27 வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு, மனைவி மெலிண்டாவை விவாகரத்து செய்வதாக அறிவித்திருக்கிறார் உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான பில்கேட்ஸ்.

பில்கேட்ஸ்… உலகின் நான்காவது பெரும் பணக்காரர் ஆவார். இவரின் சொத்து மதிப்புகள் ஏறத்தாழ 130.5 மில்லியன் டாலர் என தரவுகள் தெரிவிக்கின்றன. மைக்ரோசாப்ட் நிறுவனரான இவர், அந்த வருமானத்தை அப்படியே சேர்த்து வைத்திருந்தால், உலகின் முதல் பணக்காரராகும் வாய்ப்பு இருந்தது. ஆனால், பில்கேட்ஸுக்கு நம்பர் ஒன் பணக்காரர் என்ற பட்டத்தை விடவும், அறக்கட்டளை நிறுவுவதும், அதை நிர்வாகிப்பும் சிறப்பானது எனத் தோன்றியது. ஆகவே, தன் சொத்திலிருந்து குறிப்பிட்ட தொகையை நன்கொடையாக வழங்கும் பழக்கத்தில் இருந்தார் பில்கேட்ஸ்.

அப்படியான சூழலில், 2000-ம் ஆண்டு, ‘பில் & மெலிண்டா கேட்ஸ்’ அறக்கட்டளை என்ற பெயரில், பில்கேட்ஸ் மற்றும் அவர் மனைவி மெலிண்டா கேட்ஸ் இருவரும் இணைந்து, ஒரு தனி அறக்கட்டளையை நிறுவினர். இந்த அறக்கட்டளையில் ஆரம்ப சுகாதாரம், கல்வி மற்றும் பருவநிலை மாற்றங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இப்போது வரை இந்த அறக்கட்டளை தீவிரமாக செயல்பட்டுக்கொண்டேதான் இருக்கின்றது.

image

கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய நேரத்தில், 1.75 பில்லியன் டாலர் மதிப்பிலான நன்கொடை தொகையை, கொரோனா பரிசோதனை – கொரோனா தடுப்பூசி விற்பனை – கொரோனா தொடர்பான ஆய்வுகள் போன்றவற்றுக்கு தன் அறக்கட்டளை மூலமாக அளித்திருக்கிறனர் பில்கேட்ஸ் – மெலிண்டா தம்பதியினர்.

2019-ம் ஆண்டு கணக்குப்படி, இந்த அறக்கட்டளையின் சொத்து மதிப்பு 43.3 பில்லியன் டாலர் இருந்திருக்கிறது. 2019-ம் ஆண்டு மட்டும், 5 பில்லியன் டாலர் தொகையை, உலகம் முழுக்க பலதரப்பட்ட நிகழ்ச்சிகள் நடத்த பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. 1994 – 2018 ஆண்டுகளுக்கு உட்பட்ட காலத்தில் 36 பில்லியன் டாலர் சொந்த பணத்திலிருந்து நன்கொடை அளித்திருக்கின்றனர்.

இத்தனைக் காலமும், தம்பதிகளாக இருவரும் இணைந்து இந்த அறக்கட்டளையை கவனித்துக் கொண்டிருந்தனர். ஆனால், இப்போது இருவரும் பிரிவதால், அறக்கட்டளை என்னா ஆகுமோ என்ற கேள்வி பலருக்கும் எழுந்தது.

அந்த சந்தேகத்துக்கு பதிலளிக்கும் வகையில், தங்களுடைய மண வாழ்வு முறிவு தொடர்பான அறிக்கையில், “நாங்கள் மிகச்சிறந்த ஓர் அறக்கட்டளையை இணைந்து கட்டமைத்தோம். உலக அளவில் அனைத்து மக்களும் ஆரோக்கியமாகவும் ஆக்கபூர்வமாகவும் வாழ அது உதவியது.

இனிவரும் காலங்களிலும், அறக்கட்டளை பணியில் நாங்கள் இருவரும் சேர்ந்து பணியாற்ற முடியும் என்ற நம்பிக்கையை கொண்டுள்ளோம். வாழ்வின் அடுத்த கட்டத்துக்கு செல்லும்போது ஒரு தம்பதியாக இணைந்து வளர முடியும் என்று நாங்கள் நம்பவில்லை என்பதால், மண வாழ்விலிருந்து பிரிகிறோம்” என்று இருவரும் கூறியுள்ளனர்.

இதுதவிர, சொந்த சொத்துகளை பிரிக்கவிருக்கிறாரா, தங்களின் மூன்று பிள்ளைகளுக்கும் எவ்வளவு சொத்து பிரித்துக்கொடுக்க இருவரும் முடிவு செய்துள்ளனர் என்பது பற்றிய விவரங்களை இருவரும் தெரிவிக்கவில்லை.

இருவரும் பிரியவிருக்கும் இந்தச் சூழலில், ஒருவேளை தங்கள் சொத்துகளையும் பிரித்துக்கொள்ள இருவரும் திட்டமிட்டால், தன் சொத்திலிருந்து சில பங்குகளை பில்கேட்ஸ் இழக்க நேரிடும். அது, உலகளவில் மிகப்பெரிய பணக்காரர் பட்டியலிலிருந்து அவரை இறக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. இதுபற்றி அவரிடமிருந்து விளக்கம் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.