கேரளாவை சேர்ந்த கொரோனா தனிமைப்படுத்துதல் மையத்தில், திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்ட ஒருவரை அங்கிருந்த தன்னார்வலர்கள் துரிதமாக செயல்பட்டு மருத்துவமனை அழைத்துச்சென்று காப்பாற்றியுள்ளனர்.

கேரளாவில், வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளும் வசதியில்லாத கொரோனா நோயாளிகளுக்கென, அரசு சார்பில் கொரோனா தனிமைப்படுத்துதல் மையங்கள் அமைக்கப்பட்டிருக்கிறது. அதில் ஒரு மையமான ஆலப்புழாவின் வட புனப்பாரா மையத்தில், தனிமைப் படுத்தப்பட்டிருந்த ஒருவருக்கு நேற்று இரவு திடீரென மூச்சுத்தினறல் ஏற்பட்டிருந்திருக்கிறது. அவர் தங்கியிருந்த மையத்தில், இவரை போல ஏறத்தாழ 87 நோயாளிகள் இருந்திருக்கின்றனர். இருப்பினும் அங்கே மருத்துவ உதவியாளர்களோ, வெண்டிலேட்டர் வசதியோ இல்லாமல் இருந்திருக்கிறது.

image

இரவு முழுக்க மூச்சுத்திணற சிரமப்பட்டிருந்திருக்கின்றார் அந்நபர். காலையில் அங்கு உணவளிக்க சென்ற தன்னார்வலர்களான அஷ்வின் மற்றும் ரேகாவுக்கு அவரின் நிலை காலையில் தெரியவந்துள்ளது. இரவிலிருந்தே மூச்சுத்திணறலால் தவித்து வந்த காரணத்தால் அந்நபர், மிகமோசமான நிலையில் இருந்திருக்கிறார். இதைப்பார்த்த அஷ்வின் மற்றும் ரேகா, ‘இனியும் தாமதிக்க வேண்டாம்’ என நினைத்து, அவரை இருசக்கர வாகனத்தில் அருகிலிருந்த மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளனர். அஷ்வின் அந்நபரை தனக்கு பின் அமரவைத்துக்கொள்ள, நோயாளிக்கு பின் ரேகா அமர்ந்து, அவர் கீழே விழுந்துவிடாமல் பார்த்துக்கொண்டிருந்திருக்கிறார்.

இதுபற்றி அஷ்வின் அளித்திருக்கும் பேட்டியில், “நாங்கள் உணவளிக்க சென்றபோது, அங்கிருந்த ஒருவர்தான் மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்ட நபரை குறித்து எங்களிடம் கூறினார். பாதிக்கப்பட்ட நபர் மூன்றாவது மாடியில் இருந்தார். நாங்கள் சென்று பார்த்த போது,மிக மோசமான நிலையில் அவர் இருந்தார். உடனடியாக நாங்கள் ஆம்புலன்ஸூக்கு ஃபோன் செய்து பார்த்தோம். கிட்டத்தட்ட மூன்று ஆம்புலன்ஸ் சேவைகள், வர இயலாத சூழலில் தாங்கள் இருப்பதாக சொல்லிவிட்டனர். அதனால்தான் வண்டியில் அழைத்துச்சென்றோம்” எனக்கூறியுள்ளார்.

ரேகா பேசும்போது, “இங்கு மூச்சுத்திணறல் ஏற்பட்ட நோயாளியை பார்த்துக்கொள்ளவோ, அவருடன் மருத்துவமனைக்கு வருவதற்கோ யாரும் முன்வரவில்லை. அதனால்தான் நானே பின் அமர்ந்து சென்றேன். ஒருவேளை ஆம்புலன்ஸூக்காகவோ, வேறு யாருக்காகவோ காத்திருந்தால், இன்று அவரின் உயிர் கேள்விக்குறியாகியிருக்கும். நல்லவேளை, நாங்கள் அந்த ரிஸ்கை எடுக்கவில்லை. நாங்கள் சென்ற வண்டிக்கூட, அங்கு தங்கியிருந்த ஒருவருடையதுதான்” எனக்கூறியுள்ளார்.

அஷ்வினும் ரேகாவும், இந்திய ஜனநாயக இளைஞர் கூட்டமைப்பை சேர்ந்த தன்னார்வலர்கள். இந்த அமைப்பு, அம்மாநிலத்தின் ஆளுங்கட்சியான சி.பி.எம். கட்சியின் இளைஞரணியை சேர்ந்த அமைப்பென்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள், இங்கு தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் நபர்களுக்கு உணவளிக்கும் சேவையை பல நாள்களாகவே செய்து வருகின்றனர். இங்கு மட்டுமன்றி, வீட்டுத்தனிமையில் இருக்கும் கொரோனா நோயாளிகளுக்கு அவர்களின் வீட்டுக்கே சென்று மருந்து விநியோகிக்கும் சேவையும் அளித்து வருகிறார்கள் என சொல்லப்படுகிறது.

பைக்கில் அந்நபரை அழைத்துச்சென்ற போதும், அஷ்வின் – ரேகா இருவருமே பாதுகாப்பு உடைகள் அணிந்திருந்திருந்தனர். இதனால் அவர்களுக்கு கொரோனா ஆபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. இவர்கள் நோயாளியை அழைத்து செல்லும் புகைப்படம் தொலைக்காட்சிகளில் வெளிவந்ததை தொடர்ந்து, அந்த மையம் பற்றி ஆய்வுசெய்ய மருத்துவக் குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் அஷ்வின் மற்றும் ரேகாவுக்கு, கேரள முதல்வர் பினராயி விஜயன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

தகவல் உறுதுணை : onmanorama.com

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.