இந்தியாவில் கொரோனா வைரஸின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போதைய சூழலில் ஆக்சிஜன் சிலிண்டர்களும், மருத்துவமனை படுக்கைகளும்தான் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் மக்களின் பிரதான தேவையாக இருக்கின்றன. சமீபமாக, மக்கள் ஆக்சிஜன் சிலிண்டர்கள் வேண்டியும், படுக்கைகள் வேண்டியும் சமூகவலைதளங்களில் அதிகளவில் பதிவிட்டு வருகின்றனர். அப்படிப் பதிவிடும் மக்களுக்குத் தன்னார்வலர்கள் தேடிப் பிடித்து தங்களால் முடிந்த உதவிகளைச் செய்து வருகின்றனர்.

டெல்லியில் கொரோனா பாதிக்கப்பட்ட தன் நண்பர் ஒருவருக்காக மருத்துவர் ஒருவர், `ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கை தேவை’ என்று ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அதேபோல், மூத்த பத்திரிகையாளர் ஒருவர் தனது ட்விட்டரில், `என்னுடைய உடலில் ஆக்சிஜன் அளவானது 31 சதவிகிதமாகக் குறைந்துவிட்டது. யாராவது எனக்கு ஒரு படுக்கை தயார் செய்து கொடுத்து உதவ முடியுமா?’ என்று பதிவிட்டிருந்தார். ஆனால், அவர் மருத்துவமனையில் படுக்கை கிடைக்காமல் வெகு சீக்கிரத்திலேயே உயிரிழந்துவிட்டார்.

தன்னார்வலர்கள்

மற்றொரு பத்திரிகையாளர் தனது ட்விட்டரில் இந்த வாரம், ஒரு கொரோனா நோயாளிக்குப் படுக்கை தேவைப்படுவதாகப் பதிவிட்டிருந்தார். அந்த நோயாளிக்கு அந்தப் பதிவின் மூலம் படுக்கை கிடைத்தது. ஆனால், ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாகக் கடந்த சில தினங்களுக்கு முன் அந்த நோயாளி மருத்துவமனையில் உயிரிழந்துவிட்டார்.

டெல்லியின் பல மருத்துவமனைகள் ஆக்சிஜன் பற்றாக்குறையால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் திணறி வருகின்றன. படுக்கை இருந்தால் ஆக்சிஜன் இல்லை, ஆக்சிஜன் இருந்தால் நோயாளிகளுக்குப் படுக்கைகள் இல்லை என்பதுதான் பல இடங்களில் கள நிலவரமாக இருக்கிறது.

இந்தியாவில் உச்சம் தொட்டிருக்கும் கொரோனா பாதிப்பால் நாடு முழுவதும் ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவி வருகிறது. இது தொடர்பாக இம்மாதம் 22-ம் தேதி உச்ச நீதிமன்றம், நாட்டு மக்களைக் காப்பாற்ற மாநிலங்களுக்கு ஆக்சிஜன் வழங்குவது தொடர்பாக மத்திய அரசுக்கு நோட்டீஸ் ஒன்றும் அனுப்பியிருந்தது.

இந்தியாவில் கொரோனா முதலாம் அலைக்கும் இரண்டாம் அலைக்குமான இடைப்பட்ட காலகட்டத்தில்தான் மத்திய, மாநில அரசுகள் பல விஷயங்களில் சறுக்கி இருக்கின்றன. இந்தியாவின் மருத்துவக் கட்டமைப்பானது கடந்தாண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிடும்போது கணிசமாக உயர்ந்திருக்கிறது. இந்தியாவில் முதலாம் அலையின் இறுதியில் சுகாதார நிபுணர்கள் பலரும் மத்திய அரசை எச்சரித்திருந்தனர். அவர்கள் கொரோனா வைரஸின் தாக்கமும் பாதிப்புகளும் மிகவும் அதிகமாக இருக்கும் என்று எச்சரித்தும்கூட அரசு சுதாரித்துக் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. முதலாம் அலையின் இறுதியிலேயே இந்தியாவில் ஆக்சிஜன், பிரத்யேக கொரோனா மருத்துவமனைகள் மற்றும் படுக்கைகளை அதிகப்படுத்தும் நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் குறைத்துவிட்டன.

