மது அருந்தும் பழக்கம் இருப்பதால் கொரோனா தடுப்பூசி மூலம் ஆபத்து ஏற்படுமோ என்று தவறாக அஞ்சி தடுப்பூசி பெற மறுக்க வேண்டாம் என அறிவுறுத்துகிறார் அரசு மருத்துவர் ஃபரூக் அப்துல்லா.

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை 2 கோடியே 9 லட்சத்து 22,344 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், மது அருந்துபவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாமா என்ற சந்தேகம் பலரிடம் நிலவுகிறது. இதுகுறித்து விளக்கமளிக்கிறார் அரசு பொதுநல மருத்துவர் ஃபரூக் அப்துல்லா.

”மது அருந்துபவர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். கொரோனா தடுப்பூசி போடுவதால் மது அருந்துபவர்களுக்கு எந்தவொரு அதிகமான பக்கவிளைவுகளும் ஏற்படுவதாக தகவல்கள் இல்லை. அதனால் மது அருந்துபவர்கள் தாராளமாக கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொள்ளலாம்

image

கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொண்ட பின் மது அருந்துவது கூடாதா?

அப்படி ஒரு கட்டாயமும் இதுவரை அறிவியல்பூர்வ ஆராய்ச்சிகளால் நிரூபணம் ஆகவில்லை. ரஷ்யாவைச் சேர்ந்த சில ஆராய்ச்சியாளர்கள் தடுப்பூசி பெற்றவர்கள் மது அருந்தக்கூடாது என்றும் மது அருந்துவதால் தடுப்பூசி மூலம் கிடைக்கும் எதிர்ப்பு சக்தி குன்றும் நிலை ஏற்படும் வாய்ப்பு உள்ளது என்பதாலேயே இவ்வாறு கூறியுள்ளனர். ஆயினும் சில ஆய்வுகளின்படி என்னவென்றால் மிதமான அளவு மது அருந்துவது தடுப்பூசி மூலம் கிடைக்கும் எதிர்ப்பு சக்தியை அதிகமாக தூண்டும் என்றே முடிவுகள் கிடைத்துள்ளன.

தினமும் மூன்று வேளையும் சதா மது குடித்துக்கொண்டே இருப்பது தடுப்பூசி மூலம் கிடைக்கும் எதிர்ப்பு சக்தியை குறைக்கும் என்று தெரிகிறது. மது அடிமைத்தனம் அறவே தவிர்க்கப்பட வேண்டிய பல தீமைகளை ஒரு சேரக்கொண்டு வரும் ஆபத்தான நோயாகும். மது அருந்துவது நாட்டுக்கும் வீட்டுக்கும் குடும்பத்துக்கும் சுயநலனுக்கும் கேடு விளைவிக்கும் செயலாகும். மது நோயில் இருந்து மக்கள் வெளிவர வேண்டும் என்பது நமது முக்கிய நோக்கம்.

ஆனால் தற்போதைய பெருந்தொற்று காலத்தில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் தடுப்பூசி பெற்றால் கட்டாயம் மது அருந்தக்கூடாது என்ற ஒரு பொய்க்கருத்து பரவி வருகின்றது. இது தடுப்பூசி இயக்கத்திற்கு குந்தகம் விளைவிக்கும். இதனால் பெருந்தொற்று மீண்டும் வீறு கொண்டு பரவி , அதனால் உயிரிழப்புகள் ஏற்படும் வாய்ப்பு உண்டு. எனவே மது அருந்துபவர்கள் கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொள்ளலாம்.

image

தடுப்பூசி பெற்ற அன்று மட்டுமாவது மது அருந்துவதை தவிர்க்கலாம் (இது எனது சொந்த கருத்து). தடுப்பூசி பெற்ற பின் மது அருந்துவதை கட்டாயம் நிறுத்த வேண்டும் என்று அறிவியல் பூர்வமாக எந்த ஆய்வு முடிவுகளும் இல்லை. ஆயினும் தினசரி மூன்று வேளை அதிகமான அளவு மது குடிப்பது, தடுப்பூசியின் மூலம் கிடைக்கும் எதிர்ப்பு சக்தியை மந்தப்படுத்தும். 

மது விரும்பிகள் கொரோனா தடுப்பூசியை புறக்கணிக்காமல் அச்சம் கொள்ளாமல் அதைப் பெற்றுக்கொள்ளுங்கள். மதுவை முழுவதுமாக நிறுத்த முயற்சி செய்யுங்கள். ஆனால் மது அருந்தும் பழக்கம் இருப்பதால் கொரோனா தடுப்பூசி மூலம் ஆபத்து ஏற்படுமோ என்று தவறாக அஞ்சி தடுப்பூசி பெற மறுக்காதீர்கள்” என்கிறார் அவர். 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.