் தடுப்பூசிகள், இனிவரவிருக்கும் உருமாறிய கொரோனாவுக்கு எதிராக செயல்படாமல் போகலாம்’ என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்திருக்கிறது. அடுத்த அலையில் குழந்தைகள்தான் அதிக அளவில் பாதிக்கப்படுவர் என கணிக்கப்பட்டு வரும் நிலையில், அவர்களுக்கான தடுப்பூசி இன்னும் கண்டறியப்படவேயில்லை. இப்படி நடைமுறை சிக்கல்களே இவ்வளவு இருக்கும் சூழலில் இப்போதும் தடுப்பூசிக்கு பற்றாக்குறை வருவது, இரண்டாம் அலையிலேயே லட்சக்கணக்கான மக்களை நாம் இழக்கும் அளவுக்கு ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் எச்சரிக்கின்றனர் வல்லுநர்கள்.

தகவல் உறுதுணை : India Today

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.