அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த மார்ச் 1-ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அவர் முளகுமூட்டில் உள்ள பள்ளியில் மாணவர்களுடன் கலந்துரையாடி தண்டால் எடுத்த நிகழ்வு வைரலானது. முளகுமூடு பள்ளிக்கு செல்வதற்கு முன்னதாக பரைக்கோடு பகுதியில் ராகுல் சென்று கொண்டிருந்தபோது சில சிறுவர்கள் கையில் காமராஜர் போட்டோ மற்றும் பூச்செண்டுகளுடன் நின்றுகொண்டிருந்தனர்.

அவர்களை பார்த்த ராகுல்காந்தி உடனடியாக காரில் இருந்து இறங்கினார். அந்த சிறுவர்களின் தோள் மீது கை போட்டபடி அவர்களைப்பற்றி விசாரித்தார். அதில் ஒரு சிறுவன் தன் பெயர் ஆன்றனி பெலிக்ஸ் என்றும், ஆறாம் வகுப்பு படிப்பதாகவும் தெரிவித்தான். மற்றொரு சிறுவன் தன் பெயர் பெலிக்ஸ் ஜாண் என்றும் 4-ம் வகுப்பு படிப்பதாகவும் கூறியிருக்கிறான். அருகில் உள்ள டீக்கடைக்கு சிறுவர்களை அழைத்து சென்ற ராகுல்காந்தி இரண்டு மாணவர்களுக்கும் டீ வாங்கிக்கொடுத்து அவர்களிடம் உரையாடினார்.

ராகுல்காந்தி அனுப்பிய ஷூ

மாணவன் ஆன்றணி பெலிக்ஸ், `தனக்கு ஓட்டப்பந்தயத்தில் ஆர்வம் இருப்பதாகவும், ஸ்கூலில் போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகள் வாங்கியுள்ளதாகவும் தெரிவித்தான். மேலும் மராத்தான் போட்டிகளில் கலந்துகொண்ட அனுபவம் இருப்பதாகவும் கூறியிருக்கிறான். ரன்னிங் பயிற்சிக்காக ஷூ வாங்கி தருவதாக கூறிய ராகுல் வேறு உதவி வேண்டுமா என கேட்டுள்ளார். அதற்கு கோச்சர் வேண்டும் என கேட்டுள்ளான் சிறுவன் ஆன்றணி பெலிக்ஸ். அதற்கு ஏற்பாடு செய்வதாக கூறினார் ராகுல்காந்தி.

மற்றொரு சிறுவனான பெலிக்ஸ் ஜாண், தான் விஞ்ஞானி ஆக விரும்புவதாக தெரிவித்துள்ளார். அதற்கு இஸ்ரோ-வை பார்வையிட ஏற்பாடு செய்வதாக ராகுல்காந்தி தெரிவித்துவிட்டுச் சென்றார். இந்த நிலையில் சிறுவன் ஆன்றணி பெலிக்சுக்கு ஷூ வாங்கி அனுப்பியிருக்கிறார் ராகுல்காந்தி. மேலும் மற்றொரு சிறுவனான பெலிக்ஸ் ஜாண் வரும் 17-ம் தேதி திருவனந்தபுரத்தில் உள்ள இஸ்ரோ-வை பார்வையிடவும் ஏற்பாடு செய்துள்ளார் ராகுல்காந்தி.

ராகுல்காந்தியுடன் மாணவன் ஆன்றணி பெலிக்ஸ்

ஷூ கிடைத்த மகிழ்ச்சியில் இருந்த மாணவன் ஆன்றனி பெலிக்ஸ் கூறும்போது, “எனக்கு மும்பையில் இருந்து ஒரு பார்சல் வந்தது. அதை பிரித்து பார்த்தபோது ஸ்போர்ட்ஸ் ஷூ இருந்ததை கண்டு மகிழ்ச்சியடைந்தேன். சர்ப்பிரைசாக ராகுல்காந்தி எனக்காக அனுப்பித்தந்த ஷூ-வை நண்பர்களிடம் காட்டி பெருமைப்பட்டேன். எனக்கு ஷூ அனுப்பித்தந்த ராகுல்காந்திக்கு நன்றி தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளேன்” என்றார்.

ஆன்றணி பெலிக்ஸின் தந்தை ஆன்றணி சேவியர் கூறுகையில், “நான் அழகியமண்டபத்தில் ஜவுளிக்கடை வைத்துள்ளேன். என் மகனுக்கு ஓட்டப்பந்தயத்தில் தீவிர ஆர்வம் உண்டு. அழகியமண்டபம் முதல் சுங்கான்கடை வரை சுமார் 13 கிலோமீட்டர் தூரத்துக்கு ஒருமணி நேரத்தில் ஓடிச்செல்வான். தினமும் என் மகன் ஓடும்போது நான் பின்னால் பைக்கில் செல்லுவேன். அவனது ஆர்வத்தை முறைப்படுத்த சரியான வழிகாட்டி இல்லாமல் இருந்தது. இப்போது ராகுல்காந்தி வழிகாட்டுவார் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார்.

ராகுல்காந்தியுடன் மாணவன் பெலிக்ஸ் ஜாண்

மாணவன் பெலிக்ஸ் ஜாணின் தந்தை பிரைட் ஜாண் கூறுகையில், “நான் டெம்போ டிரைவராக இருக்கிறேன். என் மகன் விஞ்ஞானி ஆகவேண்டும் என ராகுல்காந்தியிடம் கூறியிருந்தான். அவனது ஆசையை நிறைவேற்றும் விதமாக ஐ.எஸ்.ஆர்.ஓ-வை சுற்றிபார்க்க ஏற்பாடு செய்வதாக கூறியிருந்தார் ராகுல்காந்தி. அது சம்பந்தமாக சிலர் எங்களிடம் பேசினர். வரும் 17-ம் தேதி திருவனந்தபுரத்தில் உள்ள ஐ.எஸ்.ஆர்.ஓ-வுக்கு செல்ல ஏற்பாடு செய்துள்ளனர். அதற்காக வரும் 15 கொரோனா டெஸ்ட் எடுக்க உள்ளோம். என் மகனின் லட்சியத்துக்கான படிக்கல்லாக இது இருக்கும்” என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.