இந்திய பொருளாதார மண்டலத்திற்குள் ‘முன் அனுமதி இல்லாமல்’ நுழைந்த அமெரிக்க போர்க்கப்பலால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இந்தியா – அமெரிக்கா உறவில் விரிசல் ஏற்படும் வகையில், அமெரிக்க கடற்படை செய்த இந்தச் செயலும், அதற்கு இந்திய அரசு எதிர்ப்பு தெரிவிக்காமல் மெளனம் காப்பதும் சர்ச்சைகளுக்கு வித்திட்டுள்ளது.

அமெரிக்க கடற்படையின் 7-வது ப்ளீட் இந்தியாவின் அனுமதியின்றி லட்சத்தீவு தீவுகளுக்கு வெளியே இந்தியாவின் சிறப்புப் பொருளாதார மண்டலத்திற்குள் ஊடுருவி லட்சத்தீவு தீவுகளுக்கு மேற்கே சுமார் 130 கடல் மைல் தொலைவில் ரோந்து சென்றது தெரியவந்துள்ளது. இந்த ஊடுருவலை வெளிப்படுத்தியதே அமெரிக்க கடற்படைதான். இந்தியாவின் முன் அனுமதி பெறாமல் வந்ததுடன், அதை அறிக்கையாகவும் வெளிப்படுத்தியுள்ளது.

சமீபகாலமாக அமெரிக்கா உடன் நெருக்கம் காட்டி வரும் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு அமெரிக்க கடற்படையின் இந்த நடவடிக்கை சற்று அதிர்ச்சியை தந்துள்ளது. அதிலும், சீனாவின் கடல் விரிவாக்கவாதத்தை, குறிப்பாக தென்சீனக் கடலில், சீனாவின் ஆதிக்கத்தை இந்தியா, அமெரிக்கா என இரு நாடுகளும் கடுமையாக எதிர்த்து வருவதுடன், இந்தியாவும் அமெரிக்காவும் ஆண்டு முழுவதும் கடற்படைப் பயிற்சிகளை நடத்துகின்றன. இப்படியான நிலையில் இந்தியாவின் அனுமதி இல்லாமல் அமெரிக்க கடற்படை இப்படி நடந்துகொண்டுள்ளது.

ஊடுருவல் செய்ததுடன், “ப்ரீடம் ஆப் நேவிகேஷன் ஆபரேஷன்” (FONOP) என்ற பெயரில் ராணுவ ஆபரேஷன் ஒன்றையும் அமெரிக்க போர்க்கப்பல் நடத்தியுள்ளது என்று கூறப்படுகிறது.

இது தொடர்பாக அமெரிக்க கடற்படை 7-வது ப்ளீட் தளபதி வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஏப்ரல் 7, 2021 அன்று (உள்ளூர் நேரம்), யு.எஸ்.எஸ். ஜான் பால் ஜோன்ஸ், இந்தியாவின் சிறப்புப் பொருளாதார மண்டலத்திற்குள், லட்சத்தீவு தீவுகளுக்கு மேற்கே சுமார் 130 கடல் மைல் தொலைவில் ஊடுருவல் உரிமைகள் மற்றும் சுதந்திரங்களை ரோந்து மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், இந்த ரோந்து மூலம் நமது உரிமைகள், சுதந்திரம், சர்வதேச சட்டங்களின்படி வழங்கப்பட்டுள்ள உரிமை ஆகியவற்றை உறுதி செய்துள்ளோம். தங்களது எல்லைகளை தாண்டி கூடுதல் கடல்சார் உரிமையை இந்தியா கோருவதை எதிர்க்கும் வகையில் ரோந்து நடவடிக்கை செய்யப்பட்டுள்ளது.

நாங்கள் கடந்த காலங்களில் செய்ததைப் போல வழக்கமான செயல்பாட்டு சுதந்திரத்தை நடத்துகிறோம். எதிர்காலத்திலும் தொடரும். FONOP ஒரு நாட்டைப் பற்றியது அல்ல” என்று வெளிப்படையாகவே இந்தியா ஆக்கிரமிப்பு செய்கிறது என்கிற தொனியில் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்க கடற்படை இவ்வளவு தைரியமாக ஊடுருவலை ஒப்புக்கொண்ட நிலையில், இந்திய கடற்படை அல்லது வெளியுறவு அமைச்சகம் இன்னும் இது தொடர்பாக பதிலளிக்கவில்லை. ஊடுருவலுக்கு குறைந்தபட்சம் எதிர்ப்பு கூட தெரிவிக்கப்பட்டதா என்பதுகூட இந்திய அரசு சார்பில் வெளியிடப்படவில்லை. ஒவ்வொரு நாடுகளுக்கு சிறப்பு கடலோர பிராந்தியங்களுக்கு அடிப்படை கொள்கைகள் இருக்கும்.

இது இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் பல வேறுபாடுகளைக் கொண்டுள்ளன. அதேநேரம் வெளிநாட்டு ராணுவக் கப்பல்கள் தங்கள் சிறப்புப் பொருளாதார மண்டலத்திற்கு அனுமதியின்று வருவதையும், ராணுவ நடவடிக்கைகளை நடத்துவதும் இந்த கொள்கைகளின்படி தவறு. அதை மீறி அமெரிக்க போர்க்கப்பல் இந்தியாவுக்குள் வந்துள்ளது புதிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.