பரபரப்பும், கலகலப்புமாக பயணிக்கிறது தேர்தல் 2021. இதில் சில முக்கிய ஸ்டார் தொகுதிகளை மட்டும் குறி வைத்து, அங்கே நேரடியாக களத்தில் இறங்கி, அதன் நிலவரத்தை அறியலாமே என திட்டமிட்டேன். இதோ அந்தவகையில் முக்கியமான ஒரு தொகுதியில் பயணித்து கள நிலவரத்தை கொண்டு வந்திருக்கிறேன்.

இந்த தொகுதியின் பெயரை சொன்னவுடனே, ‘அட தேர்தலில் ஒரு புது பாஃர்முலாவே உருவாக்கிய தொகுதியாச்சே ‘ என்பார்கள். ஆம், நான் பயணத்தை தொடங்கிய தொகுதி ‘மதுரை திருமங்கலம்.’

ஆர்.பி. உதயகுமார்

இங்கே அ .தி.மு.க-வில் சிட்டிங் அமைச்சர் ஆர்.பி உதயகுமார், தி.மு.க-வில் சேடப்பட்டி முத்தையாவின் மகன் மணிமாறன், அ.ம.மு.க சார்பாக கூட்டணி-யில் மருது சேனை அமைப்பின் நிறுவனத் தலைவர் கரு.ஆதி நாராயணன், நாம் தமிழரில் மை.சாராள், மக்கள் நீதி மய்யத்தில் ராம்குமார் ஆகியோர் களத்தில் உள்ளனர். சரி, களம் எப்படி இருக்கிறது ? வெற்றிக்காக யார் என்ன செய்துக் கொண்டிருக்கிறார்கள் என்று பார்ப்போம்!

சுட்டெரிக்கும் வெயிலில், எதிர்பட்ட உழைத்து கறுத்த மக்களிடம் ‘இங்க எது வரை திருமங்கலம் தொகுதி ?’ என்றேன்.

‘ இந்த தூத்துக்குடி, விருதுநகர் மெயின் ரோட்டில் கண்ணுக்கெட்டுன தூரம் வரை திருமங்கலம் தான்’ என்றவர்களிடம் தொகுதி பற்றி கேட்டேன். ‘இங்க விவசாயம் தான் முக்கிய தொழில். இது இல்லாம நிறைய பேர் வெளிநாட்லையும் , ராணுவத்துலையும் இருக்காங்க. ஆனா, படிச்ச பசங்க,பிள்ளைங்க நிறைய இருந்தாலும் எல்லாருக்கும் வேலை கிடைக்கல ‘ என்று வேலைவாய்ப்பின்மை பிரச்னைகளை உணர்த்தினர் .

பிரசாரத்தின் இடையே திருமங்கலம் தொகுதி வேட்பாளர் ஆர்.பி.உதயகுமார் டீக்கடையில் தொண்டர்களுக்கு தேநீர் போட்டுக் கொடுத்தார்

அப்படியே அங்கிருந்து பேரையூர், கள்ளிக்குடி, டி.கல்லுப்பட்டி என பயணித்தேன். எதிர்பட்டவர்கள் பலரும் ‘அமைச்சரைய்யா, தொகுதிக்கு ஓரளவுக்கு செஞ்சிருக்காரு. நல்லது, கெட்டதுல பங்கெடுத்துப்பாரு ‘ என்றார்கள். அவர்களிடம், ‘ஆனால் பல ஊர்களில் தண்ணீர் பிரச்சனை இருக்கு. ஆற்றுப்பாசனம், டேம் பாசன வசதி குறைவாக இருக்கிறதால கடந்த 15 வருஷமாகவே நெல் சாகுபடி குறைவா இருக்குன்னு சொல்றாங்களே’ என்றேன். ‘ஆமாங்க, நெசந்தான். ஆனா, எப்ப அமைச்சரை எந்த ஊர்காரங்க பார்க்கப் போனாலும் கையில நூறு ரூவாயாவது கொடுத்து அனுப்பாம விடமாட்டாரு . இந்த நாலு வருஷத்தில ஒவ்வொருத்தர் வீட்லயும் அமைச்சர் கொடுத்த ஏதாவது ஒரு பரிசு பொருளாவது இருக்கும். இதையும் பார்க்கணுமில்ல ‘ என்றார்கள் கொஞ்சும் மதுரை மொழியில்.

