மூன்றாவது முறையை முதல்வர் அரியணையில் ஏறும் மம்தா பானர்ஜியின் வாழ்க்கை, போராட்டம் நிறைந்தது. அந்தப் போராட்டத்தில் அவர் கடந்து வந்த பாதை இங்கே…

மேற்கு வங்கம் என்றால் தாகூர், ரைட்டர்ஸ் மாளிகை ஆகிய வரிசையில் நினைவுக்கு வருவது கம்யூனிஸ்ட் முதல்வர் ஜோதிபாசுவின் பெயர். 1977-ம் ஆண்டு தனிப்பெரும்பான்மையோடு ஆட்சியில் கம்யூனிஸ்ட் கட்சி அமர்ந்தபோது ஜோதிபாசு அரசியலில் கில்லியாக இருந்தார். தான் விரும்பியவரை முதல்வர் நாற்காலியை அலங்கரித்த ஜோதிபாசு, அதன்பிறகே அரசியலில் இருந்து ஓய்வு பெற்றார் . ஜோதிபாசு என்ற ஒற்றை மனிதரால் அடுத்த 30 ஆண்டுகளில் மேற்கு வங்கத்தில் கம்யூனிஸ்ட்டுகளை தகர்க்க யாராலும் முடியவில்லை, ஒருவரை தவிர. அவர்தான் மம்தா பானர்ஜி. ஜோதிபாசுவின் கடைசி காலத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் அரசியலுக்கு குடைச்சல் கொடுத்து கொண்டிருந்தார் மம்தா.

image

ஜோதிபாசு இறந்தபோது மேற்கு வங்கத்தின் ஆட்சி புத்ததேவ் பட்டாச்சார்யா கைகளுக்கு சென்றது. புத்ததேவ் தனது ஆட்சியில் செய்த பிழைகள், மம்தாவை தூண்டியது. முதலாவதாக, நந்திகிராம் கிளர்ச்சி. தற்போது மம்தா தேர்தலில் போட்டியிட்ட நந்திகிராம் தொகுதியில் கெமிக்கல் ஆலைக்கு அனுமதி தந்திருந்தார் புத்ததேவ். இதற்காக விவசாயிகளிடம் இருந்து நிலங்கள் பறிக்கப்பட, வீதிகளில் திரண்டனர் விவசாயிகள். அப்போதுதான் திரிணாமுல் கட்சியை கட்டமைத்து கொண்டிருந்த மம்தா, விவசாயிகள் உடன் போராட்ட களம் கண்டார். பின்வாங்கினார் புத்ததேவ். இது மம்தாவுக்கு கிடைத்த முதல் வெற்றியாக அமைந்தது. இந்த வெற்றியின் விளைவு, மாநிலம் முழுவதும் அப்போது நடந்த உள்ளாட்சித் தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சியை காலி செய்தார் மம்தா.

அடுத்தடுத்த வாய்ப்புகளை எதிர்நோக்கிய மம்தாவுக்கு அடுத்த லட்டாக அமைந்தது சிங்கூர். இந்த முறை சிங்கூரில் டாடா நிறுவனத்துக்கு அனுமதி அளித்து நிலங்களை கைப்பற்றி கொடுத்தார் அதே புத்ததேவ். இப்போதுமட்டும் விட்டுவிடுவாரா மம்தா!?

போராட்டங்களை மக்களுடன் இணைந்து தீவிரப்படுத்தினார். மேற்கு வங்க வரலாற்றில் குறிப்பாக, கம்யூனிஸ்ட், மம்தா வரலாற்றில் மறக்க முடியாத சம்பவமாக அமைந்தது இந்தப் போராட்டம். இறுதியில் டாடா நிறுவனமே பின்வாங்கி மேற்கு வங்கத்தில் இருந்து குஜராத் சென்றது. மம்தாவின் இந்தப் போராட்டங்களுக்கு கிடைத்த வெற்றி, மேற்கு வங்க மக்களின் மனதில் அவரை சிம்மாசனம் போட்டு அமரவைத்தது. இதன்காரணமாக மம்தாவின் அரசியல் கிராப் அதிகரித்து கொண்டே இருந்தது. தொடர்ந்து நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல் என கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பிலும் கம்யூனிஸ்ட் கட்சியை சிதைத்து தடமே இல்லாமல் அழித்துவிட்டார்.

image

இந்தச் சம்பவங்களுக்கு முன்பே கம்யூனிஸ்ட் கட்சிகளின் தவறை சுட்டிக்காட்டுவதில் எப்போதும் தயங்காதவர் மம்தா. சிறுவயதிலே அந்தக் குணம் அவரிடம் இருந்தது. இது அவர் காங்கிரஸில் இருந்தபோதும் தொடர்ந்தது.

ஆம், காங்கிரஸில்தான் மம்தாவின் அரசியல் வாழ்க்கையே ஆரம்பித்தது. அதுவும் 15 வயதில் அரசியலில் நுழைந்த பெருமை அவருக்கு இருக்கிறது. அந்த வயதிலேயே காங்கிரஸ் கட்சி கூட்டங்களில் கலந்துகொள்ள ஆரம்பித்து, துணிச்சலோடு எதையும் பேசிவந்தார். 1970-களில் காங்கிரஸ் கட்சியில் இணைந்து அரசியல் வாழ்க்கையை தொடங்கிய மம்தா, ஜோகமயா தேவி கல்லூரியில் வரலாறு படித்துக் கொண்டிருக்கும்போது, காங்கிரஸ் மாணவர் அணிக்கு தலைவர் என்ற முதல் உச்சத்தை தொட்டார். அதற்கடுத்து அரசியல் வாழ்க்கையில் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருந்தார் மம்தா.

