`அடக்கம், அயராத உழைப்பு… இரண்டையும்தான் நான் வாழ்வில் முக்கியமாகக் கடைப்பிடிக்கிறேன்’ என்று ஒருவர் சொல்கிறார். நமக்கு என்ன தோன்றும்… `அட போங்க சார்… அடக்கமாவது, அயராத உழைப்பாவது… இதனாலெல்லாம் வாழ்க்கையில ஒரு ஸ்டெப்கூட முன்னேற முடியாது’ என்றுதானே!

ஆனால், இந்த இரண்டையும் தன் வாழ்வின் லட்சியமாகவே கொண்டு முன்னேறியிருக்கிறார் ஒருவர். அமெரிக்காவின் பிரபல மீடியா நிறுவனமான ப்ளூம்பெர்க் வெளியிட்டிருக்கும் `உலகின் 500 பெரும் பணக்காரர்கள் பட்டியலி’ல் 192-வது இடத்திலிருக்கிறார் அந்த மனிதர். இத்தனைக்கும் 2020-ம் ஆண்டுக்கு முன்னர் அவர் அந்தப் பட்டியலிலேயே இல்லை!

அவர் பெயர் எரிக் யுவான் (Eric Yuan). சீனாவின் ஷான்டாங் (Shandong) பகுதியில் பிறந்தவர். பெற்றோர், சுரங்கத்தில் இன்ஜினீயர்களாகப் பணியாற்றினார்கள். யுவானுக்கு 19 வயதானபோது கல்லூரியில் சேர்ந்தார். அதே நேரத்தில் அவருடைய கேர்ள் ஃபிரெண்டுக்கும் இடம் கிடைத்தது… மற்றொரு கல்லூரியில். ஆனால், அருகருகில் அல்ல. யுவான், தன் கேர்ள் ஃபிரெண்டைப் பார்க்க வேண்டுமென்றால், 10 மணி நேரம் ரயிலில் பயணம் செய்தாக வேண்டும்.

2017-ம் ஆண்டு, ஃபோர்ப்ஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் யுவான் இப்படிச் சொன்னார். “வருடத்துக்கு இரு முறைதான் என்னால் அவளைப் பார்க்க முடிந்தது. அப்போதுதான், `ஒரு கருவி வேண்டும்; அதில் ஒரு பட்டனைத் தட்ட வேண்டும்; உடனே அவளுடைய அழகான முகம் அதில் தெரிய வேண்டும்; அவளோடு நான் பேச வேண்டும்… அதுவும் மணிக்கணக்கில்! இப்படி இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்…’ என்று எனக்குத் தோன்றியது.’’ – இந்த ஐடியாவுக்குதான் இன்றைக்கு பிசினஸ் உலகம் யுவானை அள்ளி அணைத்து, கொண்டாடுகிறது. பிசினஸில் அவருக்கு தனி இடத்தையும் தேடித் தந்தது. பின்னாளில் அந்த கேர்ள் ஃபிரெண்டைத்தான் மணந்துகொண்டார் யுவான்.

ஷான்டாங் யூனிவர்சிட்டியில் அப்ளைடு மேத்தமேட்டிக்ஸில் இளங்கலைப் பட்டமும், சீனா யூனிவர்சிட்டியில் இன்ஜினீயரிங்கில் முதுகலைப் பட்டமும் பெற்றார் யுவான். படிப்பு ஒருபுறம் இருக்க, மனதுக்குள் `ஏதாவது செய்ய வேண்டும்; புதுமையாக ஒரு பிசினஸில் முத்திரை பதிக்க வேண்டும்’ என்ற வேட்கை யுவான் மனதுக்குள் கனன்றுகொண்டே இருந்தது. அந்த நெருப்பை ஊதி வளர்ப்பதுபோல, ஒரு நிகழ்வு நடந்தது.