அதைத் தொடர்ந்து, டிசம்பர் 2020 முதல் ஏப்ரல் 2021 வரையான காலகட்டத்தில் இந்த வசதிகளை அதிகப்படுத்தும் நடவடிக்கைகள் 6% குறைக்கப்பட்டன. கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பெரியளவில் அந்த நேரத்தில் குறைந்ததால் அரசுகள் மருத்துவ நடவடிக்கைகளைக் குறைத்துக்கொண்டன. ஆனால், திடீரென மருத்துவ நடவடிக்கைகளை அதிகப்படுத்தும்போது அதற்கான செயல்திறன் நம்மிடத்தில் இருக்கிறதா என்பதை அரசுகள் உறுதி செய்ய மறந்துவிட்டன என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்தியாவில் பல மாநிலங்களில் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதிகள் முறையாக இல்லை. உதாரணத்துக்கு, வடகிழக்கு மகாராஷ்டிராவின் விதர்பா பகுதியில் 1,000 படுக்கைகள் கொண்ட கஸ்தூர்பா மருத்துவமனை அமைந்துள்ளது. ஆனால், இந்த மருத்துவமனையில் இத்தனை நாள்களாக ஆக்சிஜன் வசதி இல்லை. தற்போதுதான், அங்கு ஆக்சிஜன் உற்பத்தி ஆலை அமைக்கப்பட்டிருக்கிறது. இன்னும் மக்கள் பயன்பாட்டுக்கு வரவில்லை. ஆக்சிஜன் இந்த நேரத்தில் எல்லா நோயாளிகளுக்குமே பிரதான தேவையாக உள்ளது. அப்படியிருக்கும்போது, மருத்துவமனைகளில் எந்த நோயாளிகளுக்கு முன்னுரிமை அளிப்பது என்பது தொடர்பாகக் குளறுபடிகள் ஏராளமாக நடந்து வருகின்றன. இந்தியாவின் மொத்த கொரோனா நோயாளிகளில் 30% பேர் மகாராஷ்டிராவில்தான் உள்ளனர்.

இந்தியாவில் முதலாம் அலையின் தாக்கம் தணிந்துவிட்ட பின் அனைவரும் அஜாக்கிரதையாக இருந்துவிட்டோம். மிகச் சீக்கிரமாகவே கொரோனாவை ஒழித்துவிட்டோம் என்று வெற்றியை முன்கூட்டியே கொண்டாடினோம். ஆனால், தற்போது கொரோனா போகும் போக்கில் இரண்டாம் அலையில் நம்மைப் பார்த்து வாய்விட்டுச் சிரித்துக்கொண்டிருப்பதாக, நிபுணர்கள் கூறுகின்றனர்.

Indians, most of them, wearing face masks as a precautionary measure against the coronavirus crowd a Sunday market in Jammu

முன்னதாக, கடந்தாண்டு ஏப்ரல் மாதமே வரும் நாள்களில் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் ஆக்சிஜனின் பங்கு முக்கியமானதாக இருக்கும் என்று நிபுணர்கள் எச்சரித்திருந்தனர். கொரோனா நோய்த்தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலில் பாதிக்கப்படுவதும், அதிகளவில் பாதிக்கப்படுவதும் நுரையீரல்தான். அப்படியிருக்கும்போது அவர்களுக்கு ஆக்சிஜனின் தேவை இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது. முதலாம் அலையைக் காட்டிலும் இந்த இரண்டாம் அலையில்தான் அதிகளவு நோயாளிகளுக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அகமதாபாத்தைச் சேர்ந்த மருத்துவ குழுவினர் தெரிவிக்கின்றனர். ஆக்சிஜன் தட்டுப்பாடு மிகுதியாக நிலவும் வேளையில் மக்களுக்கு உதவ முன்வரும் தன்னார்வலர்களுக்கு ஆக்சிஜன் சிலிண்டர் விலை உயர்வு தலை சுற்ற வைத்துவிடுகிறது.

இம்மாதம் 15-ம் தேதியன்று, மத்திய அரசு இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவிய நேரத்தில், நாட்டில் ஆக்சிஜன் இருப்பு பயன்பாட்டு அளவைக் காட்டிலும் மிகுதியாகவே உள்ளதாகத் தெரிவித்திருந்தது. ஆனால், அன்றைய தினமே, டெல்லி உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு நாட்டின் ஆக்சிஜன் பயன்பாட்டு அளவானது உற்பத்தி அளவை மீறிச் சென்று விட்டதாகவும் கூறியிருந்தது. பல இடங்களில் நிலவும் ஆக்சிஜன் பற்றாக்குறையானது விநியோகத் திட்டமிடல் குறைபாட்டைக் குறிக்கிறது. தற்போது நாம் சறுக்கிக் கொண்டிருக்கும் பாடங்களை வைத்து, இந்தியாவில் ஒருவேளை மூன்றாவது கொரோனா அலை வந்தால், இப்போது கற்றதை வைத்துச் சுதாரித்துச் செயல்பட வேண்டும்.