தேர்தல் அரசியலில் காலடி எடுத்து வைத்தார். 1984-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான சோம்நாத் சாட்டர்ஜியை தோற்கடித்தார். இதுதான் அரசியலில் இவரின் முதல் வெற்றி. சோம்நாத் சாட்டர்ஜி அப்போது மேற்கு வங்கத்தில் அசைக்க முடியாத ஒரு தலைவர். அவரை வீழ்த்தியால் மம்தாவின் செல்வாக்கு கட்சிக்குள் அதிகரிக்கத் தொடங்கியது.

கம்யூனிஸ்ட்களை தொடர்ந்து எதிர்ப்பதை மம்தா கைவிடவில்லை. ஆனாலும், மேற்கு வங்க அரசை எதிர்த்துப் போராட அவருக்கு காங்கிரஸ் தலைமை கைகொடுக்கவில்லை. காங்கிரஸின் முகமாக அறியத் தொடங்கிய மம்தா தலைமை ஒத்துழைப்பு கொடுக்காததால் சரத் பவார், சந்திரசேகர் ராவ், மூப்பனார் என காங்கிரஸில் இருந்து வெளியே சென்ற தலைவர்களில் பட்டியலில் இணைந்தார்.

1997-ல் காங்கிரஸில் இருந்து விலகி, அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் என்ற புதிய கட்சியை தொடங்கினார். இன்றைய தேதியில் கம்யூனிஸ்ட்கள், காங்கிரஸ், இந்துதுவா என மூன்று சித்தாந்தங்களோடு மல்லுக்கட்டிய ஒரே தலைவர் மம்தா தீதி மட்டுமே. இந்த நேரத்தில்தான் நந்திகிராம், சிங்கூர் போராட்டங்கள் கைகொடுக்க, மேற்கு வங்கத்தில் மகாசக்தியாக உருவெடுத்தார்.

2011-ல் நடந்த மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 33 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த கம்யூனிஸ்ட் அரசின் கோட்டையை தகர்த்து வெற்றிக்கொடி ஏந்தியது. அரியணை ஏறினார் முதல்வர் மம்தா. இதன்பின் மேற்கு வங்கத்தின் அனைத்துமாக மாறிப்போனார் மம்தா.

காங்கிரஸ், கம்யூனிஸ்ட் என எந்தக் கட்சியிலும் மம்தாவை எதிர்க்க சரியான தலைவர் இல்லை. இதுவே 2016ல் மம்தாவுக்கு மற்றொரு வெற்றியை தேடிக்கொடுத்தது. அதுவும் 2011 வெற்றியை விட அதிகமாக, 211 தொகுதிகளில் வெற்றி. மம்தாவின் அரசு எப்போதும் ஏழைகளுக்கான அரசு என்று மார்தட்டிக்கொள்வார்கள் திரிணாமுல் கட்சியினர். அதற்கேற்ப பெண் குழந்தைகளுக்கு நிதியுதவி, மாணவர்களுக்கு இலவச சைக்கிள் போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி மக்கள் மனங்களை வென்றிருக்கிறார்.

ஆனால் சமீபகாலமாக மேற்கு வங்கத்தில் பாஜகவின் எழுச்சி மம்தாவுக்கு சற்று குடைச்சலை கொடுத்தது. அதுவும் இந்த முறை, சொல்ல முடியாத எதிர்ப்புகளை எதிர்கொண்டார் மம்தா. எப்படியும் அவரை காலி செய்துவிட வேண்டும் என பாஜக இறங்கி வேலை பார்த்தது. அதற்காக மம்தாவின் போர்ப்படையில் இருந்த அத்தனை தளபதிகளுக்கும் வலை வீசி பிடித்தது. சுவேந்து ஆதிகாரி, லக்ஷ்மிரதன் சுக்லா, ராஜீப் பானர்ஜி என பாஜகவுக்கு சென்றவர்களின் பட்டியல் நீளம். இதனால் பாஜக எப்படி மம்தாவை வீழ்த்த வேண்டும் என கங்கணம் கட்டியதோ, அதே அளவுக்கு மம்தாவும் பாஜகவை வீழ்த்தும் யுத்தத்தில் தீவிரமாக இறங்கி களப்பணியாற்றினார்.

பாஜக எந்த சுவேந்து ஆதிகாரியை வைத்துக்கொண்டு மம்தாவை எதிர்த்தோ, அதே சுவேந்து போட்டியிடும் தொகுதியும், தனது அரசியல் வாழ்வுக்கு அடித்தளம் அமைத்துக்கொடுத்த நந்திகிராம் தொகுதியில் களம் கண்டார். இந்தத் தொகுதி வசமாகாமல் போனாலும் கூட, ஒட்டுமொத்த மாநிலம் என்ற வகையிலான இந்த வாழ்வா, சாவா போராட்டத்தில் வெற்றியும் கண்டுள்ளார்.

தன் சொந்த தொகுதியில் வெற்றிபெறாவிட்டாலும், 11 ஆண்டுகளுக்கு முன் கம்யூனிஸ்ட்களை தகர்த்தவர் தற்போது பாஜகவின் கனவையும் தகர்த்து வங்கத்தில் மூன்றாவது முறையை முதல்வர் அரியணையில் ஏற இருக்கிறார்.

– மலையரசு

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.