“இந்தியா – பாகிஸ்தான் இரு நாடுகளும் கடந்த காலத்தை மறந்து முன்னோக்கிச் செல்ல வேண்டிய நேரம் இது” என்று பாதுகாப்பு அமர்வு ஒன்றில் உரையாடும்போது பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் கமர் ஜாவேத் பஜ்வா கூறியிருக்கிறார்.

முன்னதாக நேற்று இதே மாநாட்டில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இந்திய அரசு குறித்து இதேபோன்ற கருத்துக்களை தெரிவித்திருந்தார். அதில், “பாகிஸ்தானுடன் சுமுகமாக செல்வதன் மூலம் இந்தியா பொருளாதார ரீதியாக பயனடைகிறது. ஏனெனில், இந்திய அரசால் பாகிஸ்தான் பிரதேசத்தின் வழியாக வளங்கள் நிறைந்த மத்திய ஆசிய பிராந்தியத்தை நேரடியாக அணுக முடியும். இதில், இந்தியா முதல் படியை எடுத்து வைக்க வேண்டியிருக்கும். இந்தியா அவ்வாறு செய்யாவிட்டால், எங்களால் எதுவும் செய்ய முடியாது. மத்திய ஆசிய பிராந்தியத்திற்கு நேரடி பாதை வழியாக செல்வது இந்தியாவுக்கு பொருளாதார ரீதியாக பயனளிக்கும். மத்திய ஆசியாவில் எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்கள் நிறைந்துள்ளது” என்று இம்ரான் கான் கூறினார்.

இம்ரான் கான் கூறிய மறுநாளே பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் கமர் ஜாவேத் பஜ்வாவும் இந்தியாவை சமாதான பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் தொனியில் பேசியிருக்கிறார்.

“பிராந்திய அமைதி மற்றும் வளர்ச்சிக்கான சாத்தியங்கள் எப்போதுமே பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் பிரச்னைகளாக இருந்து வருகின்றன. ஆனால், தற்போது கடந்த காலத்தை மறந்துவிட்டு, முன்னோக்கிச் செல்ல வேண்டிய நேரம் இது என்று நாங்கள் உணர்கிறோம். எனினும், ஓர் அர்த்தமுள்ள உரையாடலை மேற்கொள்ள வேண்டிய பொறுப்பு, இந்தியாவிடம் இருக்கிறது. பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான சுமுக உறவு, தெற்கு மற்றும் மத்திய ஆசியாவின் பாதைகளை திறக்க உதவும்.

ஆனால், அதற்கு காஷ்மீரில் இந்தியா ஓர் உகந்த சூழலை உருவாக்க வேண்டும். முக்கிய பிரச்னைக்கு தீர்வு காணாமல் உறவுகளை மேம்படுத்துவதற்கான எந்தவொரு முயற்சியும் அரசியல் காரணிகளால் பாதிக்கப்படக்கூடியது. காஷ்மீர் பிரச்னையை அமைதியான வழிமுறைகளின் மூலம் தீர்க்காமல், மேற்கொள்ளப்படும் எந்த செயல்முறையும் எப்போதுமே அரசியல் ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். பரஸ்பர மரியாதை மற்றும் அமைதியான வாழ்வு ஆகிய கொள்கைகளில் பாகிஸ்தான் உறுதியாக இருக்கிறது.

எல்லா திசைகளிலும் அமைதிக்கான கையை நீட்ட வேண்டிய நேரம் இது. ஜம்மு-காஷ்மீர் மக்களின் விருப்பப்படி, நீண்டகால பிரச்னையை கண்ணியமாகவும் அமைதியாகவும் பாகிஸ்தானும் இந்தியாவும் தீர்க்க வேண்டும். இதற்கிடையே, அமைதிக்கான எங்கள் விருப்பத்தை பலவீனத்தின் அடையாளமாக தவறாகப் புரிந்துகொள்ள யாரையும் அல்லது எந்தவொரு நிறுவனத்தையும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம்” என்று அவர் பேசியுள்ளார்.

முன்னதாக, “பயங்கரவாதம், விரோதம் மற்றும் வன்முறை இல்லாத சூழல் ஏற்படும் பட்சத்தில், பாகிஸ்தானுடன் சுமுக உறவுகளை மேற்கொள்ள விரும்புகிறோம். பயங்கரவாதம் மற்றும் விரோதம் இல்லாத சூழலை உருவாக்க வேண்டிய பொறுப்பு, பாகிஸ்தானின் கைகளில் இருக்கிறது. ஒரேநேரத்தில் பேச்சுவார்த்தையும் பயங்கரவாதமும் ஒன்றாக செல்ல முடியாது. இந்தியா மீது பல்வேறு தாக்குதல்களை நடத்துவதற்கு காரணமான பயங்கரவாதக் குழுக்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை பாகிஸ்தான் எடுக்க வேண்டும்” என்று இந்திய அரசு கடந்த மாதம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.