அது 1994-ம் ஆண்டு. ஜப்பானில் ஏதோ ஒரு சிறிய வேலையில் இருந்தார் யுவான். மைக்ரோ சாஃப்ட்டின் இணை நிறுவனர் பில்கேட்ஸ் ஆற்றிய ஓர் உரையைக் கேட்டார் யுவான். அன்றைக்கே `இதுதான் நம் துறை’ என்ற முடிவெடுத்துவிட்டார். அந்தத் துறை, இன்டர்நெட்.

சரி, எங்கே இன்டர்நெட் சார்ந்த தொழிலுக்கு வாய்ப்பு அதிகம்… எங்கே தொழில் தொடங்குவது? அதற்கு சீனா சரியாகப்படவில்லை. அமெரிக்கா. அதுதான் தனக்கான, தன் தொழிலுக்கான சரியான இடம் என்று அவருக்குத் தோன்றியது.

Zoom in Nasdaq Screen

அமெரிக்காவுக்குப் போக விசாவுக்கு விண்ணப்பித்தார். விசா கிடைப்பது அத்தனை சுலபமாக இல்லை. அவருடைய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. ஒரு முறை, இரு முறை அல்ல… எட்டு முறை நிராகரித்தது அமெரிக்கா. ஒரு வழியாக விசா கிடைத்து, 1997-ம் ஆண்டு அமெரிக்காவுக்குள் காலடி எடுத்துவைத்தார். கனவுப் பிரதேசத்துக்குள் நுழைந்துவிட்டாலும், ஆரம்பத்தில் அமெரிக்க வாழ்க்கை அவருக்குக் கடினமானதாகவே இருந்தது. முக்கியமாக ஆங்கில மொழி. அவரால், அமெரிக்கர்களுக்கு ஈடுகொடுத்து சரளமாக ஆங்கிலத்தில் உரையாட முடியவில்லை. எனவே, தன் கவனத்தையெல்லாம் கம்ப்யூட்டர் கோடிங்-கில் செலுத்தினார்.

பிறகு வெப்எக்ஸ் (WebEx) நிறுவனத்தில் பணியாற்றினார்; சிஸ்கோ சிஸ்டம்ஸ் (Cisco Systems) நிறுவனத்தின் துணைத் தலைவராகவும் ஆனார். ஆனால், ஒரு நிறுவனத்தில் எதற்கோ, யாருக்கோ கட்டுப்பட்டு வேலை பார்ப்பது அவருக்குப் பிடிக்கவில்லை. வெளியே வந்தார்.

Zoom

“ஏன் அவசரப்பட்டு வேலையை விடுகிறீர்கள்?’’ என்று அவர் மனைவி கேட்க, “நான் மேற்கொள்ளப்போவது மிக நீண்ட, கடினமான பயணம் என்பது எனக்குத் தெரியும். ஆனால், அதற்கு இப்போது நான் முயலாவிட்டால், வாழ்க்கை முழுக்க வருந்த வேண்டியிருக்கும்’’ என்று பதில் சொன்னார் யுவான்.

`மொபைல் போனில் உலகின் எந்த மூலையிலிருக்கும் ஒருவருடனும், யார் வேண்டுமானாலும் முகம் பார்த்துப் பேசலாம் என்கிற ஒரு வீடியோ தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த வேண்டும்’ என்பதுதான் அவருடைய லட்சியம். சரி, புதிய தொழில் தொடங்கலாம்தான். பணம்?