அதேநேரத்தில் கள்ளிக்குடி, கல்லுப்பட்டியில் மூன்று பேருக்கு ஒருவராவது, ‘அமைச்சருக்கு டஃப் ஃபைட் கொடுக்கிறாரு மருது சேனை கரு. ஆதி நாராயணன் ‘ என்கின்றனர். ஏன் ? என்றேன். ‘அமைச்சர் ஊருக்கு சில நல்லது செஞ்சாலும் இங்க திருமங்கலத்துல குறைஞ்சது 50% வாக்காளர்களாவது அகமுடையார் சமுதாயத்தைச் சேர்ந்தவங்க. மருது சேனை அகமுடையார்களுக்கான அமைப்பு. கரு. ஆதிநாராயணன் இந்த தொகுதியையே சேர்ந்தவர். சமுதாய வாக்குகள் மொத்தமா இங்க விழுந்தாலே அ .ம.மு.க கூட்டணிக்கு வெற்றி நிச்சயம் ‘ என காரணம் சொன்னார்கள்.

‘வாக்குகளை தீர்மானிப்பதில் சாதியும் ஒரு குறிப்பிட்ட பங்கு வகிக்கிறதோ’ என்று யோசித்தபடியே அடுத்த சில கிராமங்களுக்குள் பயணித்தேன். எதிர்ப்பட்ட உடன்பிறப்புகள் மத்தியில் கூடுதலாகவே புன்னகை தெரிந்தது.

‘இங்க ஆர்.பி உதயகுமாருக்கும், கரு.ஆதி நாராயணனுக்கும் கடும் போட்டி. ரெண்டு பேருமே வாக்குகளை பிரிக்கிறதால, ஏற்கனவே உதயசூரியனுக்கு இருக்கிற வாக்குவங்கி எல்லாம் சேர்ந்து ஈஸியா இங்க மணிமாறன் ஜெயிச்சிடுவார்’ என்றார்கள் புன்னகை குறையாமல்.

கரு.ஆதிநாராயணன்

திருமங்கலம் களம் இந்தமுறை லேசுப்பட்டதாக இல்லை. 10 ஆண்டு ஆட்சி மீதான இயல்பான அயர்ச்சி, மருது சேனையின் தீவிர பரப்புரை, உதயசூரியன் எனும் தி.மு.க-வின் சின்னம் என எல்லாமும் ஆர்.பி உதயகுமாருக்கு கூடுதல் நெருக்கடி கொடுக்கிறது. அதனாலேயே மற்ற தொகுதிகளுக்கு கூட போகாமல் தனது தொகுதிக்குள் களமாடிக் கொண்டிருக்கிறார்.

ஏற்கெனவே அவர் கொடுத்த பரிசு பொருட்களும், இறுதி நேரத்தில் வாக்காளர்களுக்கு சேர்க்கப்படும் வைட்டமின் ‘ப’-வும் தம்மை கரை சேர்த்துவிடும் என்ற நம்பிக்கையில் ஆர்.பி உதயகுமார் இருக்கிறார் என்கின்றனர். இதைத்தான் களம் நமக்கு உணர்த்துகிறது.

ஆர்.பி உதயகுமார் தன்னுடைய மகளை பிரசார களத்தில் இறக்கியுள்ளார். அவரும், ‘எங்கப்பா, உங்க வீட்டு பிள்ளை…’ என உருகி உருகி பரப்புரையில் களமாடி வருகிறார். இது மட்டுமில்லாமல் தினமும் காலையில் சுமார் நாலரை மணியளவில் மதுரை நேதாஜி சாலையில் உள்ள தண்டாயுதபாணி முருகன் கோயிலுக்கு போய்விட்டு, பிறகு குன்னத்தூரில் உள்ள ஜெயலலிதா கோயிலில் வணங்கிவிட்டுத்தான் பரப்புரையை தொடங்குகிறார் ஆர்.பி உதயகுமார். எல்லாம் சென்டிமென்ட் தான்.

தண்டாயுதபாணி கோயிலுக்கு சென்று பார்த்தோம். அங்கே ஆர்.பி உதயகுமார் தீவிரமாக மந்திரங்களை படித்துக்கொண்டே இருக்க, அதை நம் ஒளிப்பதிவாளர் படம் பிடிக்க, அங்கிருந்த ர.ர-க்களோ உடனடியாக தடுத்து எங்களை வெளியே அனுப்பினர்.

`இன்று வழக்கத்தை விட கூடுதலாக ஒன்றரை மணி நேரமாக மந்திரம் படிக்கிறார். ரகசிய பூஜையும் நடந்திருக்கு. போட்டி கடுமையா இருக்கிறதால வேண்டுதலும், பூஜையும் கூட அதிகமாயிருக்கு ‘ என்றனர் கோயிலுக்கு வழக்கமாக வரும் பக்தர்கள் சிலர்.

வெளியே வந்த ஆர்.பி உதயகுமாரிடம் சில கேள்விகளை முன்வைத்தேன். ‘வெற்றி நிச்சயம் ‘ என்றவர், மேற்கொண்டு சொன்னவற்றை கீழே உள்ள வீடியோவில் காணுங்கள்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.