மகாராஷ்டிராவில் மீண்டும் கொரோனா லாக்டவுன் அச்சத்தின் எதிரொலியாக, அங்கிருந்து தங்கள் சொந்த ஊர்களுக்கு புலம்பெயர் தொழிலாளர்கள் திரும்பி வருகின்றனர்.

கொரோனா பரவல் காரணமாக இந்தியாவில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டு ஓர் ஆண்டு நிறைவு பெற்றுவிட்டது. இந்த பொதுமுடக்கம் காரணமாக அதிகம் பாதிக்கப்பட்டது புலம்பெயர்ந்தோர் மற்றும் தினசரி ஊதியம் பெறுபவர்கள்தான். அவர்களில் பலர் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்புவதை நாம் பார்த்தோம். நாடு முழுவதிலும் இருந்த புலம்பெயர் தொழிலாளர்கள் அடுத்த வேலை உணவிற்கு வழியில்லாமல் தங்களது சொந்த ஊர்களுக்கு நடைபயணம் தொடங்கினர். விமானம், ரயில், பேருந்து, ஆட்டோ என அனைத்து சேவைகளும் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுவிட்டது. அதனால், குழந்தைகளை தூக்கிக்கொண்டும் வயதானவர்களும் பெண்களும் என லட்சக்கணக்கான இந்தியர்கள் பல நூறு மைல்களை கால்நடையாகவே நடக்கத் தொடங்கினர்.

கொரோனா பாதிப்பில் இருந்து ஓரளவு நாம் மீளத் தொடங்கியதும் நம்மில் பெரும்பாலோருக்கு வாழ்க்கை இயல்பு நிலைக்குத் திரும்பியது. இதனால், மக்கள் மீண்டும் வேலைக்குச் செல்லத் தொடங்கினர். பொதுமுடக்க கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டன. புலம் பெயர்ந்த தொழிலாளர்களும் வாழ்வாதாரத்தை காக்க மீண்டும் வேறு மாநிலங்களுக்கு செல்ல தொடங்கினர். ஆனால், இவை எல்லாம் தற்போது மீண்டும் மாறத் தொடங்கியுள்ளது. மகாராஷ்ட்ரா, கேரளா போன்ற மாநிலங்களில் கொரோனா பாதிப்பு உச்சம் தொட்டு வருகிறது.

இதனால் மீண்டும் பொதுமுடக்கம் போடப்படும் என்ற அச்சம் எழுந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் விரைவில் பொதுமுடக்க அறிவிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இதற்கான ஆலோசனையில் அம்மாநில அரசு ஈடுபட்டு வருகிறது. இதற்கேற்பார்போலவே தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பின் காரணமாக, “இதே நிலைமை தொடர்ந்தால் அடுத்த இரண்டு நாட்களில் மாநிலம் முழுவதும் பொதுமுடக்கம் அறிவிக்கப்படும்” என்று முதல்வர் உத்தவ் தாக்கரே எச்சரித்து இருந்தார்.

எனினும், பொதுமுடக்கம் என்பதில் அரசுக்கு விருப்பமில்லை. ஆனால் தற்போதைய நிலைமை மக்கள் கட்டுப்பாடற்ற முறையில் விதிமுறைகளை மீறுவதால் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டி வரும். இதனால் சில நிபுணர்களுடன் கலந்துரையாடி, தனது முடிவை வரும் நாள்களில் அறிவிப்பதாக உத்தவ் தாக்கரே விளக்கம் கொடுத்துள்ளார்.

இதனிடையே, உத்தவ் தாக்கரே விடுத்த பொது முடக்க எச்சரிக்கை கொடுத்த பயத்தின் காரணமாக மும்பையில் இருந்து வெளிமாநில தொழிலாளர்கள் அனைவரும் நேற்று முதல் தங்கள் சொந்த ஊருக்கு படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.

மும்பையின் சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் ஆயிரக்கணக்கில் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் ஊருக்கு செல்ல குவிந்து வருகின்றனர். இதனால் ரயில் நிலையம் ஒரு பரபரப்பாகவே காணப்படுகிறது.

தொழிலாளர்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்பிச் செல்வதைத் தவிர்ப்பதற்காக, மகாராஷ்ட்ரா மாநில அமைப்புகள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் ஆணையர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

“பீதி இல்லை என்பதை உறுதிப்படுத்த நாங்கள் பல்வேறு அமைப்புகளுடன் தொடர்பு கொள்கிறோம், சரியான செய்தி அனுப்பப்படுகிறது. இது ஒரு பொதுமுடக்கம் அல்ல” என்று அரசு தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் தொழிலாளர்கள் தங்கள் ஊர்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.

இதனிடையே, இந்தியாவில் முதன்முறையாக தினசரி கொரோனா பாதிப்பு 1 லட்சத்தை தாண்டியது. ஒரே நாளில் 1,03,558 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில், பாதிக்கும் மேற்பட்ட பாதிப்பை பதிவு செய்திருக்கிறது மகாராஷ்டிரா.

இதன் எதிரொலியாக, மகாராஷ்டிராவில் இன்று முதல் (திங்கள்கிழமை) இரவு நேரத்திலும், சனி – ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும் மாநில அரசு தெரிவித்துள்ளது. 2020 கொரோனா முழு அடைப்பு காலம் மீண்டும் திரும்பும் வகையில், மகாராஷ்டிராவில் இயல்பு வாழ்க்கை முடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.