கொரோனா கட்டுப்பாடுகளை காட்டி, உணவகத்திற்குள் புகுந்து பெண்கள் உள்ளிட்ட சாமானிய மக்களை லத்தியால் கடுமையாக தாக்கிய காவல் உதவி ஆய்வாளரின் செயல் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. இது தொடர்பாக மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்துகிறது.

கோவை காந்திபுரம் வெளியூர் பேருந்து நிலையம் பகுதியில், இயங்கி வரும் ஓட்டலில் நேற்றிரவு 10.20 மணிக்கு ஓசூரில் இருந்து வந்த பெண் பயணிகள் சாப்பிடுவதற்காக வந்தனர். 11 மணிக்கு கடைகளை மூட வேண்டும் என்ற உத்தரவு இருப்பதால் அதற்கு வசதியாக ஓட்டலின் ஷட்டர் பாதி அளவு மூடப்பட்டிருந்தது. அந்த நேரத்தில் சாப்பிட வந்த பெண்களுக்கு சாப்பிட உணவு அளிக்கப்பட்டது.

அப்போது உணவகத்திற்குள் வந்த காட்டூர் உதவி ஆய்வாளர் முத்து, வந்த உடனேயே லத்தியால் அடிக்கத் துவங்கினார். இதில் ஒரு பெண்ணுக்கு தலையிலும், மற்றொருவருக்கு கையிலும் என 4 பேர் காயம் அடைந்தனர். உணவகத்தில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராவில் உதவி ஆய்வாளர் முத்துவின் லத்தியடிகள் தெளிவாக பதிவாகியுள்ளன. இந்த வீடியோக்கள் வெளியாகியுள்ள நிலையில் உதவி ஆய்வாளரின் செயலுக்கு பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக, உணவக உரிமையாளர் மோகன்ராஜ், காவல்துறை ஆணையாளரிடம் புகார் அளித்துள்ளார். கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளில் பேருந்து நிலைய பகுதிகளில் இரவு 11 மணி வரை 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் உணவகம் செயல்படலாம் என்று விதி உள்ள போது, முன்னதாகவே கடையை அடைக்கும்படி சொன்னதுடன், பெண்கள் என்றும் பாராமல் லத்தியால் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காவல் பணி என்பதே மக்களை பாதுகாக்கத்தான் எனும்போது, பசிக்கு சாப்பிட வந்தவர்கள் மீதான இரக்கமற்ற தாக்குதல் காண்போரை அதிர வைக்கிறது. கடந்தாண்டு இதேபோல் கொரோனா கட்டுப்பாடுகளை காரணம் காட்டி கடையை அடைக்கவில்லை என கூறி சாத்தான்குளம் பகுதியில் தந்தை, மகன் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தை இந்த சம்பவத்துடன் ஒப்பிட்டு சமூக வலைத்தளங்களில் கண்டனங்கள் வலுத்துள்ளன. 

இந்நிலையில், லத்தியால் தாக்கிய உதவி ஆய்வாளர் முத்து, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக உதவி ஆணையர் தலைமையில் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாக கோவை காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் தெரிவித்துள்ளார்.

கோவையில் உணவகத்திற்குள் புகுந்து பெண்கள் உள்ளிட்டோரை காவல் உதவி ஆய்வாளர் கடுமையாக தாக்கிய சம்பவத்தில் கோவை மாநகர காவல் ஆணையர் அறிக்கை தாக்கல் செய்த மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்கள் மீது தாக்குல் நடத்திய சம்பவம் பற்றி மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்துகிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.