முதலீட்டாளர்களைத் தேடிப் போவதோ, யாரோ ஒருவரைப் பணம் போடவைக்கச் சம்மதிக்க வைப்பதோ அவருக்கு இயலாத காரியமாக இருந்தது. நண்பர்களிடமும் உறவினர்களிடமும் கடன் வாங்கினார். `ஜூம் வீடியோ கம்யூனிகேஷன்ஸ்’ (Zoom Video Communications) நிறுவனம் உதயமானது. இந்த நிறுவனத்தில் அப்படி என்ன ஸ்பெஷல்? உட்கார்ந்த இடத்தில் இருந்தபடியே வீடியோ கான்ஃபரன்ஸ் நடத்தலாம்; மாணவர்களுக்குப் பாடமெடுக்கலாம்; நினைத்த நேரத்தில் எந்தத் தொந்தரவும் இல்லாமல் ஒருவருடனும், பலபேருடனும் உரையாடலாம். யார் வேண்டுமானாலும் கையாள்வதற்கு எளிதாக இருந்தது ஜூம் ஆப்.

ஒரு நல்ல, காத்திரமான பிசினஸை ஆரம்பித்துவிட்டாரேயொழிய அதை வாடிக்கையாளர்களிடம் கொண்டுபோய்ச் சேர்ப்பது மிகவும் சவாலான காரியமாக இருந்தது. ஜூமை அறிமுகப்படுத்தி அவர் அனுப்பிய இமெயிலைப் பலர் திறந்து பார்க்கவேயில்லை. எப்படியோ ஜூமின் சிறப்பையும் முக்கியத்துவத்தையும் உணர்ந்த வாடிக்கையாளர்கள் மெள்ள மெள்ள வர ஆரம்பித்தார்கள்.

ஆனால், 2020-ல் கொரோனா நோய்த் தொற்று உலகையே முடக்கியபோது, எல்லா மனிதர்களையும் அவரவர்களின் வீட்டிலிருந்தபடி இணைத்தது ஜூம்தான். இந்த ஜூம் மட்டும் இல்லாமல் போயிருந்தால், நிச்சயம் வேறொரு சேவை நமக்கு இதே வசதியை வழங்கியிருக்கும்தான். ஆனால், அது ஜூம் அளவுக்கு உடனே எல்லோரையும் ஈர்க்கும் அளவுக்கு இருந்திருக்குமா என்பது கேள்விக்குறியே!

ஜூம்

இன்றைக்கு யுவானின் ஜூம் நிறுவனத்துக்கு சாம்சங், ஊபர், வால்மார்ட், கேபிட்டல் ஒன் போன்ற பிரபல கார்பரேட் நிறுவனங்களெல்லாம் வாடிக்கையாளர்கள். ஜூம் நிறுவனத்தின் தற்போதைய மதிப்பு 35 பில்லியன் டாலர். 2019 ஏப்ரலில் ஜூம் நிறுவனத்தின் பங்குகள் அமெரிக்கச் சந்தையில் பட்டியல் இடப்பட்டது. வெறும் 60 டாலர் என்கிற அளவுக்கு பட்டியலிடப்பட்ட பங்குகள் ஒரே ஆண்டில் 550 டாலர் வரை உயர்ந்து எரிக்கை மட்டுமல்ல, இதில் முதலீடு செய்திருந்த முதலீட்டாளர்கள் பலரையும் பணக்காரராக ஆக்கியது.

கொரோனா தாக்குதலுக்குப் பிறகு பள்ளிகள், பல்கலைக்கழகங்கள், மருத்துவமனைகள், பல பணியிடங்களுக்கு ஜூமின் தேவை அத்தியாவசியமாகிப் போனது. பல லட்சக்கணக்கானவர்கள் இப்போது, இந்த கணத்தில் `ஜூம்’-ஐப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். அதற்கு மூல காரணமான யுவான், தன் மனைவி, இரண்டு மகன்கள், ஒரு மகளுடன் சிலிக்கான் பள்ளத்தாக்கில் வசிக்கிறார், தன் ஊழியர்களுடன் `ஜூம்’-ல் உரையாடியபடி!

– (பாடம் எடுப்பார்கள்…)

இனி வாரந்தோறும் திங்கள் கிழமை, பிசினஸ் மாஸ்டர்கள் விகடன் தளத்தில் உங்களுக்கு உற்சாகமூட்டுவார்கள்!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.