கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு வரை 500-க்கும் குறைவாக இருந்த கொரோனா எண்ணிக்கை இப்போது திடீரென உயர்கிறது. தஞ்சாவூரில் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். கோவையிலும் சென்னையிலும் பாதிப்பு எண்ணிக்கை கூடுகிறது. கொரோனா பாதிப்பு திடீரென அதிகரிப்பது ஏன்? `அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் பின்பற்றாததுதான் காரணம்’ என்கிறது அரசு. எனில், கடந்த இரு வாரங்களாகத்தான் மக்கள் வழிகாட்டு நெறிமுறைகளைப் சரிவர பின்பற்றவில்லையா?

Corona Vaccine

கொரோனா தீவிரம் குறைய ஆரம்பித்து ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டது முதலே வழிகாட்டு நெறிமுறைகளெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக காற்றில் பறந்துவிட்டன. `இப்போதும் ஊரடங்கு அமலில் இருக்கிறது’ என்றால் மக்கள் சிரிக்கும் அளவுக்குத்தான் எதார்த்தம் இருக்கிறது. இந்நிலையில், `கொரோனா பாதிப்பு அதிகரிப்பதன் உண்மையான பின்னணி என்ன?’ என்று எல்லோருக்குள்ளும் கேள்வி எழத் தொடங்கியுள்ளது. தேர்தல் ஆதாயத்துக்காக மீண்டும் முழு ஊரடங்கு கொண்டு வரப் பார்க்கின்றனர் என்கிறார்கள் சிலர். தடுப்பூசி போடுவதை அதிகரிக்கும் தந்திரமாக கொரோனா எண்ணிக்கையை அதிகரிக்கின்றனர் என்கிறார்கள் வேறு சிலர். இப்படி இன்னும் நிறைய விஷயங்கள் அடுக்கப்படுகின்றன.

ஆனால், அவை வெறும் யூகங்கள்தான் என்று கடந்துபோகும் அளவுக்கு அரசிடம் வெளிப்படைத்தன்மை இல்லை. அரசிடம் வெளிப்படைத் தன்மை இல்லாதபோது மக்கள் மத்தியில் இப்படியான சந்தேகங்கள் முளைப்பதைத் தவிர்க்க இயலாது. மருத்துவர்கள் சிலரே இப்படியான சந்தேகத்தை முன்வைப்பதுதான் பகீரென இருக்கிறது. கோவையில் தனியார் மருத்துமனையைச் சேர்ந்த மருத்துவர் அவர். கொரோனா தீவிரமாக இருந்த நேரத்தில் கொரோனாவுக்காக அவரது மருத்துவமனையில் தனி வார்டே செயல்பட்டுள்ளது. `கடந்த சில மாதங்களாக ஒரு கொரோனா பாசிட்டிவ் கேஸ் கூட நான் பார்க்கவில்லை’ என்று அதிர வைக்கிறார்.

கொரோனா தடுப்பூசி

60 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கும், நாள்பட்ட நோய் உள்ள 45 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கும்தான் தற்போது கொரோனா தடுப்பூசி போடப்படுவதாகச் சொல்லப்படுகிறது. அதிலும் உண்மை இல்லை. “எனக்கு வயசு முப்பதுதான். எவ்வித நாள்பட்ட நோயும் எனக்கு இல்ல. நான் முன்களப் பணியாளரும் இல்ல. அரசு மருத்துவமனையில எனக்கு கொரோனா தடுப்பூசி போட்டாங்க. எனக்கு மட்டுமில்ல 30 வயசுள்ள பலருக்கு தடுப்பூசி போட்டாங்க. யார் வேண்டுமானாலும் வந்து போட்டுக்கலாம்ன்னு சொன்னாங்க.” என்கிறார் சென்னையைச் சேர்ந்த சுமதி. “அரசு மருத்துவமனையில சாதாரண மக்களுக்கு கோவாக்ஸின்தான் போடுறாங்க. அரசு அதிகாரிகளுக்கும் முக்கியமானவங்களுக்கும் மட்டும்தான் கோவிஷீல்டு போடுறாங்க. எல்லாத்துலயும் பாரபட்சம்தான்” எனப் புகார் சொல்கிறார் இன்னொரு பெண்.

