1.5 கோடி கொரோனா தடுப்பூசிகள் கொள்முதல்!

தமிழகத்தில் முதற்கட்டமாக1.5 கோடி கோவிட் தடுப்பூசிகள் கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், `இந்தியாவிலேயே அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என அறிவித்த முதல் மாநிலம் தமிழ்நாடு. தற்பொது கொரோனா பரவல் அதிகரித்துவரும் நிலையில் அதைக் கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணிகள் தமிழ்நாடு அரசால் தீவிரப்படுத்தப்பட்டுவருகின்றன. தற்போது 45 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்குச் செலுத்தப்பட்டுவரும் இலவச தடுப்பூசிப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இதுவரை 55.77 லட்சம் நபர்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும், வரும் மே மாதம் 1-ம் தேதி முதல் 18 வயதுக்கு மேல் 44 வயது வரை உள்ளவர்களுக்கும் ஏற்கெனவே அறிவித்தவாறு இலவசமாகத் தடுப்பூசி போட்டுக்கொள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் உத்தரவின்பேரில் தேவையான முன்னேற்பாடு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. இதற்காக, முதற்கட்டமாக தடுப்பூசிகள் தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் மூலமாக கொள்முதல் செய்து வழங்குவதற்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் மொத்த கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 2 லட்சத்தைக் கடந்தது!

இந்தியாவில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்துவருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் மேலும் புதிதாக 3,60,960 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. இதன் காரணமாக, இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு 1,79,97,267 என்ற எண்ணிக்கையை எட்டியிருக்கிறது.

கொரோனா தடுப்பூசி

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 3,293. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பு காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 2,01,187-ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வந்தவர்களின் எண்ணிக்கை 1,48,17,371-ஆக இருக்கிறது. தற்போது மருத்துவமனைகளில் 29,78,709 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள். ஒரே நாளில் 2,61,162 பேர் பாதிப்பிலிருந்து மீண்டு, வீடு திரும்பியிருக்கிறார்கள்.

இந்தியாவில் இதுவரை 14,78,27,367 பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது.

அஸ்ஸாம் மாநிலத்தில் நிலநடுக்கம்!

நிலநடுக்கம்

அஸ்ஸாம் மாநிலத்தில் இன்று காலை 7:51 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 6.4-ஆகப் பதிவானது. அஸ்ஸாம் மாநிலத்தின் சோனித்பூர் என்ற பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம், மேற்கு வங்க மாநிலத்தின் சில பகுதிகளிலும் உணரப்பட்டது. நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதா என்பது குறித்துத் தகவல் எதுவும் தற்போது வரை வெளியாகவில்லை.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.