இந்தியாவில் கடந்தாண்டு கொரோனா பரவல் தீவிரம் அடைந்த கட்டத்தில் நாடு முழுவதும் கொரோனாவுக்கான பிரத்யேக மருத்துவமனைகள் அமைப்பது, படுக்கைகள் அமைப்பது என அரசு மும்மரமாகக் களத்தில் இறங்கி நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதற்கான விவரங்களையும் அரசு வெளியிட்டு வந்தது. தொடர்ந்து தற்போது, மத்திய சுகாதாரத்துறை இந்தியாவில் மொத்தம் 2,084 பிரத்யேக கொரோனா சிகிச்சை மருத்துவமனைகள், 4,043 கொரோனா மருத்துவமனைகள் மற்றும் 9,313 கொரோனா முகாம்கள் பயன்பாட்டில் உள்ளதாகத் தெரிவித்துள்ளது. ஆனால், அரசு கடந்தாண்டு வெளியிட்ட தரவுகளையும், இந்தாண்டு வெளியிட்டுள்ள தரவுகளையும் ஆராய்ந்து பார்க்கையில் முதலாம் அலையின்போது மத்திய அரசு மருத்துவ உள்கட்டமைப்பை மேம்படுத்த மேற்கொண்ட நடவடிக்கைகளைவிடவும், தற்போது குறைவாகவே மேற்கொண்டு வருகிறது.

மத்திய அரசின் தரவுகளின்படி, தற்போது இந்தியாவில் ஆக்சிஜன் சப்போர்ட் மேம்படுத்தப்பட்ட படுக்கைகளின் எண்ணிக்கை 2,55,168. இந்த எண்ணிக்கை கடந்தாண்டு மே மாதத்தில் 1,15,134-ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், இடைப்பட்ட காலத்தில் கொரோனா படுக்கைகள் பெரும்பாலான மருத்துவமனைகளில் சாதாரண படுக்கைகளாக மாற்றப்பட்டன. தற்போது. மீண்டும் அவற்றை கொரோனா படுக்கைகளாக மாற்றுவதில் சிக்கல்கள் நீடிப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், இந்த அசாதாரண சூழலில் மக்களுக்கு உதவ தன்னார்வலர்கள் களத்தில் இறங்கியிருக்கின்றனர். தன்னார்வலர்கள் ஆக்சிஜன் சிலிண்டர்கள் தேவைப்படுவோருக்கு வரிசையில் காத்திருந்து வாங்கி உதவி வருகின்றனர். ஆனால், ஆக்சிஜன் சிலிண்டர்கள் விலை கடந்த சில வாரங்களில் உச்சம் தொட்டிருக்கிறது. கடந்தாண்டைக் காட்டிலும் இந்தாண்டு ஆக்சிஜன் சிலிண்டர்கள் விலை 75% அளவுக்கு உயர்ந்திருக்கிறது. தன்னார்வலர்கள் கடந்தாண்டு 4,000 ரூபாய்க்கு வாங்கிய சிலிண்டர்களை தற்போது 7,000 ரூபாய் கொடுத்துப் பெற்று வருவதாகத் தெரிவிக்கின்றனர்.

COVID-19

Also Read: தமிழகம் டாப், கேரளா பூஜ்யம்… கோவிட் தடுப்பூசிகள் வீணாவதை கேரளா எப்படி தடுக்கிறது?

இந்தச் சூழலில், ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரித்தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் தற்போதைய நிலவரப்படி உற்பத்தித் திறன் 7,127 மெட்ரிக் டன்னாக இருக்கிறது. இந்திய அரசு தொடர்ந்து ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பல மாநிலங்களில் புதிதாகத் தொழிற்சாலைகள் அமைத்து ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு ஆக்சிஜன் சிலிண்டர்கள் மற்றும் திரவம் நிரப்பப்பட்ட லாரிகள் சென்றடைவதை உறுதி செய்துள்ளது. ஆக்சிஜன் உற்பத்தி அதிகரிக்கப்பட்டாலும், விநியோகம் முறையாக நடந்தால் மட்டுமே நிலையைச் சமாளிக்க முடியும் என்கின்றனர் நிபுணர்கள்.

இந்தியா முதல் மற்றும் இரண்டாம் அலையில் சறுக்கிய விஷயங்களில் அரசாங்கம் கவனம் செலுத்தி, முன்னெச்சரிக்கை யுடன் செயல்பட்டால் இந்தியாவில் ஒருவேளை கொரோனா நோய்த்தொற்றின் மூன்றாம் அலை அச்சுறுத்தல் வந்தால் சமாளிக்க ஏதுவாக இருக்கும் என்பதே அனைவரின் ஒருமித்த கருத்தாக இருக்கிறது.

IndiaSpend

Source:

Lesley Esteves edited this story. Shreya Khaitan, a writer and editor, and Gautam Doshi and Priyanka Gulati, interns with IndiaSpend, contributed to this story.

(Indiaspend.org is a data-driven, public-interest journalism non-profit/FactChecker.in is fact-checking initiative, scrutinising for veracity and context statements made by individuals and organisations in public life.

தமிழில்: சே.பாலாஜி

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.