இந்தநிலையில், கடந்த 19-ம் தேதி நாடாளுமன்ற மக்களவையில், “கொரோனா தடுப்பூசியை நாட்டில் உள்ள அனைவருக்கும் போடுவதை அரசாங்கம் நோக்கமாகக் கொண்டிருக்கிறதா?” என்று தேசியவாத காங்கிரஸ் உறுப்பினர் சுப்ரியா சுலே எழுப்பிய கேள்விக்கு, “ஒவ்வொரு தடுப்பூசியையும் நாட்டில் உள்ள அனைவருக்கும் போட வேண்டும் என்ற தேவை அறிவியல்பூர்வமாக இல்லை. உலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் தடுப்பூசி போடப்படாது” என மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷவர்தன் பதில் அளித்துள்ளார்.

மருத்துவச் செயற்பாட்டாளர் புகழேந்தி

கொரோனா தடுப்பூசியை மையப்படுத்தி ஏராளமான சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், ஆரம்பத்திலிருந்து தடுப்பூசி குறித்து கேள்வியெழுப்பிவரும் மருத்துவர் புகழேந்தியிடம் பேசினோம்.

“மக்கள் சந்தேகத்தில் என்ன தப்பு இருக்கு. தஞ்சாவூர்ல ஒருநாள் 51 கொரோனா பாதிப்பு வருதுன்னா அடுத்த நாள் 10 பாதிப்புன்னு சொல்றான். அதுக்கு அடுத்த நாள் 47 பாதிப்புங்கிறான். அதுக்கு அடுத்த நாள் 67 பாதிப்புங்கிறான். இடையில 10 பாதிப்பு எப்படி வந்துச்சு? இது அபத்தமா தெரியலையா… இல்ல மக்களை முட்டாளா நினைக்கிறாங்களான்னு புரியலை. அவங்க சொல்றதுதான் கணக்குன்னு ஆகிப்போச்சு. அதுக்காக கொரோனாவே இல்லைன்னு நான் சொல்லலை. இவங்க எதையும் கண்காணிக்கிறது இல்லை.

சென்னையில எனக்குத் தெரிஞ்ச ஒருத்தருக்கு கொரோனா பாசிட்டிவ். ஆனா, அவங்க வீட்டுல உள்ளவங்களை கொரோனா பரிசோதனை செய்யலை. டெஸ்ட் பண்ணினா எல்லாருக்கும் பாசிட்டிவ்னுதான் வரும். அப்புறம் வீட்டுக்குள்ளயே இருக்க வேண்டியிருக்கும். டெஸ்ட் பண்ணாதீங்கன்னு சொல்லியிருக்காங்க. இந்த அரசுதான் வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் பின்பற்றாததால கொரோனா அதிகரிச்சுருக்குன்னு சொல்லியிருக்கு. கடந்த 16-ம் தேதி தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் வெளியிட்ட அறிக்கையில பொதுமக்கள் முகக் கவசம் அணியலைன்னா கட்டாயம் அபராதம் விதிக்கப்படும்னு சொல்லியிருக்கார். அப்போ இத்தனை நாள் அதையெல்லாம் செய்யலையா? அந்த 6 பக்க அறிக்கையில் தேர்தல் பிரசார கூட்டத்தில் கூடும் மக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என பட்டும் படாமல் ஒரே ஓர் இடத்தில் சொல்லியிருக்கார். அரசியல் கட்சிகளைப் பற்றி அதில் சொல்லவே இல்லை. எல்லா தவறும் மக்கள் மீதுதான் என்பதுபோல் சொல்லியிருக்கார். மக்கள் ஒத்துழைப்பு தரணும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனா அரசு அதற்கான கட்டுப்பாடுகளை உருவாக்கி முறையா கண்காணிக்குதா என்பதுதான் கேள்வி?

