ரசாயன உரங்கள் பயன்பாடு, பசுமைப் புரட்சி, உலகமயமாக்கல் என அங்கக வேளாண்மையின் சுவடுகளே அழிந்துபோயிருந்த தமிழகத்தில், “ இயற்கையின் தூதனாய்” வந்தவர் நம்மாழ்வார். தமிழகத்தில் இன்று வரவேற்பை பெற்றிருக்கும் இயற்கை விவசாயத்தின் தந்தை நம்மாழ்வார் பிறந்த நாள் ( ஏப்ரல்-6) இன்று..!

தமிழகத்தில் ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளின் பயன்பாட்டால் மண்வளம் பாதிக்கப்படுவதை கண்டு கொதித்தெழுந்து, மண்டல வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனத்தின் அரசுப்பதவியை உதறித்தள்ளியவர் கோ.நம்மாழ்வார். பசுமைப்புரட்சிக்கு எதிராக தமிழகம் முழுவதும் பல்வேறு பேரணிகள், கூட்டங்கள் நடத்தி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தியர் இவர். காந்தியவாதி ஜே.சி.குமரப்பா மற்றும் மசனாபு புகாகோவின் கிராமிய பொருளாதாரத்தால் ஈர்க்கப்பட்ட நம்மாழ்வார், நெல்லின் “அடி காட்டுக்கு, நடு மாட்டுக்கு, நுனி வீட்டுக்கு” என்ற வார்த்தையை எல்லாக்கூட்டங்களிலும் கூறியவர்.

image

பசுமைப்புரட்சி மற்றும் உலகமயமாதல் காரணமாக ஏற்பட்டிருக்கும் பாதிப்பை போக்க பல்வேறு பேரணிகள், நடைபயணங்கள், விவசாயிகள் சந்திப்புக்கள் மூலமாக பல்லாயிரக்கணக்கான விவசாயிகளை சந்தித்து இயற்கை விவசாயத்தின் அவசியத்தை தொடர்ந்து வலியுறுத்தினார் நம்மாழ்வார். இன்று தமிழகத்தில் பாரம்பரிய இயற்கை விவசாயம் தொடர்பாக ஏற்பட்டுள்ள அனைத்து விழிப்புணர்வுக்கும், வரவேற்பிற்கும் காரணம் நம்மாழ்வார்தான்.

பாரம்பரிய நெல்ரகங்களை மீட்டெடுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு நெல் ஜெயராமனை ஊக்கப்படுத்தி சுமார் 200 பாரம்பரிய நெல்ரகங்களை மீட்டெடுக்கும் புரட்சிக்கு அச்சாணியே நம்மாழ்வார்தான். தமிழகம் முழுக்க பல்லாயிரக்கணக்கான இயற்கை விவசாயிகளை உருவாக்கி, வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் அரசின் வேளாண்மை துறையில் அங்கக வேளாண்மை பிரிவை உருவாக்க பாடுபட்டதில் பெரும்பங்கு இவருடையது.

ஒற்றை நாற்று நடவு, செம்மை நெல் சாகுபடியை உலகுக்கே அறிமுகப்படுத்தியது தமிழர்கள்தான் என்ற உண்மையை ஆதாரங்களுடன் எடுத்துரைத்தவர் நம்மாழ்வார். இன்றைக்குத் தமிழகத்தில் ஒற்றை நாற்று நடவு பிரபலமாகியுள்ளது என்றால் அது இவரால்தான். இவர் பேசும் கூட்டங்களில் எல்லாம் நாட்டு மரங்கள், நாட்டு மாடுகள், கால்நடைகள் மற்றும் நாட்டு விதைகளின் அவசியத்தை எளியவர்களும் உணரும் வகையில் எடுத்துரைப்பார்.

image

இவர் எழுதியுள்ள உழவுக்கும் உண்டு வரலாறு, இனி விதைகளே பேராயுதம், நோயினை கொண்டாடுவோம் என்பது உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட புத்தகங்கள் தமிழர்கள் ஒவ்வொருவர் வீட்டிலும் இருக்கவேண்டிய அளப்பரிய சொத்து.

1938 ஆம் ஆண்டு ஏப்ரல் 6ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்டம் இளங்காடு கிராமத்தில் பிறந்த நம்மாழ்வார், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இளங்கலை வேளாண்மை படித்தவர். காலமெல்லாம் இயற்கை வேளாண்மையை, வாழ்வியலை மீட்க போரடிய நம்மாழ்வார், தனது இறுதிகாலத்தில் டெல்டா மாவட்டங்களில் கொண்டுவரவிருந்த மீத்தேன் திட்டங்களுக்கு எதிராக தொடர்ந்து போராடி, போராட்டக்களத்திலேயே 2013 ஆம் டிசம்பர் 30 ஆம் தேதி காலமானார்.

வீரமணி சு

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.