காடுகளையும் மனிதர்களையும் காக்கும் தேவதைகள்தான் பறவைகள். இந்தப் பறவைகளை போற்றும் வகையில், அழிவின் பிடியில் உள்ள சிட்டுக்குருவிகளை பாதுகாக்க 2010-ஆம் ஆண்டு முதல் உலக சிட்டுக்குருவிகள் தினம் கொண்டாடப்படுகிறது. ஆம், இன்று மார்ச் 20. உலக சிட்டுக்குருவிகள் தினம்.

இந்த தினத்தில் சிட்டுக்குருவிகளை பாதுகாக்கவும், அழிவின் பிடியில் இருந்து இவற்றை காக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக பறவைகள் இன ஆர்வலர் மதிமாறன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து நம்மிடம் அவர் கூறும்போது, “வனங்களில் உள்ள சிட்டுக்குருவிகள் சுமார் 10 முதல் 15 ஆண்டுகள் வரை கூட உயிர் வாழும். ஆனால் தற்போது 3 முதல் 5 ஆண்டுகள் மட்டுமே வாழ முடிகிறது. இதற்கு காரணம்.. செல்போன் கோபுரங்கள், விளை நிலங்களில் ரசாயன உரங்கள் அதிக அளவில் பயன்படுத்துதல் மற்றும் கூரை வீடுகளில் குடியிருந்த இந்த பறவை, கான்கிரீட் வீடுகளுக்கு மக்கள் மாறியபோது வாழ்விடங்களை தொலைத்து இடம்பெயர்ந்தன உள்ளிட்டவை.

image

சிறிய சிட்டுக்குருவிகள் தான் உண்ணும் தானியங்கள், பழங்களை எச்சங்களாக பல்வேறு பகுதிகளில் இறைத்து விட்டு செல்லும்போது அங்கே மரங்களும், சோலைகளும், வனங்களும் உற்பத்தியாகின்றன. இதன் மூலம் இயற்கை காப்பாற்றப்படுவதோடு மரங்கள் அதிகம் வளர்ந்தால் தூய்மையான ஆக்சிஜன் கிடைக்கிறது என்பதை இப்போதுள்ள மாணவர்களுக்கும், பொது மக்களுக்கும் உணர்த்துவது நம் ஒவ்வொருவருடைய கடமையாகும்.

பறவைகளை கடும் வெயில் காலத்தில் இருந்து காப்பாற்ற ஒவ்வொரு வீடுகளிலும் குடிநீர் மற்றும் உணவு தானியங்களைப் பறவைகளுக்கு அளிக்க வேண்டும். மனிதன் வாழ்வதற்கு பறவைகள் எவ்வளவு முக்கியம் என்பதை இளைய தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும்.

பறவைகள் இல்லை என்றால் உலகில் மனிதர்கள் யாரும் வாழ முடியாது. இயற்கையின் சமநிலையும் மாறிவிடும். இதனால் பேராபத்துகள் ஏற்படும்” என்றார் மதிமாறன்.

பறவைகளைப் பாதுகாத்தால் மட்டுமே இந்த உலகை அழிவிலிருந்து காப்பாற்ற முடியும் என்ற ஒற்றை வார்த்தையை உலக சிட்டுக்குருவிகள் தினத்தில் சூளுரைக்க வேண்டும் என்கின்றனர் பறவைகள் ஆர்வலர்கள்.

– என்.ஜான்சன்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.