Market

அடுத்து தடுப்பூசி விஷயத்துக்கு வருவோம்… தடுப்பூசி போடுங்கன்னு சொல்றீங்க. கட்டாயம் இல்லைன்னாலும் மறைமுகமா எல்லாரையும் கட்டாயப்படுத்துறீங்க. தடுப்பூசி போடுறது தப்புன்னு நான் சொல்ல வரலை. ஆனா, அதுகுறித்து முழுமையா அறிவியல்பூர்வமா ஆய்வு செஞ்சுட்டீங்களா? இரண்டு டோசேஜ் தடுப்பூசியும் போட்ட பிறகு, கொரோனா வராதுன்னு உங்களால சொல்ல முடியுமா? முடியாது, ஏன்னா இரண்டு டோஸ் தடுப்பூசி போட்ட பிறகும் நிறைய பேர் கொரோனாவால பாதிக்கப்பட்டிருக்காங்க. கேட்டா 81 சதவிகிதம்தான் செயல்திறன் இருக்கும்னு சொல்லிருக்கோம்னு சொல்லுவாங்க. சரி ஓகே. அதை விட்ரலாம். இதனால் எந்தவிதமான பக்க விளைவுகளும் வராதுனு உங்களால சொல்ல முடியுமா? முடியாது.

ஏன்னா இதுவரைக்கும் இந்தியால 65 பேர் தடுப்பூசியால் பின் விளைவுகள் ஏற்பட்டு இறந்திருக்காங்க. ஆனா, அரசு இதுவரை 2 பேர்தான் இறந்துள்ளதா சொல்லுது. பின் விளைவுகளை மறைக்காம பொதுவெளியில் சொல்லுங்கனு பல வைராலஜிஸ்ட் சொல்லிட்டிருக்காங்க. தடுப்பூசியால் ஏற்படும் பின் விளைவுகள் மறைக்கப்படுது. மும்பையில் இரண்டாவது தடுப்பூசி போட்டு கண்காணிப்பில் இருந்த ஒருத்தர் இறந்திருக்கார். இறப்பிற்கான காரணம் தெரியலைனு சொல்லியிருக்காங்க. தடுப்பூசி போடப்பட்ட பிறகு நடக்கும் மரணங்களை இவங்க அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்யுறதில்லை. தடுப்பூசி போட்ட பிறகு, ஒருத்தர் ஹார்ட் அட்டாக்கில் இறக்கிறார்னா ஒருநாளைக்கு நூற்றுக்கணக்கான பேர் ஹார்ட் அட்டாக்ல சாவுறாங்கப்பான்னு அசால்ட்டா கடந்துபோறாங்க.

COVID-19 vaccine

Also Read: அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு… தமிழகத்தில் மீண்டும் லாக்டௌன் வருமா?

அதை அப்படிப் பார்க்கக் கூடாது. தடுப்பூசி போடாம இருந்திருந்தா இது நடந்திருக்குமான்னு ஆய்வு செய்யணும். ஆனால், அப்படியான ஆய்வுகள் எதுவுமே செய்யப்படலை. இப்படியான சூழல்ல தற்காலிக தடுப்பூசி மையங்கள் அமைச்சு கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை விரிவுபடுத்தப்போறதாஅரசு அறிவிச்சிருக்கு. மும்பையில் மருத்துவமனை கண்காணிப்பில் இருந்த ஒருத்தர் இறந்திருக்கார். இவங்க அசால்ட்டா தற்காலிக மையங்கள் அமைச்சு தடுப்பூசி போடுவோம்னு சொல்றாங்க. திடீர்னு அவசர சிகிச்சை தேவைப்பட்டா என்ன செய்ய முடியும்? ஆகையால் முறையா ஆய்வு செஞ்சுட்டு பொறுமையா தடுப்பூசியை பயன்பாட்டுக்கு கொண்டு வாங்கன்னு சொல்றேன்” என்கிறார்.

நாளுக்கு நாள் அதிகரித்துவரும் கொரோனா தொற்றின் எண்ணிக்கை, தடுப்பூசியை அதிகரிப்பதற்கான தந்திரம் என்று சொல்லப்படுவது பற்றி சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனிடம் பேசினோம், “இதுபோன்ற ஆதாரமற்ற வந்ததிகளுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது. பி.பி.இ கிட் போட்டுக்கொண்டு மருத்துவமனையில் வந்து பார்த்தீர்களானால் இப்படியெல்லாம் கேள்வி கேட்க மாட்டீர்கள்.” என்றார் கோபத்துடன்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.